[X] Close

இப்படி வீசலாமா ‘தம்பி?’- ஒரே ஓவரில் மாற்றிய ரிஷப் பந்த்: பரபரப்பான கடைசி ஒவரில் சன் ரைசர்ஸை வீட்டுக்கு அனுப்பியது டெல்லி கேப்பிடல்ஸ்


  • kamadenu
  • Posted: 09 May, 2019 07:48 am
  • அ+ அ-

-இரா.முத்துக்குமார்

விசாகப்பட்டிணத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 2வது ப்ளே ஆஃப் போட்டி ஏகப்பட்ட ட்ராமாக்களுடன் பரபரப்பான முறையில் கடைசி ஒவர் வரை சென்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அபார வெற்றியில் முடிந்தது, இந்த அணியின் இறுதிக் கனவு மெய்ப்படும் வாய்ப்பு பெருக, ஹைதராபாத் இறுதிக்கனவை பிரித்வி ஷா, ரிஷப் பந்த் முறியடித்தனர்.

 

18வது ஓவரை பாசில் தம்பி மிக மோசமாக வீச ரிஷப் பந்த் 21 ரன்களை பின்னி எடுக்க ஆட்டம் மாறிப்போனது, இதே தம்பிதான் பிரிதிவி ஷாவுக்கு கேட்ச் ஒன்றையும் தொடக்கத்திலேயே கோட்டை விட்டார். தம்பிக்கு இது மறக்க வேண்டிய போட்டியாக முடிந்தது. ஆனால் ரஷீத் கான் மீண்டுமொரு முறை தான் ஏன் உலகின் சிறந்த லெக் ஸ்பின்னர் என்பதை நிரூபித்து 4 ஓவர்கள் 15 ரன்கள் 2 விக்கெட் என்று அசத்தினார்.  இதில் 15வது ஒவரில் கொலின் மன்ரோ, அக்சர் படேல் ஆகியோரை வெளியேற்றி டெல்லிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார்.

 

டாஸ் வென்ற ஷ்ரேயஸ் அய்யர் வருவது வரட்டும் என முதலில் ஹைதராபாத்தை பேட் செய்ய அழைக்க அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. சன் ரைசர்ஸின் பந்து வீச்சினால் இந்த ரன் எண்ணிக்கை சவாலாக அமைய கடைசி ஒவரின் ட்ராமாக்களுக்கிடையே கீமோ பால் வெற்றி ரன்களை அடிக்க ஒரு பந்து மீதமிருக்க டெல்லி கேப்பிடல்ஸ் 165/8 என்று வெற்றி பெற்றது.  12 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஎல் ப்ளே ஆஃபில் வெற்றி பெற்றுள்ளது. இப்போது சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோத வேண்டும்.

 

151/5, 161/8 என்று டெல்லி கேப்பிடல்ஸ் ஆன போது அன்று கிங்ஸ் லெவன் அணிக்கு எதிராக சாம் கரன் ஹாட்ரிக் எடுக்க 7 விக்கெட்டுகளை ஒற்றை இலக்க ரன்களுக்கு இழந்து தோல்வி தழுவியது நினைவுக்கு வராமலில்லை. ஆனால் இம்முறை கலீல் அகமெட் வீசிய ஷார்ட் பிட் ச்பந்தை கீமோ பால் புல்ஷாட்டில் ஆன் திசையில் பவுண்டரிக்கு விரட்ட டெல்லி வெற்றி பெற்றது.

 

கேன் வில்லியம்சின் ‘உஷ் கண்டுக்காதீங்க’ கேப்டன்சி: 18வது ஓவர் தவறு; பாய்ந்து தாக்கி புலியான ரிஷப்  பந்த்

 

டெல்லி கேப்பிடல்ஸ் இலக்கை விரட்டும் போது 16வது ஓவர் முடிவில் ஸ்கோர் 121/5. பந்த்  11 பந்துகளில் 21 ரன்களுடனும் ருதர்போர்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர். 17வது ஓவரை புவனேஷ்வர் குமார் பிரமாதமாக வீசினாலும் ஒரு பந்தை சரியாக பேட்டின் ரீச்சுக்கு லெந்தில் வீச ருதர்போர்ட் அதனை நேராக சிக்ஸ் தூக்கினார். ஆனாலும் சிக்ஸ் உட்பட அந்த ஓவரில் 8 ரன்களே வந்தது.

