[X] Close

ஐபிஎல் தொடரில் தோனிக்கு உதவுங்கள்... ஐஐடி மெட்ராஸ் தேர்வில் ருசிகர கேள்வி


  • kamadenu
  • Posted: 09 May, 2019 08:09 am
  • அ+ அ-

ஐஐடி மெட்ராஸில் மெட்டிரியல் மற்றும் எனர்ஜி பேலன்ஸ் பாடத் தேர்வு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதில் நடப்பு கால பிரச்சினையை மையமாக கொண்டு கேள்வி எழுப்பும் வகையில் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் போது ஏற்படும் பனிப் பொழிவு பிரச்சினை கேள்வியாக கேட்கப்பட்டிருந்தது.

அந்த கேள்வியில், “பகல்-இரவு கிரிக்கெட் போட்டியில் பனிப் பொழிவு முக்கிய பங்கு வகிக்கிறது. அவுட்பீல்டில் காணப்படும் அதிகப்படியான பனியால் பந்து ஈரமாகிறது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் சரியாக பந்தை இறுகப் பிடிப்பது சவாலான விஷயமாக உள்ளது. வேகப் பந்துவீச்சாளர்கள் சரியான நீளத்தில் பந்து வீசுவதும் கடினமான செயலாகி விடுகிறது. எனவே இது பீல்டிங் செய்யும் அணிக்கு அனுகூலமற்ற நிலையை உருவாக்குகிறது.

2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தகுதிசுற்று ஆட்டத்தை சேப்பாக்கத்தில் மே 7-ம் தேதி விளையாடக்கூடும். அன்றைய தினம் வானிலை முன்னறிவிப்பின்படி சென்னையில் 70 சதவீதம் ஈரப்பதம் இருக்கக்கூடும். கணிப்பின் படி போட்டி தொடங்கும் போது வெப்பநிலையின் அளவு 39 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும். 2-வது இன்னிங்ஸின் தொடக்கத்தில் வெப்ப நிலையின் அளவு29 டிகிரி செல்சியஸாக குறையக்கூடும்.

இந்த தகவலின் அடிப்படையில் தோனி டாஸில் வெற்றி பெற்றால், நீங்கள் அவரை பேட்டிங்கை தேர்வு செய்ய பரிந்துரை செய்வீர்களா? அல்லது பீல்டிங்கை தேர்வு செய்ய பரிந்துரைப்பீர்களா? உங்களது பதிலை தெரிவிக்கவும். சரியான காரணங்களை கூறாவிட்டால் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது” என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கேள்விக்கு ஏராளமான மாணவர்கள் சரியான பதிலை வழங்கியிருந்தனர். அதில், வெப்ப நிலையின் அளவு குறையும் போது பனிப்பொழிவு இருக்கும். இதனால் முதலில் பீல்டிங் செய்வதே புத்திசாலித்தனம் என தகுந்த விளக்கங்களுடன் மாணவர்கள் விடையளித்திருந்தனர்.

ஐஐடி மெட்ராஸ் உயர் கல்வி நிறுவனத்தின் இந்த வினாத்தாள் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதைப் பார்த்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்த கேள்வியை உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ் உயர் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் முத்து விஜயனை வெகுவாக பாராட்டியுள்ளது. மேலும் அந்த வினாவை ரீ-ட்விட்டும் செய்துள்ளது.

ஐஐடி கல்வி நிறுவனத்தின் தேர்வில் நடப்பு பிரச்சினையை அதிலும் தகுந்த அறிவியல் பூர்வ ஆதாரத்துடன் விளக்கிக்கூறும்படி கேட்கப்பட்ட வினா, சற்று ஆச்சர்யமாக இருந்தாலும் மாணவர்கள் தரப்பில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close