[X] Close

தென் கொரிய சுற்றுப்பயணத்துக்கானஇந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு: ராணி ராம்பால் கேப்டனாக நியமனம்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 08:07 am
  • அ+ அ-

தென் கொரிய சுற்றுப்பயணத்துக்கான 18 பேர் கொண்ட இந்தியமகளிர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராணி ராம்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் ஹாக்கி அணி அடுத்த வாரம் தென் கொரியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் ஜூன்மாதம் ஜப்பானின் ஹிரோஷிமாநகரில் நடைபெறும் எப்ஐஹெச் சிரீஸ் பைனல்ஸ் தொடருக்கு இந்திய மகளிரணி தயாராகும் விதமாகவே தற்போது தென் கொரிய அணிக்கு எதிரான தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென் கொரிய அணிக்கு எதிரானமுதல் ஆட்டம் 20-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை ஹாக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. காயம் காரணமாக மலேசிய சுற்றுப்பயணத்தில் இடம் பெறாத ராணி ராம்பால் கேப்டனாக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். துணை கேப்டனாக கோல்கீப்பர் சவிதா செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய ஹாக்கி மகளிரணியானது ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் இந்தியா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டத்தை டிரா செய்த நிலையில், ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தது. இதைத் தொடர்ந்து மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி அங்கு நடைபெற்ற தொடரை 4-0 என கைப்பற்றியது.

தென் கொரியாவுக்கு எதிரான தொடரில் 2-வது கோல்கீப்பராக ரஜானி தேர்வாகி உள்ளார். மலேசிய சுற்றுப்பயணத்தில் காயம் காரணமாக விளையாடாத டிபன்டரான குர்ஜித் கவுரும் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். அவருடன் டிபன்டர்களாக சலிமா, சுனிதா லக்ரா, தீப் கிரேஷ், கரிஷ்மா யாதவ், சுசீலா சானு ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். நடுகள வீராங்கனைகளாக மோனிகா, நவ்ஜோத் கவுர், நிக்கி பிரதான், நேகா கோயல், லிலிமா மின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முன் களத்தில் கேப்டன் ராணி ராம்பாலுடன் வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, ஜோதி, நவ்னீத்கவுர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தென் கொரிய சுற்றுப்பயணம் குறித்து அணியின் பயிற்சியாளர் சோஜெர்ட் மரிஜென் கூறுகையில், அனுபவ வீராங்கனைகளான ராணி ராம்பால், குர்ஜித் கவுர் ஆகியோர் அணிக்கு திரும்பிஇருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

தென் கொரிய சுற்றுப்பயணம், எப்ஐஹெச் சிரீஸ் பைனல்ஸ் தொடரில் வலுவான போட்டியாளர்களை எதிர்கொள்வதற்கு எங்களைசிறந்த முறையில் தயார்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும். கடந்த இரு சுற்றுப்பயணங்களிலும் எங்களது ஆட்டத்தில் எந்த இடங்களில் முன்னேற்றம் காணவேண்டும் என்பதை கண்டறிந்துள்ளோம். முன்னேற்றம் காண வேண்டிய பகுதிகளில் அதிக பயிற்சிகள் செய்துள்ளோம்” என்றார்.

அணி விவரம்:கோல்கீப்பர்கள்: சவிதா, ரஜானி.

டிபன்டர்கள்: குர்ஜித் கவுர், சலிமா, சுனிதா லக்ரா, தீப் கிரேஷ், கரிஷ்மா யாதவ், சுசீலா சானு.

முன்களம்: ராணி ராம்பால் (கேப்டன்), வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, ஜோதி, நவ்னீத் கவுர்.

நடுகளம்: மோனிகா, நவ்ஜோத் கவுர், நிக்கி பிரதான், நேகா கோயல், லிலிமா மின்ஸ்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close