[X] Close

ஆட்டத்தின் திருப்புமுனையான தோனி ரன் அவுட்: சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்கு வழங்கப்பட்டதா?


  • kamadenu
  • Posted: 13 May, 2019 15:00 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

கிரிக்கெட்டில் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை இருந்தபோதிலும், அது நேற்றைய ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி ரன் அவுட் ஆகியபோது, ஏன் கடைபிடிக்கப்படவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

12-வது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது.

mi1.jpg 

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு149 ரன்கள் சேர்த்தது. 150 ரன்கள் இலக்காக வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் சிஎஸ்கே அணி இழந்து வந்தது. டூப்பிளசிஸ் (26), ரெய்னா (8), ராயுடு (1) என ஆட்டமிழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு வாட்ஸனுடன் , தோனி சேர்ந்து நிதானமாக ஆடிவந்தார்.

ஹர்திக் பாண்டியா வீசிய 13-வது ஓவரின் 4-வது பந்தில் வாட்ஸன் அடித்து ரன் ஓடினார். முதல் ரன்னோடு நிறுத்தி இருக்கலாம், ஆனால், ரன் தேவையின் நெருக்கடி காரணமாக 2-வது ரன்னுக்கு தோனி முயற்சித்தார். ஆனால், இஷான் கிசான் பந்தை சரியாக ஸ்டெம்ப்பில் எறிந்து தோனியை ரன் அவுட் செய்தார். இந்த ரன் அவுட்தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

அதேசமயம், இந்த ரன் அவுட்தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருளாகவும் மாறி இருக்கிறது. ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தக்கூடிய மிகவும் முக்கியமான விக்கெட் என்பதால், ரன் அவுட் குறித்த முடிவு மூன்றாவது நடுவருக்குத் தரப்பட்டது.

மூன்றாவது நடுவர் நிஜல் லாங் மிகவும் கவனமாக இந்த ரன் அவுட்டைப் பரிசீலித்தார். ஒரு கேமராவில் தோனி எல்லைக் கோட்டைத் தொடுவது போலவும், மற்றொரு கேமராவில் தோனி எல்லைக் கோட்டுக்கு அருகே பேட்டை வைப்பதும் போன்று இருந்தது. பல கோணங்களிலும் இந்த ரன் அவுட் குறித்து மூன்றாவது நடுவர் ஆய்வு செய்தார்.

ஏறக்குறைய 5 நிமிடங்கள் வரை ரன் அவுட்டை மூன்றாவது நடுவர் தீவிரமாக பல்வேறு கேமரா கோணங்களில் ஆய்வு செய்தார். பேட்ஸ்மேன் எல்லைக் கோட்டைத் தொடுவது ஒரு கோணத்தில் தெரிந்த பின்பும், மற்றொரு கோணத்தில் தொடுவது உறுதியாகாமல் இருந்தது. இதனால் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு வழங்காமல் மூன்றாவது நடுவர் அவுட் வழங்கினார்.

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனுக்கு இருப்பது ஒரு வாய்ப்பு மட்டுமே. பேட்ஸ்மேன் ஆட்டமிழந்துவிட்டதாக அறிவித்துவிட்டால் மீண்டும் களத்துக்குள் வரமுடியாது.

drunout.PNG 

ஆனால், பந்துவீச்சாளரைப் பொறுத்தவரை, அந்தப் பந்தில் தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால்கூட அடுத்த பந்தில் விக்கெட்டை வீழ்த்த முடியும். ஆகவே பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு பரந்துள்ளது. ஆனால் பேட்ஸ்மேனுக்கு ஒருமுறைதான் வாய்ப்பு என்பதால், சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்குத்தான் வழங்க வேண்டும் என்பது விதியாகும்.

பல சர்வதேசப் போட்டிகளிலும் சிக்கலான ரன் அவுட்களில் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்கே சாதகமாக வழங்கப்பட்டுள்ள தருணங்கள் உண்டு. அந்த வகையில் நேற்று தோனிக்கு நேர்ந்த ரன் அவுட் ஒருபுறம் ரன் அவுட்டாகவும், மற்றொரு கோணத்தில் ரன் அவுட் சந்தேகத்துக்கு இடமாக இருந்ததால், சந்தேகத்தின் பலன் கருதி ரன் அவுட் வழங்கப்படாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக மூன்றாவது நடுவர் ரன் அவுட் வழங்கியது சிஎஸ்கே ரசிகர்களை மத்தியில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தோனியின் இந்த ரன் அவுட்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஒருவேளை தோனிக்கு இந்த ரன் அவுட் வழங்காமல் இருந்திருந்தால், நேற்று ஆட்டத்தின் முடிவு தலைகீழாக முடிந்திருக்கும். சிஎஸ்கே 4-வது முறையாக கோப்பையை வென்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close