[X] Close

ஜானி பேர்ஸ்டோ அதிரடியில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:33 am
  • அ+ அ-

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி சதம் விளாச 359 ரன்கள் இலக்கை எளிதாக துரத்தி வெற்றி கண்டது இங்கிலாந்து அணி.

பிரிஸ்டல் நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான இமாம்-உல்-ஹக் 131 பந்துகளில், ஒரு சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 151 ரன்கள் விளாசினார். ஆசிப் அலி 52, ஹாரிஸ் சோகைல் 41 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4, டாம் கரண் 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

359 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய் ஆகியோரது அதிரடியால் இலக்கை எளிதாக துரத்தியது. ஜேசன் ராய் 55 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்த நிலையில் பாஹீம் அஷ்ரப் பந்திலும், ஜானி பேர்ஸ்டோ 93 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் விளாசிய நிலையில் ஜூனைத்கான் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 17.3 ஓவர்களில் 159 ரன்களை விளாசியிருந்தது. இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 43 பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களில் வெளியேறினர். மொயின் அலி 36 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், கேப்டன் மோர்கன் 12 பந்துகளில், 17 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

வழக்கமாக இங்கிலாந்து அணி டாஸ்வென்றால் முதலில் பேட் செய்வதையே விரும்பும். ஆனால், உலகக்கோப்பை நெருங்கும் வேளையில் புதிய அனுபவத்துக்காக கேப்டன் மோர்கன் சேஸிங் செய்ய விரும்பி அதில் வெற்றி கண்டுள்ளார். இங்கிலாந்து அணி சேஸிங் செய்ததில் இரண்டாவது அதிகபட்சம் இதுவாகும்.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில் 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close