[X] Close

4-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்: கடைசிப்பந்தில் ஆட்டத்தை மாற்றிய மலிங்கா: சிஎஸ்கே போராடி தோல்வி


4

  • kamadenu
  • Posted: 13 May, 2019 00:23 am
  • அ+ அ-

-போத்திராஜ்

12-வது ஐபிஎல் சாம்பியனாக மும்பை இந்தியன்ஸ் அணி மகுடம் சூடி 4-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

பும்ரா, ராகுல் சாஹரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, மலிங்காவின் கதிகலங்க வைக்கும் கடைப்பந்து யார்கர் ஆகியவற்றால் ஹைதராபாத்தில் நடந்த 12-வது ஐபிஎல் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை ஒரு ரன்னில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

ரூ.28 கோடி பரிசு

வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.28 கோடி பரிசும் கோப்பையும், 2-வது இடம் பெற்ற சிஎஸ்கே அணிக்கு ரூ. 14 கோடி பரிசும் வழங்கப்பட்டது.

இதன் மூலம் ஐபிஎல் போட்டித் தொடரில் 4-வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. 150 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு148 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே அணியின் பக்கம் ஆட்டம் சென்ற நிலையில், தோனியின் ரன் அவுட், வாட்ஸனின் கேட்ச் ஆகியவைதான்  ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி மும்பை அணி வெற்றியை வசமாக்க தூண்டுகோலாக அமைந்தது.

வெற்றிக்கேப்டன் ரோஹித்

மும்பை இந்தியன்ஸ்  இதற்கு முன் 2013, 2015, 2017–ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்த நிலையில், தற்போது 2019-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி 4முறை பட்டம் வென்ற பெருமையைப் பெற்றது.  ரோஹித் சர்மா இதுவரை 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார், மேலும், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு கோப்பையை வென்றபோது அந்த அணியிலும் ரோஹித் சர்மா இடம் பெற்றுள்ளார்.

சென்னை அணி 10–வது முறையாக இந்த போட்டியில் களம் கண்டு அதில் 8–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடித்து வைத்தது தோல்வி அடைந்தது.  சாதனை படைத்து இருக்கிறது. மும்பை அணி 6–வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடி வெற்றி பெற்றது.

இறுதி ஆட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடினாலும், மும்பை அணிக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களிலும் 37 ரன்கள் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அத்துடன் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்திலும் மும்பையிடம் வீழ்ந்தது. இப்போது இறுதிப்போட்டியிலும் வீழ்ந்து இந்த சீசனில் மும்பையை அணியை வீழ்த்த முடியாத நிலைக்கு சிஎஸ்கே அணி ஆளாகியது. .

ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் சென்னை, மும்பை அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை அணி 17 முறையாக சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.

குறிப்பாக இறுதிப்போட்டியில் இரு அணிகளும் 4 முறையாக இப்போது மோதின. இதில் 2010, 2013-ம் ஆண்டில் சிஎஸ்கே அணி வென்ற நிலையில், 2015, 2019-ம் ஆண்டில் மும்பை அணி வென்றுள்ளது

ஜொலித்த மும்பை

மும்பை அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார்யாதவ், ஹர்திக், குர்னால் பாண்டியா இந்த ஆட்டத்தில் சொதப்பினாலும், பொலார்ட் சேர்த்த 41 ரன்கள் ஆட்டத்துக்கு முக்கியமாக அமைந்தது.

பந்துவீச்சில் பும்ரா, ராகுல் சாஹர், மெக்லஹன் ஆகியோர் சிஎஸ்கே அணிக்கு தொடக்கத்தில் இருந்தே கடும் நெருக்கடி அளித்தனர். அதிலும் பும்ரா, ராகுல் சாஹர் தலா 4 ஓவர்கள் வீசிய 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். மலிங்கா 4 ஓவர்கள் வீசி 49 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் கடைசி ஓவரை கலக்கலாக வீசி வெற்றிக்கு துருப்புச்சீட்டாக மாறினார்.

mm.jpg 

சொதப்பிய பேட்ஸ்மேன்கள்

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான டூப்பிளசிஸ், ரெய்னா, ராயுடு, தோனி ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தது மிகப்பெரிய பின்னடைவாகும். லீக் ஆட்டங்கள் முதல் தகுதிச்சுற்றுவரை பவர்ப்ளேயில் அதிகமான விக்கெட்டுகளை சிஎஸ்கே இழந்துவந்தது. இந்த குறைபாட்டை கடைசிவரை சரிசெய்யாததன் விளைவை இப்போது அனுபவித்துவிட்டது.

வாட்ஸனுக்கு இரு கேட்சுகளை மும்பை அணியினர் கோட்டை விட்டபோதும், அவர் இன்னும் பொறுமையாக ரன் ஓடாமல் தவிர்த்திருந்தால் வெற்றி சிஎஸ்கே பக்கம் நின்றிருக்கும். வாட்ஸன், தோனியின் ரன் அவுட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

ஏமாற்றம்

வாட்ஸன், டூப்பிளசிஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். மெக்லனஹன் வீசிய முதல் ஓவரில் டூப்பிளசிஸ் பவுண்டரி விளாசினார், குர்னல் பாண்டியா வீசிய 2-வது ஓவரில் வாட்ஸன் பவுண்டரி அடித்தார்.

