[X] Close

1983 உலகக்கோப்பையில் கபில்தேவின் சாகச இன்னிங்ஸ் சாதனையை 36 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்த பாக்.வீரர் இமாம் உல் ஹக்


1983-36

  • kamadenu
  • Posted: 15 May, 2019 18:46 pm
  • அ+ அ-

1983 உலகக்கோப்பை என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது கபில்தேவ் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக எடுத்த 175 நாட் அவுட் ‘காவிய, சாகச இன்னிங்ஸ்’தான் நினைவுக்கு வரும்.

 

அந்தச் சாதனையை செய்த போது அப்போதைய இந்திய கேப்டன் கபில்தேவுக்கு வயது 24 தான்.  இங்கிலாந்தில் 150க்கும் அதிகமாக ஒருநாள் போட்டியில் ரன்கள் எடுத்த வகையில் கபிலின் அந்த 175 ரன்கள்தான் இளம் வீரர் ஒருவரின் சாதனையாக இருந்து வந்தது.

 

டர்ன்பிரிட்ஜ் வெல்ஸில் அன்று நடைபெற்ற அந்தப் போட்டியில் ஜிம்பாப்வே பவுலர்களுக்கு பந்துகள் பேய்த்தனமாக ஸ்விங் ஆக இந்திய அணி 9/4 என்ற நிலையில் தடுமாறியது, கபில் இறங்கி 2 பவுண்டரிகளை அடித்த போது 17 ரன்களானது ஆனால் அப்போது 5வது விக்கெட் விழுந்தது. அதன் பிறகு கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத இன்னிங்ஸை ஆடிய கபில்தேவ் 175 ரன்களை எடுத்தார், அதில் 17 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடங்கும். தோற்றிருக்க வேண்டிய போட்டியை வெற்றி பெற்று கொடுத்த தனிநபர் சாகசமாகும் அது. ஜிம்பாப்வே இந்திய அணி எடுத்த 266 ரன்களுக்கு நெருக்கமாக வந்தனர். இப்போதைய இங்கிலாந்து ஆல்ரவுண்டர்களான டாம் கரன், சாம் கரண் ஆகியோரின் தந்தை கெவின் கரண் 72 ரன்களை விளாசி இந்திய அணியை அச்சுறுத்தினார், ஆனால் மதன்லால் ஒரு ஓவரில் போட்டியை முடித்து வைத்து வெற்றி பெற்று கொடுத்தது கபில், இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற ஒரு மகா இன்னிங்ஸ் ஆடப்பட்ட போட்டியாகும் அது.

 

kapildev.jpg 

 

இந்நிலையில் நேற்று இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் ஆடிய ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீர்ர் இமாம் உல் ஹக் 131 பந்துகளில் 151 ரன்களை எடுத்தார். இமாம் உல் ஹக்கிற்கு வயது 23தான். இனி இங்கிலாந்தில் 150+ ரன்களை எடுத்த இளம் வீரர் யார் என்றால் அது இமாம் உல் ஹக்தான், கபில் சாதனை முறியடிக்கப்பட்டது.

 

பாகிஸ்தான் 359 ரன்களை எடுத்தாலும் பிற்பாடு களமிறங்கிய இங்கிலாந்து அணி பிரமிப்பூட்டும் அதிரடியில் 31 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசாத்திய வெற்றி பெற்றது.  ஜேசன் ராய் அரைசதத்தை அவசரகதியில் எடுக்க ஜானிபேர்ஸ்டோ சதம் விளாசினார். 38 ஓவர்களிலேயே 300 ரன்கள் வந்து விட்டது. 1996 உலகக்கோப்பைக் காலக்கட்டங்களில் இலங்கை அணி எப்படி இருந்ததோ அதே போல் தற்போது இங்கிலாந்து உள்ளது. அப்போது ஜெயசூரியா, கலுவிதரன, அரவிந்த டி சில்வா, குருசிங்கா என்றால் தற்போது இங்கிலாந்தில் பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், ரூட், இயன் மோர்கன், ஸ்டோக்ஸ் என்று சரவெடி வீரர்களைக் கொண்டுள்ளது.

 

ஆகவே இமாம் உல் ஹக் எந்த விதத்திலும் ஈடுசெய்ய முடியாத கபிலின் சாதனையை தன் 151 ரன்களினால் முறியடித்ததே பாகிஸ்தானின் ஆறுதல் செய்தியாகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close