[X] Close

டுபிளெசிஸ், இம்ரான் தாஹிருக்கு தென் ஆப்பிரிக்கா அழைப்பு?


  • kamadenu
  • Posted: 11 May, 2019 14:32 pm
  • அ+ அ-

உலகக்கோப்பையை வெல்வது முக்கியம் ஆகவே முக்கியமான வீரர்களான கேப்டன் டுபிளெசிஸ், குவிண்டன் டி காக், இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து முன்னால் விலகி தென் ஆப்பிரிக்க அணியுடன் இணைய வேண்டும் என்று பயிற்சியாளர் ஒட்டைஸ் கிப்சன் கோரிக்கை ஒன்றை வைத்தார்.

ஆனால் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவின் தலைமை செயலதிகாரி தபங் மூரோ இது பற்றி பேசவேயில்லை. காரணம் பிசிசிஐயிடம் இந்தக் கோரிக்கைகளை வைத்தால் பிற்பாடு ‘விளைவுகளை’ சந்திக்க வேண்டி வரலாம் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அச்சப்படுகிறது.

வீரர்களை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வாபஸ் பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் 2021-22 இந்தியா அங்கு செல்லும் தொடரில் ஏதாவது பிரச்சினைகளை பிசிசிஐ உருவாக்கலாம் என்று கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா அஞ்சுகிறது. அதாவது தென் ஆப்பிரிக்கா வாரியம் தொடரில் ஏதாவது மாற்றத்தை இந்தியா இதனால்  செய்தால் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் நஷ்டம் ஏற்படும். அதனால் வாயைத்திறக்க அஞ்சுகிறது.

ஆஸ்திரேலியா கூட சமீபத்தில் தங்கள் உள்நாட்டு சீசனில் ஒருநாள் தொடரை விளையாடவிடாமல் இந்தியா பயண திட்டமிடுதலை ஐசிசியில் வேண்டுமென்றே செல்வாக்கைப் பயன்படுத்தி மாற்றி வருகிறது என்ற குற்றச்சாட்டை அதன் ஊடகங்கள் வைத்தன.

ஏற்கெனவே ஐபிஎல் கிரிக்கெட்டினால் டேல் ஸ்டெய்ன், கேகிசோ ரபாடா ஆகியோரது நிலை குறித்த பிரச்சினையில் தென் ஆப்பிரிக்கா உழன்று வருகிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பவர் ஹவுஸ்கள் தங்கள் வீரர்களை ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து முன் கூட்டியே வரவழைக்க முடிகிறது, பாவம் ஏழை வாரியங்களான தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள் உள்ளிட்டவைகள் தங்கள் வீரர்களை அழைத்துக் கொள்ள முடியவில்லை. காரணம் பிசிசிஐ-யின் ஒரு விதமான பழிவாங்கும் போக்குதான் என்று சில அயல்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மே 12ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறுகிறது மே 19ம் தேதி தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து புறப்படுகிறது. இடையில் ஒருவாரம்தான் இடைவெளி.

அந்தந்த அணிகளின் லட்சியங்கள் நோக்கங்கள் ஆகியவற்றை இந்த பணமழை ஐபிஎல் காலி செய்து வருகிறது என்று பணபலம் இல்லாத கிரிக்கெட் வாரியங்கள் தரப்பில் மெல்லிய எதிர்ப்பலை கிளம்பிவருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close