குர்னல் பாண்டியா வீசிய 4-வது ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து அசத்தினார். கடைசிப்பந்தில் விக்கெட் கீப்பர் டீக்காக்கால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு டூப்பிளசிஸ்  26 ரன்களில் ஆட்டமிழந்தார். 33 ரன்களுக்கு முதல் விக்கெட்டை சிஎஸ்கே அணி இழந்தது. அடுத்து ரெய்னா களமிறங்கி, வாட்ஸனுடன் சேர்ந்தார்.

மலிங்கா வீசிய 6-வது ஓவரை வாட்ஸன் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்து துவம்சம் செய்தார். பவர்ப்ளே ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி பவர்ப்ளே ஓவரில் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

மெக்லனஹன் வீசிய 7-வது ஓவரில் பவுன்ஸர் பந்து  ரெய்னாவின் பேட்டில் பட்டு நடுவர் அவுட் அளித்தார். ஆனால், அதை டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்ததில் அவுட் இல்லை என்று தீர்ப்பானது. ராகுல் சாஹர் வீசிய 10-வது ஓவரில் ரெய்னா எல்பிடபிள்யு முறையில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ராயுடு நீண்டநேரம் நிலைக்கவில்லை.

watson.jpg 

மெக்லனஹன் வீசிய 9-வது ஓவரில் வாட்ஸன் தூக்கி அடித்த பந்தை மலிங்கா கேட்ச் பிடிக்க முற்பட்டு தவறவிட்டார். இந்த வாய்ப்பை வாட்ஸ்ன் இறுகப்பற்றினார்.  10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்திருந்தது.

பும்ரா வீசிய 11-வது ஓவரில் டீக்காக்கிடம் கேட்ச் கொடுத்து ராயுடு ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த கேப்டன் தோனி, வாட்ஸனுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர்.

தோனி ரன்அவுட்

ஹர்திக் பாண்டியா வீசிய 12-வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. வாட்ஸன் அடித்து விட்டு ஒரு ரன் ஓட முயன்றபோது இஷான் கிசன் வீசிய துல்லிய வீ்ச்சில் தோனி 2 ரன்னில் ரன் அவுட் செய்யப்பட்டார். இந்த ரன்அவுட்டில் கேமிராவின் ஒரு கோணத்தில் பார்த்தால் தோனி அவுட் போலவும், மற்றொரு கோணத்தில் அவுட் இல்லாதது போலவும் தெரிந்தது. இதனால் மூன்றாவது நடுவர் தோனியின் விக்கெட்டை தீர்மானிக்க நீண்டநேரம் எடுத்துக்கொண்டார். சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு  அளிக்க வேண்டிய நிலையில், தோனி அவுட் என்று மூன்றாவது நடுவர் தீர்ப்பளித்தார்.

70 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்த சிஎஸ்கே அடுத்த 12 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து பிராவோ களமிறங்கி, வாட்ஸனுடன் சேர்ந்தார்.

கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே அணி வெற்றிக்கு 62 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்கா வீசிய 16-வது ஓவரை வாட்ஸனும், பிராவோவும் பயன்படுத்தினர். இந்த ஓவரில் பிராவோ ஒரு சிக்ஸரும், வாட்ஸன் 3 பவுண்டரிகள் அடித்து, 44 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்தார்.

dhoni.jpg 

பும்ரா வீசிய 17-வது ஓவரில் வாட்ஸன் லெக்திசையில் தூக்கி அடிக்க, அது ராகுல் சாஹர் கேட்ச் பிடிக்க தவறவிட்டார். வாட்ஸனுக்கு இந்த ஆட்டத்தில் 2-வது கேட்ச் வாய்ப்பு தவறவிடப்பட்டது.

கடைசி 3 ஓவர்கள்

கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை குர்னல் பாண்டியா வீசினார்..ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து வாட்ஸன் போட்டியில் நிலவிய டென்ஷனைக் குறைத்தார். குர்னல் பாண்டியா பந்துவீசும்வரை ஆட்டம் மும்பை பக்கம்தான் இருந்தது ஆனால், வாட்ஸன் அடித்த ஹாட்ரிக் சிக்ஸருக்கு பின் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது.

19-வது ஓவரை பும்ரா வீசனார். பும்ரா வீசிய பவுன்ஸர் பந்தை அடிக்க முற்பட்டு டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து பிராவோ 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜடேஜா களமிறங்கினார். 3-வது பந்தில் ஜடேஜா 2 ரன்களும், 5-வது பந்தில் 2 ரன்களும் எடுத்தார். கடைசிப்பந்து  பவுன்ஸராக பும்ரா வீச, அதை பிடிக்காமல் டீகாக் தவறவிட்டார் பைஸ் மூலம் 4 ரன்கள் கிடைத்தது.

கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்கா கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் வாட்ஸன் ஒரு ரன்னும், 2-வது பந்தில் ஜடேஜா ஒரு ரன்னும் எடுத்தனர். 3-வது பந்தில் வாட்ஸன் 2 ரன்கள் சேர்த்தார். 4-வது பந்தில் 2 ரன்கள் எடுக்க வாட்ஸன் முயன்றபோது பாண்டியாவால் ரன் அவுட் செய்யப்பட்டு 59 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும்.

5-வது பந்தில் தாக்கூர் 2 ரன் சேர்க்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. மலிங்கா ஸ்லோபாலில் யார்கர் வீச தாக்கூர் எல்பிடபிள்யு முறையில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

att.jpg 

சிஎஸ்கே அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 5 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மலிங்கா, சாஹர், பாண்டியா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

மும்பை திணறல் பேட்டிங்

முன்னதாக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சாஹர் வீசிய முதல்ஓவரை கட்டுக்கோப்பாக வீசினார். தாக்கூர் வீசிய 2-வது ஓவரில் சர்மா சிக்ஸர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். சாஹர் வீசிய 3-வது ஓவரில் டீ காக் 3 சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை எகிறச் செய்தார்.

பந்துவீச்சை மாற்றிய தோனி, ஹர்பஜனை அழைத்தார். ஹர்பஜன் ஓவரில் ரோஹித் சர்மா பவுண்டரி அடித்தார். 5-வது ஓவரை தாக்கூர் வீசினார். 4-வது பந்தில் லெக் திசையில் டீகாக் சிக்ஸர் விளாசினார். ஆனால் அடுத்தபந்து ஷார்ட் பிட்சாக வந்தது. இதை சரியாக கணிக்கத் தவறி டீகாக் அடித்ததால் அது தோனியிடம் தஞ்சம் புகுந்தது. டீ காக்29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டீ காக்கை ஆட்டமிழக்கச் செய்தபோது, தாக்கூர் அவரை வெளியே போகுமாறு செய்கைசெய்து சென்ட் ஆப் செய்தார். இது ஐபிஎல் விதிமுறையின்படி தவறாகும் என்பதால், நாளை  நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம். 

அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்து, சர்மாவுடன் சேர்ந்தார். சாஹர் வீசிய 5-வது ஓவரின் 2-வது பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து 15 ரன்னில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இந்த ஓவரை மெய்டனாக சாஹர்வீசினார்.

sahar.jpg 

தோனி சாதனை

 ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்கச்செய்தபோது, தோனி ஐபிஎல் போட்டியில் புதிய சாதனையை எட்டினார். ஐபிஎல் போட்டியில் இதுவரை 132 கேட்சுகளை பிடித்து தோனி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் தினேஷ் கார்த்திக் 131 கேட்சுகளை பிடித்திருந்த நிலையில், அதை தோனி முறியடித்துள்ளார்.

பவர்ப்ளே ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்திருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் நிதானமாக பேட் செய்தனர். பிராவோ வீசிய 10-வது ஓவரில்  இஷான் கிசான் 2 பவுண்டரிகளை விளாசினார். ஹர்பஜன் வீசிய 11-வது ஓவரில் யாதவ், கிசான் தலா ஒரு பவுண்டரி அடித்தனர்.

12-வது ஓவரை இம்ரான் தாஹீர் வீசினார். அவரின் 2-வது பந்தில்  சூர்யகுமார் யாதவ் 15 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து குர்னால் பாண்டியா வந்தார்.

 மீண்டும் தாக்கூர் பந்துவீச அழைக்கப்பட்டார். 13-வது ஓவரை தாக்கூர் வீசினார். 7 ரன்கள் சேர்த்த நிலையில், குர்னல் பாண்டியா அடித்த பந்தை தாக்கூர் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து வந்த பொலார்ட், கிசானுடன் சேர்ந்தார்.

காப்பாற்றிய பொலார்ட்

தாஹீர் வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் பொலார்ட் சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரின் 5-வது பந்தில் இஷான் கிசான் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து 23 ரன்னில் வெளியேறினார்.  82 ரன்களுக்கு 3-வது விக்கெட்டை இழந்த மும்பை அணி, அடுத்து 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

தாக்கூர் வீசிய 18-வது ஓவரில் ஹர்திக், பொலார்ட்  தலா ஒரு சிக்ஸர் விளாசினர். 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார்.  16 ரன்கள் சேர்த்த நிலையில், ஹர்திக் பாண்டியா எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார்.  அடுத்து  வந்த ராகுல் சாஹர் ரன் ஏதும் எடுக்காமல் டூப்பிளசிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மெக்லனஹன் களமிறங்கினார்.

tahkru.jpg 

கடைசி ஓவரை பிராவோ வீசினார். 3 பந்துகள் டாட் பந்துகளாகவும் பிராவோ வீசினார். 4-வது பந்தில் மெக்லனஹன் டக்அவுட்டில் ரன் அவுட்டாகினார். கடைசி இரு பந்துகளில் பொலார்ட் இரு பவுண்டரிகள் அடிக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது.  கடைசி இரு ஓவர்களில் 3 பவுண்டரி, 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. பொலார்ட் 46 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே தரப்பில் சாஹர் 3 விக்கெட்டுகளையும், தாக்கூர், இம்ரான் தாஹிர்  தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close