 

ஆக, 4 ஒவர்கள் 42 ரன்கள் தேவை என்ற நிலை 3 ஒவர்கள் 34 ரன்கள் என்ற சமன்பாடாக மாறியது. அப்போது சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் செய்த மிகப்பெரிய தவறு, ஒரே தவறு ஆட்டத்தையே ஹைதராபாத்திடமிருந்து பறித்துச் சென்றது.  புவனேஷ்குமாருக்கு ஒரு ஓவர் உள்ளது, கலீல் அகமெட் 2 ஒவர்கள் 17 ரன்கள் 2 விக்கெட் என்று அசத்தியுள்ளார். இவர்களிடம் கொடுத்து ஆட்டத்தை முடிக்க வேண்டியதுதான் பாக்கி.

 

rishab pant.jpg 

 

ஆனால் கேன் வில்லியம்சன் புரியாத புதிராக ஏன் அந்த ஓவரை பாசில் தம்பியிடம் கொடுத்தார், தம்பி ஏன் அப்படி வீசினார் என்பது புதிர்தான்.  மேலும் பந்த் ஒரு இடது கை வீரர் அவரது உடலுக்குக் குறுக்காகச் செல்லுமாறு ஓவர் த விக்கெட்டில் வீச வேண்டிய தம்பி ரவுண்ட் த விக்கெட்டில் வீசி அழகாகப்போட்டுக் கொடுத்தார். ரிஷப் பந்த் பாய்ந்து விட்டார் பாய்ந்து. ரிஷப் பந்த் இந்த ஐபிஎல் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் 13 சிக்சர்களை லெக் திசையில் மட்டும் விளாசியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் நிலையில் தம்பி ரவுண்ட் த விக்கெட்டில் வீசி சிக்கினார்.

 

முதல் பந்து மரண அடியாக அமைய நேராக பந்து கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லைக்கோட்டை மோதியது. அடுத்த பந்து லெந்த் பந்து மிட்விக்கெட்டில் பெரிய சிக்ஸ். அடுத்த பந்து மீண்டும் லாங் லெக்கில் பயங்கரமான ஷாட், 4 ரன்கள். அடுத்த பந்து மீண்டும் லெக் திசையில் சிக்ஸ். இந்த ஓவரில் 21 ரன்கள் வந்ததில் ஆட்டம் மாறிவிட்டது. 12 பந்துகளில் 12 ரன்கள் என்று ஆனது.  கேன் வில்லியம்சன் இந்தத் தவறை மறக்க மாட்டார், ஹைதராபாத் ரசிகர்களும் கலீலுக்குக் கொடுக்காமல் செய்ததை மன்னிக்க மாட்டார்கள்.

 

பந்த் அவுட்டும் கடைசி ஓவர் நாடகமும்:

 

12 பந்துகள் 12 ரன்கள் என்ற நிலையில் புவனேஷ்வர் குமார் 19வது ஓவரை வீச, ரூதர்போர்ட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இது சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த போட்டி இன்னும் முடிந்துவிடவில்லை என்பதை அறிவுறுத்தியது. ஆனால் ரிஷப் பந்த்தை கட்டுப்படுத்த முடியவில்லை, புவனேஷ்வர் குமாரையும் இம்முறை ஆஃப் திசையில் சிக்ஸ் விளாசினார் ரிஷப் பந்த். ஆனால் மீண்டும் ஒரு சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் புவனேஷ்வர் குமாரின் ஸ்லோ பந்து ஒன்று சற்று ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே தள்ளிச் செல்ல, கொடியேற்றி நபியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். 21 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 49 ரன்கள் குவித்து ரிஷப் பந்த் ஆட்டமிழந்தது இன்னொரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

