[X] Close

'மும்பை இந்தியன்ஸ் ஒரு கார்ப்பரேட்; சிஎஸ்கே அப்படியல்ல'- மாத்யூ ஹெய்டன் காரசாரம்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 16:45 pm
  • அ+ அ-

மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போன்றது. கார்ப்பரேட் நிறுவனத்திடம் விஸ்வாசம், விழிப்புணர்வு ஆகியவற்றை எதிர்பார்க்க முடியாது. ஆனால், சிஎஸ்கே அணி அப்படியல்ல என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மாத்யூ ஹெய்டன் காரசாரமாகத் தெரிவித்தார்.

12-வது ஐபிஎல் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இதுவரை 3முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் 4-வது முறையாக ஹைதராபாத்தில் இன்று நடக்கும் கோப்பையை வெல்லும் கோதாவில் குதிக்கின்றன.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹேய்டன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்குப் பின் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு  அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் ஒன்றுதான். மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கார்ப்பரேட் நிறுவனம், சிஎஸ்கே அப்படியல்ல. சிஎஸ்கே அணி ஒரு குடும்ப கட்டமைப்பை கொண்ட அணி.

4 முதல் 5 வீரர்களை வைத்துதான் ஒரு அணியை கட்டமைக்கிறார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும், ஆனால், சிஎஸ்கே அணி வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும்.

கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து விஸ்வாசம், போட்டி குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல விஷயங்களை எதிர்பார்ப்பது கடினம். ஆனால், இந்தியா சிமென்ட்ஸ், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகியவை கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவை. இந்த அமைப்புகள் புதிய வீரர்களை டிஎன்பிஎல் போன்ற தொடர் மூலம் உருவாக்கி வருகின்றன.

இந்த ஆண்டும் சிஎஸ்கே அணி கோப்பையை வென்று 4-வது முறையாக சாம்பியன் வென்ற அணி என்ற பெருமையை படைக்கும். இதற்குமுன் லீக் ஆட்டங்களில் சிஎஸ்கே அணியை மும்பை வென்றிருக்கலாம், அது முக்கியமல்ல. நமக்கு இறுதிப்போட்டித்தான் முக்கியம்.

இந்த தொடரில் அனைத்து அணிகளும் நல்லவிதமான கிரிக்கெட்டை விளையாடி இருக்கின்றன. கடந்த 2 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா நல்ல பேட்டிங்  செய்து ஃபார்மில் இருக்கிறார்கள். இரு தரப்பிலும் நல்ல பேட்ஸ்மேன்கள் சூப்பர் ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதில் மறுப்பதற்கில்லை.

ஆனால், சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை அணி மோதிய 3 ஆட்டங்களும் ஒருதரப்பாக முடிந்தன. ஆனால் சிஎஸ்கே  அணி சிறிது வித்தியாசமானது, 3 போட்டிகளும் 3 விதமான காரணங்களுக்காக விளையாடி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

முதல் தகுதிச்சுற்றுப் போட்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் மோசமான இரவாக அமைந்தது. ஆனால் 2வது போட்டியில் சிஎஸ்கே அணி தனது குறைகளை சரி செய்து, தகுதியான வீரர்களை வைத்துக்கொண்டு நிரூபித்துக்காட்டியது.  இவ்வாறு ஹேய்டன் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close