[X] Close

பெண் வேட்பாளரை தரக்குறைவாக விமர்சித்ததாக சர்ச்சை: பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீருக்கு கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு


  • kamadenu
  • Posted: 11 May, 2019 07:56 am
  • அ+ அ-

பெண் வேட்பாளரைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் மீது புகார் எழுந்துள்ள நிலையில் கம்பீருக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர்கள் சிலர் பேசியுள்ளனர்.

டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் களமிறக்கப்பட்டுள்ளார். அவரது முக்கிய போட்டியாளராக ஆம் ஆத்மி கட்சியின் ஆதிஷி மர்லேனாவுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை ஆதிஷி சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, “பெண் என்றும் பாராமல் என்னை பற்றி மிகவும் மோசமான வார்த்தைகளில் விமர்சனம் செய்து துண்டு பிரசுரங்களை கவுதம் கம்பீர் சார்பில் தொகுதியில் விநியோகித்து வருகின்றனர். ஆபாசமான வகையில் அவர்கள் அந்த துண்டுப் பிரசுரத்தில் என்னைப் பற்றி கூறியுள்ளனர். இது எனக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” என்றார். பின்னர் செய்தியாளர்கள் முன்னிலையில் ஆதிஷி, மனம் உடைந்து அழுதார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கவுதம் கம்பீருக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லஷ்மண் கூறும்போது, “கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு கவுதம் கம்பீரைத் தெரியும். நேற்றைய சம்பவங்களை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். கம்பீர் நேர்மையானவர், பெண்கள் மீது மதிப்பு கொண்டவர் என்பதில் நான் மிகவும் உறுதியாக உள்ளேன்” என்றார்.

இதுகுறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறும்போது, “கவுதம் கம்பீர் தொடர்பான சம்பவங்களை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவரை எனக்கு மிகவும் நன்றாக தெரியும். எந்த பெண்ணை பற்றியும் மோசமாக அவர் பேசியதில்லை. அவர் தேர்தலில் வெற்றி பெறுவாரா, பெற மாட்டாரா என்பது வேறு விஷயம். ஆனால் கம்பீர் இதையெல்லாம் விட மேலானவர்” என்றார் அவர்.

இதனிடையே ஆபாசமான கருத்து விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மலிவாலிடம் ஆதிஷி மர்லேனா புகார் அளித்துள்ளார். - பிடிஐ

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close