 

திடீரென கீமோ பால், அமித் மிஸ்ரா இருவருமே ரன் எடுக்காத நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.  கலீல் அகமெட் வீசினார். முதல் பந்து வைட் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது நெருக்கமான பந்துதான். ரவுண்ட் த விக்கெட்டில் பந்தை உள்ளேயும் வெளியேயும் வீச அடுத்த 2 பந்துகளில் 1 ரன் வந்தது, மிஸ்ரா சிங்கிள் எடுக்க கீமோ பால் வைடாகச் சென்ற பந்தை மட்டையில் ஆடத் தவறினார். 3வது பந்திலும் கீமோ பால் 1 ரன் தான் எடுக்க முடிந்தது.

amit mishra.jpg 

 

அப்போதுதான் மிகப்பெரிய ட்ராமா நிகழ்ந்தது. அமிஷ் மிஸ்ரா பந்து ஒன்றை ஆடும் முயற்சியில் பீட்டன் ஆக, பந்து விக்கெட் கீப்பர் சஹாவிடம் செல்ல மிஸ்ரா ஒரு ரன் எடுக்க பேட்டிங் முனையிலிருந்து ஓடத்தொடங்கினார். சஹா பந்தை ஸ்டம்பில் அடிக்க  அது ஸ்டம்பில் படவில்லை. பந்தை கலீல் எடுத்து ரன்னர் முனையில் அடிக்கும் போது வழியில் தன் ஓடும் பாதையை மாற்றி பந்து ஸ்டம்பை அடிக்க வரும் பாதையை மறைக்குமாறு மிஸ்ரா ஓடியதில் அவர் உடலில் பட்டு பந்து திசை மாறியது, இது பீல்டரைத் தடுக்கும் தவறு ஆகையால் ‘அப்ஸ்ட்ரக்டிங் த பீல்ட் அவுட்’ என்று கோரப்பட்டது. முன்னதாக சன் ரைசர்ஸ் ஒரு ரிவியூ செய்தது, இதில் மிஸ்ரா மிஸ் செய்த பந்து எட்ஜ் ஆகியிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் அது எட்ஜ் இல்லை என்று முடிவாக, சன் ரைசர்ஸ் ரிவியூவை இழந்தது. இதனால் மைதானத்தில் குழப்பம் நீடிக்க, அமித் மிஸ்ரா பந்தின் வழியில் குறுக்காக வேண்டுமென்றே வந்ததற்காக அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

 

ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் செல்லும் என்று பரபரப்பாக எதிர்பார்த்த நிலையில் கலீல் அகமெட் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை பார்த்த கீமோ பால் அதனை மிட் விக்கெட் திசையில் பிரமாதமான புல்ஷாட்டில் பவுண்டரிக்கு அனுப்ப டெல்லி வீரர்கள் உட்காரும் இடத்தில் உற்சாகம் பொங்கியது. சன் ரைசர்ஸ் தலை தொங்கியது.

 

பவர் ப்ளேயில் அசத்திய பிரிதிவி ஷா; புவனேஷ்வர் குமார் பவுலிங்கை புரட்டி எடுத்தார்:

 

பிரிதிவி ஷா தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை கச்சிதமாக செய்பவர், சுயநலமற்ற ஆட்டத்தினால் இந்த ஐபிஎல் தொடரில் பவர் ப்ளே முடிவதற்குள் அவர் 10 முறை முடிந்துள்ளார். ஆனால் நேற்று அவரது ஆட்டம் பரிணமித்தது.

