[X] Close

ராய் மிரட்டல் சதம்; தொடரை வென்றது இங்கிலாந்து: 3-வது முறையாக 300 ரன்களுக்கு மேல் அடித்தும் பாக். நிலை பரிதாபம்


3-300

  • kamadenu
  • Posted: 18 May, 2019 11:13 am
  • அ+ அ-

-போத்திராஜ்

ஜேஸன் ராயின் காட்டி சதம், பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் நாட்டிங்காஹமில் நேற்று நடந்த 4-வது ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கனுக்கு ஒருபோட்டியில் தடை விதிக்கப்பட்டதால் நேற்று கேப்டன் பொறுப்பை ஜோஸ் பட்லர் கவனித்தார்.

வரும் உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியின் ஜேஸன் ராய், பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மோர்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அனைத்து அணிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கப்போவதில் சந்தேகமில்லை.

பாகிஸ்தானுக்கு அணி கடந்த 3 போட்டிகளிலும் 300 ரன்களுக்கு மேல் சேர்த்தும் அதை இங்கிலாந்து அணி எளிதாகி அடைந்து வெற்றி பெற்றுள்ளது. ஆதலால், உலகக் கோப்பைப் போட்டியில் ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் அணிகள் எடுப்பது சாதாரணமாகவே இருக்கும் என நம்பலாம்.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் சேர்த்தது. 341 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சேர்த்து 3 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 7 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் சேர்த்து  3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேஸன் ராயின் ஆட்டம் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. மிகச்சிறப்பான ஆட்டத்தை நேற்று வெளிப்படுத்தினார், அவரின் ஒவ்வொரு ஷாட்களும் மிக நேர்த்தியாக அமைந்திருந்தன.  ஆட்டநாயன் விருதையும் ராய் பெற்றார்.

அணியின் இலக்கை தோள் மீது சுமந்து எளிதாக அடைய முக்கிய காரணமாக அமைந்தார் ராய். 43 பந்துகளில் அரைசதத்தையும், 75 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்து 89 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்து ராய் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடங்கும்.

ஜேஸன் ராய் 27 ரன்கள் சேர்த்திருந்தபோது, அவர் அடித்தபந்தை கேட்ச் பிடிக்க பக்கர் ஜமான் தவறவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்திய ராய் சதம் அடித்து மிக்பெரிய விலை கொடுக்க வைத்துவிட்டார்.

முதல் விக்கெட்டுக்கு ஜேஸன் ராய், வின்ஸ் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். வின்ஸ்43 ரன்களில் வெளியேறினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த ஜோய் ரூட், ராயுடன் சேர்ந்தார். ஜேஸன் ராய் சதம் அடித்து 114 ரன்களில் ஆட்டமிழந்தார். 201 ரன்களுக்கு 2 விக்கெட்டை இங்கிலாந்து அணி இழந்தது.

stokes.jpg 

200 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வலுவாக இருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 15 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ராய் ஆட்டமிழந்தபின், ரூட்(36), ஜோஸ் பட்லர், மொயின் அலி டக்அவுட்டில் இமாத் வாசிமின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர் டென்லி 17 ரன்களில் வெளியேறினார்.

ஆனால், 6-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ், டாம் கரண் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். டாம் கரண் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். பென்  ஸ்டோக்ஸ் 64 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடில் ரஷித்  12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐபிஎல் போட்டியில் சொதப்பலாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் நேற்று பிரமாதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு துணை செய்தார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை மார்க் உட், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இடம் பெற்றும் எதிர்பார்த்த அளவுக்கு பந்துவீசவி்ல்லை. இதுபோன்ற ஆடுகங்களில் பந்துவீச்சாளர்கள் எப்படி பந்துவீசினாலும் எடுபடப்போவதில்லை என்பதை தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது. டாம் கரன் 10 ஓவர்கள் வீசி 75 ரன்கள் கொடுத்தாலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கையை  ஏற்படுத்தினார்.

பாகிஸ்தான் அணியில் கடந்த போட்டியில் சதம் அடித்த இமாம் உல் ஹக், நேற்றைய ஆட்டத்தில் மார்க் உட் பந்துவீச்சில் முழங்கையில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். உலகக் கோப்பைப் போட்டியில் அவர் பங்கேற்பது கடினம் எனத் தெரிகிறது. ஆனால், சூழலை உணர்ந்து பேட் செய்த பாபர் ஆசம் 9-வது சதம் அடித்தார். 112 பந்துகளில் 115 ரன்கள் சேர்த்து பாபம் ஆசம் ஆட்டமிழந்தார்.

babr.jpg 

அவருக்கு துணையாக ஆடிய பக்கர் ஜமான்(57), முகமது ஹபீஸ்(59) ரன்கள் சேர்த்தனர். ஹபீஸுக்கு இது 37-வது அரைசதமாகும்.அனுபவ வீரர் சோயிப் மாலிக் 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஹிட் விக்கெட் முறையில் மார்க் உட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆப்சைட் விலகிச் செல்லும் பந்தை அடிக்கும் அனுபவ பேட்ஸ்மேன் இப்படியா பேட்செய்வது என்று காலாய்க்கும் அளவுக்கு ஸ்டெம்பை பேட்டால் பதம் பார்த்து விட்டார் சோயிப் மாலிக்.பாகிஸ்தான் தரப்பில் இமாத் வாசிம், முகமது ஹஸ்னைன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close