[X] Close

தோனி புதிய ஐபிஎல் சாதனை: சிஎஸ்கே அணிக்கு 150 இலக்கு: சொதப்பிய மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள்


150

  • kamadenu
  • Posted: 12 May, 2019 21:47 pm
  • அ+ அ-

-போத்திராஜ்

ஹைதராபாத்தில் நடந்து வரும் 12-வது ஐபிஎல் இறுதிப்போட்டியில்  சிஎஸ்கே அணி வெற்றி பெற 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, டீ காக், ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் சொதப்பி ஏமாற்றம் அளித்தனர்.

12-வது ஐபிஎல் போட்டியின் இறுதிஆட்டம் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியில் மெக்லனகனுக்கு பதிலாக சந்தீப் சேர்க்கப்பட்டிருந்தார். சிஎஸ்கே அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

டீகாக், ரோஹித் சர்மா களமிறங்கியபோது ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியினர் தோனி தலைமையில் களமிறங்கியபோது, ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர் கோஷமிட்டனர். ஏறக்குறைய 32,405 ரசிகர்கள் மைதானத்தில் போட்டியை கண்டு ரசித்தனர்.

decock.jpg 

சாஹர் வீசிய முதல்ஓவரை கட்டுக்கோப்பாக வீசினார். தாக்கூர் வீசிய 2-வது ஓவரில் சர்மா சிக்ஸர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். சாஹர் வீசிய 3-வது ஓவரில் டீ காக் 3 சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை எகிறச் செய்தார்.

பந்துவீச்சை மாற்றிய தோனி, ஹர்பஜனை அழைத்தார். ஹர்பஜன் ஓவரில் ரோஹித் சர்மா பவுண்டரி அடித்தார். 5-வது ஓவரை தாக்கூர் வீசினார். 4-வது பந்தில் லெக் திசையில் டீகாக் சிக்ஸர் விளாசினார். ஆனால் அடுத்தபந்து ஷார்ட் பிட்சாக வந்தது. இதை சரியாக கணிக்கத் தவறி டீகாக் அடித்ததால் அது தோனியிடம் தஞ்சம் புகுந்தது. டீ காக்29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

tahkru.jpg 

டீ காக்கை ஆட்டமிழக்கச் செய்தபோது, தாக்கூர் அவரை வெளியே போகுமாறு செய்கைசெய்து சென்ட் ஆப் செய்தார். இது ஐபிஎல் விதிமுறையின்படி தவறாகும் என்பதால், நாளை  நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடலாம். 

அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்து, சர்மாவுடன் சேர்ந்தார். சாஹர் வீசிய 5-வது ஓவரின் 2-வது பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து 15 ரன்னில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இந்த ஓவரை மெய்டனாக சாஹர்வீசினார்.

sahar.jpg 

ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்கச்செய்தபோது, தோனி ஐபிஎல் போட்டியில் புதிய சாதனையை எட்டினார். ஐபிஎல் போட்டியில் இதுவரை 132 கேட்சுகளை பிடித்து தோனி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் தினேஷ் கார்த்திக் 131 கேட்சுகளை பிடித்திருந்த நிலையில், அதை தோனி முறியடித்துள்ளார்.

பவர்ப்ளே ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்திருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் நிதானமாக பேட் செய்தனர். பிராவோ வீசிய 10-வது ஓவரில்  இஷான் கிசான் 2 பவுண்டரிகளை விளாசினார். ஹர்பஜன் வீசிய 11-வது ஓவரில் யாதவ், கிசான் தலா ஒரு பவுண்டரி அடித்தனர்.

12-வது ஓவரை இம்ரான் தாஹீர் வீசினார். அவரின் 2-வது பந்தில்  சூர்யகுமார் யாதவ் 15 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து குர்னால் பாண்டியா வந்தார்.

 மீண்டும் தாக்கூர் பந்துவீச அழைக்கப்பட்டார். 13-வது ஓவரை தாக்கூர் வீசினார். 7 ரன்கள் சேர்த்த நிலையில், குர்னல் பாண்டியா அடித்த பந்தை தாக்கூர் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து வந்த பொலார்ட், கிசானுடன் சேர்ந்தார்.

தாஹீர் வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் பொலார்ட் சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரின் 5-வது பந்தில் இஷான் கிசான் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து 23 ரன்னில் வெளியேறினார்.  82 ரன்களுக்கு 3-வது விக்கெட்டை இழந்த மும்பை அணி, அடுத்து 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

rpohit.jpg 

தாக்கூர் வீசிய 18-வது ஓவரில் ஹர்திக், பொலார்ட்  தலா ஒரு சிக்ஸர் விளாசினர். 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார்.  16 ரன்கள் சேர்த்த நிலையில், ஹர்திக் பாண்டியா எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார்.  அடுத்து  வந்த ராகுல் சாஹர் ரன் ஏதும் எடுக்காமல் டூப்பிளசிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மெக்லனஹன் களமிறங்கினார்.

கடைசி ஓவரை பிராவோ வீசினார். 3 பந்துகள் டாட் பந்துகளாகவும் பிராவோ வீசினார். 4-வது பந்தில் மெக்லனஹன் டக்அவுட்டில் ரன் அவுட்டாகினார். கடைசி இரு பந்துகளில் பொலார்ட் இரு பவுண்டரிகள் அடிக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது.  கடைசி இரு ஓவர்களில் 3 பவுண்டரி, 3 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. பொலார்ட் 46 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே தரப்பில் சாஹர் 3 விக்கெட்டுகளையும், தாக்கூர், இம்ரான் தாஹிர்  தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close