 

டெல்லி இலக்கை விரட்டத் தொடங்கிய போது புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவரிலேயே ஷிகர் தவண் 2 பவுண்டரிகளை விளாசித் தொடங்கினார். ஒரு முனையில் ஸ்பின்னாக நபி வீசினார். 2 ரன்கள்தான் வந்தது. 3வது ஓவரை கலீல் வீச பிரிதிவி ஷா புகுந்தார். லாங் ஆன், மிட்விக்கெட், கவர் என 3 அற்புத பவுண்டரிகளை ஷா விளாசினார். 4வது ஓவரில் நபி பந்தை மிட் ஆஃபில் தம்பி கேட்சை விட்டார். அதோடு இது 2 ரன்களாகவும் ஆனது.

 

shaw.jpg 

 

5வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீச முதல் பந்தே ஷாவினால் பவுண்டரிக்கு அனுப்பப்பட்டது, ஆனால் அங்கு ரஷீத் கானின் அற்புத பீல்டிங்கினால் 2 ரன்களானது. அடுத்து தரையோடு தரையாக அற்புத பவுண்டரி, பிறகு தேர்ட்மேனில் அப்பர் கட் சிக்ஸ், அடுத்த பந்து மிட் ஆஃப் மேல் அலட்சியமாக தூக்கி பவுண்டரிக்கு அடிக்கப்பட்டது.  இந்திய உலகக்கோப்பை முன்னணி வீச்சாளாரை 17 ரன்களை விளாசினார் பிரித்வி ஷா.  பவர் ப்ளேயில் பிரிதிவி 24 பந்துகளில் 39 ரன்கள். இதனையடுத்து பவர் ப்ளே கடைசி ஒவரில் ரஷீத் கானை கொண்டு வர வேண்டியதாயிற்று. அவர் அருமையாக வீச 6 ரன்களே வர டெல்லி 55 ரன்கள்.

 

முதலில் ஷிகர் தவண் 17 ரன்களில் ஹூடா பந்தில் சஹா ஸ்டம்பிங்குக்கு வெளியேற அய்யர் 8 ரன்களில் கொஞ்சம் கூட எழும்பிய பந்தில் கலீல் அகமெடிடம் ஆட்டமிழந்தார், சஹா கேட்ச்.

 

பிரித்வி ஷா 38 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 38 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கலீல் அகமெடின் பந்தை புல் ஆட முயன்று டாப் எட்ஜ் ஆகி பாயிண்டில் கேட்ச் ஆகி வெளியேறினார். அப்போது டெல்லி கேப்பிடல்ஸ் 11 ஒவர்களில் 87/3. அடுத்த 3 ஒவர்களில் 24 ரன்கள் வந்தது

 

ரஷீத் கான் எனும்  ‘அற்புதன்’

 

தனது பிளைட், லெந்த், பந்தின் திசை மூலம் பல பேட்ஸ்மென்களை திணறடித்து வரும் ரஷீத் நேற்றும் அற்புதமாக வீசி ஒரே ஓவரில் சன் ரைசர்ஸை போட்டிக்குள் கொண்டு வந்தார். 3வது ஓவர் வரை ரஷீத் விக்கெட் எடுக்காவிட்டாலும் அவரது சிக்கனம் கருதி வில்லியம்சன் 4வது ஓவரையும் அவரிடத்தில் கொடுத்தார். இந்த ஓவர் மெய்டனாக அமைந்ததோடு கொலின் மன்ரோ மற்றும் அக்சர் படேல் விக்கெட்டுகளையும் எடுத்துக் கொடுத்தார் ரஷீத். இதனையடுத்து கடைசி 5 ஒவர்களில் 52 ரன்கள் தேவை என்று சன் ரைசர்ஸ் சமன்பாடு மாற பிற்பாடு அத்தனை நெருக்கடி, ட்ராமாக்கள், பரபரப்புக்கும் காரணமானது, மூலகாரணம் ரஷீத்தின் இந்த ஓவர்.

