[X] Close
 

இலங்கை கிரிக்கெட்டில் உயர் மட்டம் வரைக்கும் ஊழல்: அர்ஜுனா ரணதுங்கா குற்றச்சாட்டு


ranatunga-about-srilanka-cricket-scandal

அர்ஜுனா ரணதுங்கா

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 30 May, 2018 17:43 pm
  • அ+ அ-

இலங்கை கிரிக்கெட்டில் உயர் மட்டம் வரைக்கும் ஊழல் இருக்கிறது என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுனா ரணதுங்கா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மேட்ச் பிக்சிங் பிரச்சினைகளை சரியாகக் கையாளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை , அல் ஜசீரா தொலைக்காட்சி, மேட்ச் பிக்சிங், கிரிக்கெட் ஊழல் தொடர்பான ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இதில், இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவரும், மைதான பராமரிப்பாளர் ஒருவரும் இணைந்து, களத்தை அவர்கள் விருப்பப்படி மாற்றியமைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியிலும், இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டியிலும் ஸ்பாட் பிக்சிங் செய்யப்பட்டதாகவும் அந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது குறித்து பேசிய இலங்கை முன்னாள் வீரரும், தற்போது அமைச்சராகவும் இருக்கும் ரணதுங்கா, "இந்த ஊழல் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இலங்கையில் உயர் மட்டம் வரைக்கும் இந்த ஊழல் இருக்கிறது. விசாரித்து சிறிய மீனை மட்டும் பிடிப்பார்கள். எப்போதும் போல பெரிய மீன் தப்பித்துவிடும். ஐசிசி-ன் ஊழல் தடுப்புப் பிரிவு ஏமாற்றமளிக்கிறது. 

அவர்களால் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை விசாரிக்க முடியவில்லை என்றால் அவர்கள் இந்த ஊழல் தடுப்புப் பிரிவை வைத்திருக்கக் கூடாது. அல்ஜசீரா ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இலங்கையைச் சேர்ந்தவர்கள், உயர்மட்டத்தின் ஆதரவு இல்லாமல் டெஸ்ட் போட்டியில் பிக்சிங்கில் ஈடுபட்டிருக்க முடியாது. 

ஆனால் இந்த மைதான பரமாரிப்பாளர் தரங்கா இண்டிகா, மாவட்ட அணி பயிற்சியாளர்  தரிந்து மெண்டிஸ் ஆகியோர் சின்ன மீன்கள். உயர்மட்டத்தில் இருப்பவர்களிடம் உடன்படிக்கையின்றி இவர்களால் செயல்பட்டிருக்க முடியாது" என்று ரணதுங்கா கூறியுள்ளார். 

முன்னதாக, இலங்கை கிரிக்கெட் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, அரசியல்வாதியும், தொழிலதிபருமான திலங்கா சுமதிபலா என்பவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதற்கு முன்னரே ஐசிசி விதிகளை மீறி, சுமதிபலா சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ரணதுங்கா குற்றம்சாட்டி, சுமதிபலா அதை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

- பிடிஐ



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close