[X] Close

டாஸ் வென்றார் அஸ்வின்: முதலிடத்தைத் தக்கவைக்குமா சிஎஸ்கே? புள்ளிவிவரங்களுடன் ஓர் அலசல்


  • kamadenu
  • Posted: 05 May, 2019 16:22 pm
  • அ+ அ-

-போத்திராஜ்

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்க உள்ள ஐபிஎல் டி20 போட்டியின் சிஎஸ்கே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

12-வது ஐபிஎல் சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிகின்றன. தற்போது முதலிடத்தில் 18 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணியும், 16 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ், 18 புள்ளிகளுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் உள்ளன. மூன்று அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளன.

ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் 4-வது அணி குறித்து இன்னும் முடிவாகவில்லை. சன்ரைசர்ஸ் 12 புள்ளிகளுடன் நல்ல ரன் ரேட்டில் இன்று இரவு நடக்கும் மும்பை இந்தியன்ஸ், கேகேஆர் அணியின் போட்டியின் முடிவுக்காகக் காத்திருக்கிறது.

அதேசமயம், முதலிடத்தைப் பிடிக்க சிஎஸ்கே அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. கேகேஆர் அணியை வீழ்த்திவிட்டால் முதலிடத்தை மும்பை அணி பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால், கேகேஆர் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் தீர்மானத்துடன் வெறிகொண்டு ஆடி வருவதால், வீழ்த்துவது எளிதானதல்ல.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடந்த கால கடைசி லீக் போட்டிகளின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால் அனைத்தும் பாதகமாகவே இருக்கிறது. அதாவது கடைசி லீக்கில் சிஎஸ்கே விளையாடிய பெரும்பாலான சீசன்களில் தோல்வி அடைந்துள்ளது.

ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் அஸ்வினிடம் சிஎஸ்கே அணி தோற்றாலும், பஞ்சாப் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லமுடியாது. அதற்கு அதிகமான ரன் ரேட்டில் வெல்ல வேண்டும்.

அதாவது சிஎஸ்கே அணியை 251 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால்தான் பஞ்சாப் அணியால் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். ஆனால், ஐபிஎல் வரலாற்றிலேயே 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே அதிகபட்ச வித்தியாசம். அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ஸ்கோர் 263 ரன்களும், குறைந்தபட்சம் 49 ரன்களும்தான். அவ்வாறு பார்த்தாலும் 214 ரன்கள் தான் வித்தியாசம் வருகிறது. ஆதலால், பஞ்சாப் அணி வென்றாலும் பயனில்லை.

ஆனால், ஒருவேளை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றால், அது சிஎஸ்கே அணியின் முதலிடத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் நிச்சயம் ஆபத்து வரக்கூடும். ஏனென்றால், கடந்த கால சீசன்களில் கடைசியாக ஆடிய  லீக் ஆட்டங்களில் அதாவது, 2008-ம் ஆண்டில் டெல்லி அணி வென்றது. 2009, 2010-ம் ஆண்டுகளில் பஞ்சாப் அணி வென்றது. 2011-ம் ஆண்டில் ஆர்சிபி தோற்றது, 2012-ல் பஞ்சாப் வென்றது. 2013-ம் ஆண்டில் ஆர்சிபி தோற்றது. 2014-ம் ஆண்டில் ஆர்சிபி வென்றது. 2015, 2018-ம் ஆண்டில் பஞ்சாப் அணி வென்றது.

che.jpg 

ஆக கடந்த 10 ஆண்டுகளில்  கடைசி லீக் ஆட்டங்களில் 2 முறை மட்டுமே சிஎஸ்கே வென்றுள்ளது. மற்ற 8 சீசன்களிலும் தனது கடைசி லீக் ஆட்டங்களில் தோற்றுள்ளது. அதிலும் அதிகமாக பஞ்சாப்பிடம தோல்வி அடைந்துளளது குறிப்பிடத்தக்கது.

புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து சிஎஸ்கே இருக்க வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வெல்வது கட்டயமாகும். ஒருவேளை சிஎஸ்கே தோற்கும் பட்சத்தில், கேகேஆர் அணியை மும்பை அணி வென்றால், முதலிடத்தை மும்பை அணி கைப்பற்றும்.

அதேசமயம், நிகர ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே மோசமாக இருப்பதால், இன்றைய போட்டியில் தோற்றாலும் மோசமாக தோற்காமல் சிஎஸ்கே இருப்பது அவசியமாகும். அவ்வாறு தோற்றால், நிகர ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு டெல்லி 2-வது இடத்தை தக்கவைக்கும்

அதாவது, 180 ரன்களை சேஸிங் செய்யும்போது, 41 ரன்களுக்கு மிகாமல் தோற்றால் பரவாயில்லை. அதற்கு அதிகமான ரன்களில் சிஎஸ்கே தோற்றால் அது பாதகமாக அமைந்து விடும். முதலில் பேட் செய்தால் 160 ரன்கள் அடித்து எதிரணியை 15 ஓவர்களில் சுருட்டினால், அது சிஎஸ்கேவுக்கு முதலிடத்தைத் தக்கவைக்கவும், முதல் தகுதிச்சுற்றை சென்னையிலும் நடத்த வாய்ப்பு கிடைக்கும்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close