rashid.jpg 

இதன் பிறகுதான் ரிஷப் பந்த் புகுந்து வெளுத்து வாங்கினார், டெல்லி கேப்பிடல்ஸ் கடைசி நேர பரபரப்புக்குப்பிறகு வென்று, சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 

அனுபவ சன்ரைசர்ஸ் பேட்டிங்:

 

முன்னதாக சன் ரைசர்ஸ் அணி தன் பவர் ஹிட்டிங்கை மார்டின் கப்தில் மூலம் தொடங்கியது. முதலில் இஷாந்த் சர்மாவை பார்வையாளர்கள் பகுதிக்கு 2ம் மாடிக்கு சிக்சருக்கு அனுப்பினார். பிறகு தன் சகாவான ட்ரெண்ட் போல்ட்டையும் விட்டு வைக்காமல் கவர், பாயிண்டில் 2 சிக்சர்கள் வெளுத்துக் கட்டினார் கப்தில். இடையே சஹா 8 ரன்களில் இஷாந்த்திடம் காலியாக கப்தில் தொடர்ந்தார். இஷாந்தை ஒரு பவுண்டரி, அக்சர் படேலை மீண்டும் ஒரு சிக்ஸ் என்று அடிக்க மணீஷ் பாண்டே 2 பவுண்டரிகளை 6வது ஒவரில் அடிக்க பவர் ப்ளேயில் ஹைதராபாத் 54 ரன் என்று நல்ல தொடக்கம் கண்டது.

 

ஆனால் 19 பந்துகளில் 1 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 36 ரன்கள் எடுத்த கப்தில் அமித் மிஸ்ரா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.  அக்சர், மிஸ்ரா தொடர பவுண்டரிகள் அரிதாயின.  7 ஓவர்களில் 34 ரன்கள்தான் வந்தது. பாண்டே 36 பந்துகளி 30 ரன்களையும், கேன் வில்லியம்சன் 27 பந்துகளில் 28 ரன்களையுமே எடுக்க முடிந்து இருவரும் அடுத்தடுத்து வெளியேற 16வது ஓவரில் சன் ரைசர்ஸ் 111/4 என்றுதான் தடுமாறியது. ஆனால் 17வது ஒவரில் அக்சர் படேல் 10 ரன்களையும் 18வது ஓவரில் கீமோ பால் 10 ரன்களையும் 19வது ஒவரில் ட்ரெண்ட் போல்ட்டை விஜய் சங்கர் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் என்று பதம் பார்த்து 11 பந்துகளில் அபாரமான 25 ரன்களையும் விளாசித் தள்ள 19வது ஓவர் முடிவில் ஹைதராபாத் 151/5 என்று எழுந்தது. கடைசி ஓவரில் கீமோ பால் சிறப்பாக வீச அதில் 3 விக்கெட்டுகள் காலியானாலும் நபியின் சிக்ஸுடன் 11 ரன்கள் வர சன் ரைசர்ஸ் சரிவு நிலையிலிருந்து மீண்டு வெற்றி பெற வாய்ப்பு கொடுக்கும் 162 ரன்களை எட்டியது. மிடில் ஓவர்கள் சொதப்பலினால் சன் ரைசர்ஸ் 170-175 ரன்களை எட்ட முடியவில்லை. காரணம் அக்சர் படேல், அமித் மிஸ்ரா இணைந்து 8 ஓவர்களில் வெறும் 46 ரன்களையே கொடுத்தனர். குறிப்பாக அமித் மிஸ்ரா 4 ஒவர் 16 ரன் ஒரு விக்கெட். கீமோ பால் 4 ஓவர் 32 ரன் 3 விக்கெட். இஷாந்த் சர்மா, ட்ரெண்ட் போல்ட் சொதப்பி இருவரும் 7 ஓவர்களில் 71 ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

 

ஆட்ட நாயகனாக ஒரு ஓவரில் ஆட்டத்தை மாற்றிய ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டார். மும்பை இந்தியன்ஸுடன் மோதப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் நாக் அவுட் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸைச் சந்திக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close