[X] Close

வயசாகிடுச்சு; களையெடுப்பு அவசியம்: சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெம்மிங் சூசகம்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 17:34 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

வயதான வீரர்களைக் கொண்டது சிஎஸ்கே அணி என்பதைப் புரிந்துகொண்டோம். அடுத்த சீசனில் அணியை மாற்றியமைப்பது அவசியம் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் தெரிவித்தார்.

12-வது ஐபிஎல் டி20 போட்டி நடந்து முடிந்துள்ளது. ஹைதராபாத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை  ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

ஐபிஎல் அணிகளில் 'ஃபாதர் ஆர்மி' என்று சிஎஸ்கே அணியைச் செல்லமாக அழைக்கிறார்கள். அணியில் உள்ள வீரர்கள் பலரும் 35 வயதுக்கு மேல், தங்கள் குழந்தைகளுடன் களத்துக்கு வருவதால் இப்படி அழைக்கிறார்கள்.

ஓல்டுமேன் டீம் என்றும் கிண்டல் செய்வதை ஒப்புக்கொள்ளும் கேப்டன் தோனி, "நாங்கள் வயதானவர்கள்தான், சராசரியாக 34 வயதாகி இருந்தாலும் அனுபவம் நிறைந்தவர்கள், ஸ்மார்ட்டாக விளையாடக்கூடியவர்கள்" என்று சமாளித்து வருகிறார்.

ஆனால், இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் அனுபவம்  மிகுந்த வீர்ர்கள் குறிப்பாக நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர். லீக் போட்டி முதல் இறுதிப் போட்டி வரை ராயுடு, ரெய்னா, வாட்ஸன், டூப்பிளசிஸ், ஜாதவ், ஜடேஜா ஆகியோர் ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே சிறந்த ஆட்டத்தை வெளிக்காட்டினார்கள். கேப்டன் தோனி மட்டுமே நிலையாக தனது பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார்.

இறுதிப் போட்டியில் கூட ராயுடு, ரெய்னா, டூப்பிளசிஸ் நிலைத்து ஆடவில்லை என்பது பேட்டிங்கில் வீரர்கள் ஃபார்மில் இல்லை என்பதைக் காட்டியது. இதை தோனியும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பின், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் பேட்டி அளித்தபோது கூறியதாவது:

''சிஎஸ்கே அணி வயதான வீரர்களைக் கொண்ட அணி என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறோம். வீரர்கள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள சிறிது காலஅவகாசம் கொடுத்துள்ளோம்.

ஒரு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அடுத்த சீசனில் இறுதிப் போட்டிவரை சென்றால், இரு ஆண்டுகள் சிறப்பான ஆண்டுகளாக இருந்தன என கூற முடியுமா?

கேப்டன் தோனி உலகக்கோப்பை போட்டி முடிந்து திரும்பி வந்தவுடன் அடுத்த சீசனுக்கான அணியைக் கட்டமைக்கும் பணி தொடங்கிவிடும். அடுத்த சீசனுக்கான அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து, மிக கவனமாக அணி கட்டமைக்கப்படும். சரியான கலவையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

stephen.jpg 

இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு கடினமாகத்தான் இருந்தது. சூழல்களை எளிதாக உணரமுடியாத வகையிலும், விளையாடுவதற்கும் கடினமாகவும் இருந்தது. எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறிது பேட்டிங்கில் பயிற்சி எடுத்திருக்கலாம்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு போட்டியில் ஸ்கோர் செய்யவில்லை. நிச்சயமாக இந்த சீசனில் பல பலவீனங்களை எதிர்கொண்டோம். அதைச் சரி செய்ய அதிகமாகப் பணியாற்ற வேண்டும்.

தோனியைப் பொறுத்தவரை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே நிலைத்தன்மையுடன் பேட் செய்து வருகிறார். மிகவும் அமைதியாக இருந்து வழக்கம் போல் மற்ற வீரர்களை வித்தியாசமான கோணத்தில் இயக்குகிறார்.

இந்தப் போட்டியில் தோனி ஆட்டமிழந்தது இரு விஷயங்களை எங்களுக்கு உணர்த்தியது. முதலாவது எங்களின் முயற்சிக்குத் தடை போடப்பட்டது. அடுத்ததாக, எதிரணிகளின் கை ஓங்கியது. தோனியின் விக்கெட் இழப்பு எதிரணிக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.

வாட்ஸன் கடைசி வரை தன்னால் முடிந்த ஷாட்களை அடித்து வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். ஆனால், அனுபவம் நிறைந்த மலிங்காவின் பந்துவீச்சு அனைத்தையும் மாற்றிவிட்டது''.

இவ்வாறு பிளெம்மிங் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close