[X] Close

நாங்க மட்டுமல்ல மும்பையும் தவறு செய்தார்கள்; கோப்பையை மாற்றிக்கொண்டோம் : தோனி 'கூல்' பேட்டி


  • kamadenu
  • Posted: 13 May, 2019 12:02 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

12-வது ஐபிஎல் சீசனில் நாங்கள் இருவருமே(மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே) அதிகமான தவறுகள் செய்தோம். ஆனால், எங்களைக் காட்டிலும் ஒரு தவறு குறைவாக செய்து கோப்பையை வென்றுவிட்டார்கள், கோப்பையை மாற்றிக்கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூலாக தெரிவித்தார்.

12-வது ஐபிஎல் சீசன் சாம்பியன் பட்டத்தை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாகக் கைப்பற்றியது. ஹைதராபாத்தில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு148 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.

dd.jpg 

போட்டி முடிந்தபின் சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த சீசனில் நல்லவிதமான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடினோம் என்று நினைக்கவில்லை. ஆனால், அணியாகப் பொறுத்தவரை இது எங்களுக்கு நல்ல சீசன்தான்.  ஆனால், சற்றுபின்னோக்கி அணியின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, எவ்வாறு சிரமப்பட்டு நாங்கள் இறுதிப்போட்டிக்குள் வந்தோம் என்பதை விவாதிப்பது அவசியம். நல்லவிதமான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடி இறுதிப்போட்டிக்கு வந்தோம் என்று நினைக்கவில்லை. ஏராளமான தவறுகளை எங்கள் அணியில் உள்ள வீரர்கள் செய்தார்கள். குறிப்பாக நடுவரிசையில் களமிறங்கிய வீரர்கள் பேட்டிங் மிகவும் மோசம். இந்த சீசன் முழுவதும் நடுவரிசை பேட்டிங் கைகொடுக்கவில்லை. இருப்பினும் ஓரளவுக்கு சமாளித்து பேட் செய்துவிட்டோம்.

இந்த போட்டியில் வெற்றியை ஒரு ரன்னில் நழுவவிட்டது எனக்கு வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. இந்த போட்டியிலாவது நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். ஏனென்றால் இது ஐபிஎல் இறுதிப்போட்டி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், நாங்கள் மட்டுமல்ல, மும்பை இந்தியன்ஸ் அணியினர் ஆடிய ஆட்டம் கூட சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. எங்களிடம் இருக்கும் கோப்பையை, இருதரப்பினரும் மாற்றிக்கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.

இரு அணிகளும் ஏராளமான தவறுகளைச் செய்தோம். மும்பை அணியும் நாங்கள் செய்த தவறுகளைச் செய்தார்கள். ஆனால், இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி எங்களைக் காட்டிலும், மற்ற அணிகளைக் காட்டிலும் ஒரு தவறு குறைவாகச் செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். மொத்தத்தில் தவறுகுறைவாகச் செய்துள்ளார்கள்.

நல்லவிதமான இறுதிப்போட்டியாக இது இருந்தது என நினைக்கிறேன். கடைசிப்பந்தில் நாங்கள் எதிர்பாராத விஷயம் நடந்துவிட்டது, எங்களால் சிறப்பாக விளையாடமுடியவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நாங்கள் எங்கள் அணியின் செயல்பாட்டை சற்றுப் பின்னோக்கி ஆய்வு செய்வது அவசியம். அடுத்த சீசனில் இன்னும் திறமையாக, முன்னேற்றத்துடன் வருவோம்.

பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். இந்த ஆடுகளம் 150 ரன்களுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்யக்கூடியது. ஆனால், 149 ரன்களுக்குள் சுருட்டினர் எங்கள் பந்துவீச்சாளர்கள். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி, தேவையான போதெல்லாம் விக்கெட்டுகளை எடுத்தனர், சிறப்பாகவே செயல்பட்டனர். பந்துவீச்சாளர்கள் எப்போதெல்லாம் எதிரணியை குறைந்த ஸ்கோர்களில் சுருட்டினார்களோ அப்போதெல்லாம் எங்களுக்கு சேஸிங் செய்வது எளிதாக இருந்தது.

இந்த சீசனில் நாங்கள் நியாயமாக விளையாடினோம் என்று என்று நினைக்கிறேன். அடுத்த சீசனில் நிலையான ஆட்டத்துடன் களத்துக்குவருவோம், நாக் அவுட் சுற்றுக்குள் செல்ல முயற்சிப்போம்.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

அப்போது வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில், " நன்றாகப் பேசினீர்கள், அடுத்த சீசனில் உங்களைச் சந்திக்கிறோம். சந்திக்கலாமா" என்று கேட்டார். அதற்கு தோனி பதில் அளிக்கையில், " நம்பிக்கையுடன் பார்க்கலாம்" எனத் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close