[X] Close

தோனிக்கு வீசிய ‘அவுட் ஸ்விங்கர்’ - ரசித்த ஜாகீர் கான் - பும்ரா ருசிகரம்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 19:39 pm
  • அ+ அ-

2019 ஐபிஎல் இறுதிப் போட்டியின் பரபரப்பான தருணங்களில் வெற்றியை பும்ராவும் மலிங்காவும் தீர்மானிக்க மும்பை இந்தியன்ஸ் கோப்பையை சிஎஸ்கேவிடமிருந்து பறித்தது.

 

4 ஓவர்கள் வீசிய பும்ரா 14 ரன்களையே கொடுத்தார். இதில் இவரை ஒரு பவுண்டரி கூட சிஎஸ்கேவால் அடிக்க முடியவில்லை. மேலும் இதில் 13 பந்துகளில் ஒரு ரன் கூட வராத டாட்பால்களாக அமைந்தது.

 

இந்நிலையில் இவரைப்பற்றி சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “நான் கூறுவதை ஆவணப்படுத்த விரும்புகிறேன், இப்போதைக்கு உலகின் தலை சிறந்த பவுலர் பும்ராதான். இன்னும் அவரது சிறந்தப் பந்து வீச்சு வெளிவரவில்லை” என்றார்.

 

ஐபிஎல் தொடரில் 60 ஓவர்கள் வீசிய பவுலர்களில் ரஷீத் கானின் சிக்கன விகிதம் ஓவருக்கு 6.28, பும்ராவின் சிக்கன விகிதம் 6.63.

 

இந்நிலையில் ஜாகீர் கான், பும்ராவைப் பற்றி கூறும்போது,  “தைரியமானவர் புதிய திட்டங்களில் திருப்திகரமான பதில் வரும் வரை விடமாட்டார். ஆனால் பவுலிங் பற்றி பும்ராவிடம் பேசினால் அது மிகச்சிறந்த உரையாடலாக அமையும்” என்றார்.

 

இது போன்ற உரையாடல்களில் ஒன்றுதான் பும்ராவை ஜாகீர் கான் அவுட் ஸ்விங்கர்களை அதிகமாக வீசச் சொன்ன உரையாடலானது.  இதனை தோனிக்குச் செய்தார் பும்ரா. 3 பந்துகள்தான் தோனிக்கு வீசினார் பும்ரா, அதில் ஒன்று அவுட் ஸ்விங்கர். அதாவது பந்து ஒரு கோணத்தில் உள்ளே வந்து பிட்ச் ஆகி வெளியே ஸ்விங் ஆனது, தோனி பீட் ஆனார்.

 

இது பற்றி பும்ரா கூறும்போது, “எப்போதும் ஜாகீர் என் பின்னாலேயே இருந்து கொண்டு அவுட்ஸ்விங் வீசு, அவுட் ஸ்விங் வீசு என்று கூறிக்கொண்டே இருப்பார். ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே அவர் இதனை வலியுறுத்தி வந்தார்.  நான் அவரிடம் வீசுகிறேன் என்று மட்டும்தான் கூறுவேன்.  அவர் விடாமல் ‘அடிக்கடி அவுட் ஸ்விங்கர் வீச வேண்டும் என்று வற்புறுத்தினார். தோனிக்கு வீசிய அவுட்ஸ்விங்கரில் ஜாகீர் கானுக்குத்தான் மிக்க மகிழ்ச்சி” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close