[X] Close

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் டெல்லி - ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை


  • kamadenu
  • Posted: 08 May, 2019 08:09 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் இன்று இரவு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விசாகப்பட்டினத்தில் இன்று இரவு நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் தோல்வியடையும் அணியானது தொடரில் இருந்து வெளியேறும். மாறாக வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் மோதும்.

இந்த சீசனில் அணியின் பெயர் மாற்றத்துடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அபாரமாக விளையாடி வருகிறது. பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஆலோசகர் கங்குலி ஆகியோரது வழிகாட்டலில் இளம் வீரர்கள் தங்களது திறனை வெளிக்கொண்டு வருவதில் அதிகம் முனைப்பு காட்டுவது அணியின் பெரிய பலமாக உள்ளது. லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் தலா 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளை பெற்றன. ஆனால் ரன்ரேட் விகித அடிப்படையில் டெல்லி அணி 3-வது இடத்தையே பிடித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் முதல் இரு இடங்களுக்குள் வர முடியாமல் போனது. ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணியானது இதுவரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இல்லை. மேலும் 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தியதன் காரணமாகவே டெல்லி கேபிடல்ஸ் அணி இம்முறை அடுத்த சுற்றை நோக்கி நகர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக தனது அணி ரசிகர்கள் அடைந்த ஏமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்களின் முகத்தில் புன்னகையை மலரச் செய்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி.

இந்த சீசனிலும் டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு கட்டத்தில் தடுமாற்றம் அடைந்தது. தொடக்க ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக மோசமான வகையில் தோல்வியடைந்த டெல்லி கேபிடல்ஸ் அணி தனது சொந்த மண்ணில் ஹைதராபாத் அணியிடமும் வீழ்ந்திருந்தது. ஆனால் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் அணியின் செயல்திறனில் பெரிய அளவில் மாற்றம் நிகழ்ந்தது.

தொடக்க பேட்டிங்கில் ஷிகர் தவண், பிரித்வி ஷா ஜோடி பவர்பிளே ஓவர்களை சிறப்பாக கையாண்டு சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றனர். இந்த சீசனில் 450 ரன்கள் சேர்த்து அணி நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ள ஷிகர் தவணிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் (400 ரன்கள்) அணியை முன்னின்று வழி நடத்துவதிலும், ரன்கள் சேர்ப்பதிலும் சக அணி வீரர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக உள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத ரிஷப் பந்த், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக முக்கியமான தருணங்களில் மட்டையை சுழற்றி ரன்கள் வேட்டையாடுவது கூடுதல் பலம் சேர்ப்பதாக உள்ளது. முன்னணி வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா காயம் காரணமாக விலகியுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு சற்று பலவீனம்தான். எனினும் அவரது இடத்தை டிரென்ட் போல்ட் பூர்த்தி செய்யக்கூடும்.

கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி லீக் சுற்றில் 12 புள்ளிகளே பெற்ற போதிலும் ரன் ரேட் விகித அடிப்படையால் பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 12 புள்ளிகளை பெற்ற அணியொன்று பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவது இதுவே முதன்முறையாகும்.

டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் இல்லாதது அணியின் பேட்டிங் திறனைவெகுவாக பாதித்துள்ளது. மணீஷ் பாண்டே பேட்டிங்கில் நம்பிக்கையுடன் செயல்பட்டாலும் அவர், அதிக பந்துகளை எதிர்கொள்வது சற்று பலவீனமாக உள்ளது. மேலும் அணியின் நடுவரிசை பேட்டிங்கும் புத்துணர்ச்சியின்றி காணப்படுகிறது.

இதனால் வில்லியம்சன், மார்ட்டின் கப்தில் ஆகியோர் பெரிய அளவிலான இன்னிங்ஸை விளையாட வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை தொடர் நெருங்கி வருவதால் விஜய் சங்கரும் தனது செயல் திறனில் உத்வேகம் காட்ட வேண்டிய நிலையில் உள்ளார். பந்து வீச்சில் ரஷித் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது ஆகியோர் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடித்தரக்கூடும்.

எதிர்பார்க்கப்படும் லெவன்ஸ்

டெல்லி கேபிடல்ஸ்: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), பிரித்வி ஷா, ஷிகர் தவண், ரிஷப் பந்த், காலின் இங்க்ராம், ஷேர்பான் ரூதர்போர்டு, கீமோ பால், அக்சர் படேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, டிரென்ட் போல்ட்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், மணீஷ் பாண்டே, விஜய் சங்கர், விருத்திமான் சாஹா, யூசுப் பதான், மொகமது நபி, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது.

நேரம்: இரவு 7.30

இடம்: விசாகப்பட்டினம்

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close