[X] Close

தோனி கொடுக்கிற 'டிப்ஸ்' பெரும்பாலும் தவறுதான் : குல்தீப் யாதவ் திடீர் விமர்சனம்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 11:54 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

இன்றைய நவீன கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த கேப்டனாக இருந்தவர், பல்வேறு உத்திகளைப் புகுத்தும் வீரர் என்று புகழக்கூடிய தோனியை, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் விமர்சித்துள்ளார்.

விரைவில் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் குல்தீப் யாதவும், தோனியும் இணைந்து விளையாடும் சூழலில் குல்தீப் இவ்வாறு விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தாலும் தோனி, களத்தில் கேப்டன் விராட் கோலிக்கும், மற்ற பந்து வீச்சாளர்களுக்கும் அவ்வப்போது ஆலோசனை வழங்குவார். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களிடம் எவ்வாறு பந்து வீசுவது, விக்கெட்டுகளை எவ்வாறு வீழ்த்துவது குறித்து டிப்ஸ் அளிப்பார்.

அதைக் கேட்டு  பந்துவீசும் போது விக்கெட்டுகள் விழுந்துவிடும். இதைப் பெருமையாக பல பந்து வீச்சாளர்கள் தோனியின் அறிவுரையால் விக்கெட் வீழ்த்தினோம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் குல்தீப் யாதவ், தோனியை முதல் முறையாக விமர்சித்துள்ளார்.

மும்பையில் சியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த குல்தீப் யாதவிடம், தோனியின் டிப்ஸ் தங்களின் பந்துவீச்சுக்கு உதவியதா என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் கூறுகையில், "தோனி எனக்கு அளித்த டிப்ஸ் பெரும்பாலும் தப்பாகத்தான் முடிந்திருக்கிறது. அவர் சொல்வதுபோல் சில நேரங்களில் பந்துவீசி அது நடக்காமல் போய்விடும். ஆனால், இது குறித்து தோனியிடம் சென்று நீங்கள் சொன்னதுபோன்று பந்துவீசினேன்; நடக்கவில்லை என்று கேட்கக்கூட முடியாது.

kuldeep-yadav-ms-dhon.jpg 

அதுமட்டுமல்லாமல், தோனி வீரர்கள் யாருடனும் அதிகமாகப் பேசக்கூட மாட்டார். தேவை ஏற்பட்டால் மட்டுமே வந்து பேசுவார். அதிலும் ஓவர்களுக்கு இடையேதான் வந்து ஏதாவது சொல்வார், அதிலும் அந்த நேரத்தில் முக்கியமான விஷயத்தை, டிப்ஸை பந்து வீச்சாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் வந்து பேசுவார்" எனத் தெரிவித்தார்.

உலகக் கோப்பைப்  போட்டியில் இருவரும் இந்திய அணியில் விளையாட இருக்கும் நிலையில், ஒரே ஓய்வறையைப் பகிர்ந்து கொள்ள இருக்கும்போது இவ்வாறு தோனி குறித்து குல்தீப் யாதவ் விமர்சித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய அணிக்காக ஐசிசி டி20 உலகக் கோப்பையை 2007-ம் ஆண்டும், 2011-ம் ஆண்டில் உலகக் கோப்பையையும் தோனி தலைமையில்தான் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, 2017-ம் ஆண்டில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கான கேப்டன் பொறுப்பையும் உதறினார். தற்போது விராட் கோலி தலைமையில் தோனி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close