[X] Close

'ஏதும் பேசவில்லை, தோனி மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன்': குல்தீப் யாதவ் மறுப்பு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 11:59 am
  • அ+ அ-

தோனி அளிக்கும் டிப்ஸ் பல நேரங்களில் தவறாக இருந்துள்ளது என்று செய்தி வெளியான நிலையில், அந்த செய்தியை மறுத்துள்ள குல்தீப் யாதவ் அவ்வாறு ஏதும் பேசவில்லை, தோனி மீது அதிகமான மதிப்பு வைத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர் தோனி களத்தில் அவ்வப்போது சுழற்பந்து வீச்சாளர்களிடம் எவ்வாறு பந்து வீசுவது, விக்கெட்டுகளை எவ்வாறு வீழ்த்துவது என்பது குறித்து டிப்ஸ் அளிப்பார்.

அதைக் கேட்டு பந்து வீசும் போது விக்கெட்டுகள் விழுந்துவிடும். இதைப் பெருமையாக பல பந்து வீச்சாளர்கள் தோனியின் அறிவுரையால் விக்கெட் வீழ்த்தினோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் சியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த குல்தீப் யாதவிடம், தோனியின் டிப்ஸ் தங்களின் பந்துவீச்சுக்கு உதவியதா என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் கூறுகையில், "தோனி எனக்கு அளித்த டிப்ஸ் பெரும்பாலும் தப்பாகத்தான் முடிந்திருக்கிறது. அவர் சொல்வதுபோல் சில நேரங்களில் பந்துவீசி அது நடக்காமல் போய்விடும். ஆனால், இது குறித்து தோனியிடம் சென்று நீங்கள் சொன்னதுபோன்று பந்துவீசினேன்; நடக்கவில்லை என்று கேட்கக்கூட முடியாது.

அதுமட்டுமல்லாமல், தோனி வீரர்கள் யாருடனும் அதிகமாகப் பேசக்கூட மாட்டார். தேவை ஏற்பட்டால் மட்டுமே வந்து பேசுவார். அதிலும் ஓவர்களுக்கு இடையேதான் வந்து ஏதாவது சொல்வார். அதிலும் அந்த நேரத்தில் முக்கியமான விஷயத்தை, டிப்ஸை பந்து வீச்சாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் வந்து பேசுவார்" எனத் தெரிவித்தார். இதை குல்தீப் யாதவ் நகைச்சுவையாக தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

ஆனால், தோனி குறித்து குல்தீப் யாதவ் கிண்டலாகப் பேசிய பேச்சுகூட சமூக ஊடகங்களில் வைரலாகி கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், குல்தீப் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி குறித்து ஏதும் பேசவில்லை என்று திடீர் பல்டி அடித்துள்ளார்.

kuldepp.jpg 

 இன்ஸ்ட்கிராமில் குல்தீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்தியில், " எந்த காரணமும் இன்றி வதந்தியையை விரும்பும் நமது ஊடங்கள் புதிதாக ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த சர்ச்சையின் மீது அதிகமான கவனத்தை செலுத்தி சிலர் அதிவேகமாக அதை பரப்பி வருகின்றனர்.

அவ்வாறு பரப்பும் அந்த செய்தி முற்றிலும் பொய்யானது. நான் யார் குறித்தும் எந்தவிதமான முறையற்ற பேட்டியும், கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் மகி பாய்(தோனி) மீது அதிகமான மதிப்பு வைத்திருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close