[X] Close

சன்ரைசர்ஸுக்கு 'செக்': வரலாறு படைத்த ஹெட்மயர், குர்கீரத் மான்; பெங்களூருக்கு பயனில்லாத வெற்றி


  • kamadenu
  • Posted: 05 May, 2019 13:38 pm
  • அ+ அ-

-போத்திராஜ்

ஷிம்ரன் ஹெட்மயர், குர்கீரத் சிங் மான் ஆகியோரின் அதிரடியான் பேட்டிங்கால் பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற முடியாமல், தொடரில் இருந்து வெளியேறிவிட்ட கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு இந்த வெற்றியால் எந்தவிதமான பயனும் இல்லை.  ஆனால் நிச்சயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. 14 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி 5 வெற்றிகள், 8 தோல்விகள் என மொத்தம் 11 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

அதேசமயம், சன்ரைசர்ஸ் அணி 14 போட்டிகளில் 6 வெற்றிகள், 8 தோல்விகள் என மொத்தம் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு இருக்கும் சாதகமான ஒரே விஷயம் ரன் ரேட்டையில் இன்னும் அந்த அணி பிளஸ்ஸில் இருப்பதுதான்.

இன்று மாலை நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணியிடம் கேகேஆர் அணி தோற்றால் மட்டுமே சன்ரைசர்ஸ் அணிக்கான ப்ளே ஆஃப் பாதை தெளிவாகும். ஒருவேளை கேகேஆர் அணி வென்றுவிட்டால், சன்ரைசர்ஸ் அணி நடையைக் கட்ட வேண்டியதுதான்.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. 176 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 4 பந்துகள் மீதம் இருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

பெங்களூரு அணியின் வெற்றிக்கு மேற்கிந்தியத் தீவுகள் ஷிம்ரன் ஹெட்மயர், குர்கீரத் மான் ஆகியோர் முக்கியக் காரணமாக இருந்தனர். பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ், பர்தீவ் படேல் ஆகியோர் பொறுப்பில்லாமல் ஆட்டமிழந்து செல்ல 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பெங்களூரு அணி.

mann.jpg 

4-வது விக்கெட்டுக்கு ஹெட்மயர், குர்கீரத் மான் இருவரும் சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 144 ரன்கள் சேர்த்தனர். ஐபிஎல் வரலாற்றிலேயே 4-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தது கிடையாது. இருவரும் சேர்த்து புதிய வரலாறும் , சாதனையும் படைத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பின் கோலி, டிவில்லியர்ஸ் இல்லாமல் ஆர்சிபி அணியில்  100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைந்தது முதல் முறையாகும்.

அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 47 பந்துகளில் 75 சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டநாயகன் விருதும் ஹெட்மயருக்கு வழங்கப்பட்டது. இவருக்குத் துணையாக ஆடிய குர்கீரத் மான் 48 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இவர்கள் இருவரையும் பிரிக்க சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்ஸன் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் பயனில்லை. இருவரும் அணியை அனாசயமாக ஆடி அணியை வெற்றிக்கு நகர்த்திச் சென்றனர். பவர் ப்ளேயில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்களும், 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்களும் சேர்த்தது பெங்களூரு அணி.

kalee.jpg 

சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துவீச்சையும் ஹெட்மயர், குர்கீரத் இருவரும் அடித்து நொறுக்கினர். அதிலும் குறிப்பாக ரஷித் கான் ஓவரை ஹெட்மயர் திட்டமிட்டு அடித்து விளாசினார். ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 44 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதுமட்டுல்லாமல் நேற்று டென்ஷனில் சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் ஃபீல்டிங், கேட்சுகளை கோட்டை விட்டனர். குறிப்பாக யூசுப் பதான் கையில் வந்த கேட்ச்சை விட்டு ஹெட்மயருக்கு வாழ்வு கொடுத்தார். பல ஃபீல்டிங்கையும் தவறவிட்டார்.

ரஷித் கான் வீசிய 18-வது ஓவரில் ஹெட்மயர் 75 ரன்களில் ஆட்டமிழக்க, கலீல் அகமது வீசிய 19-வது ஓவரில் குர்கீரத் மான் 65 ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு தென்பட்டது. வாஷிங்டன் சுந்தர் வந்தவேகத்தில் கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. முகமது நபி வீசிய முதல் இரு பந்துகளில் இரு பவுண்டரிகள் அடித்து உமேஷ் யாதவ் அணியை வெற்றி பெற வைத்தார். 4 பந்துகள் மீதம் இருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்து பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முன்னதாக, டாஸ் வென்ற பெங்களூரு அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு கப்தில், சாஹா நல்ல தொடக்கம் அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். சைனி 20 ரன்களிலும், கப்தில் 30 ரன்களிலும், மணிஷ் பாண்டே 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பவர் ப்ளேயில் சன்ரைசர்ஸ் அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 52 ரன்களும் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களும் சேர்த்தது.

willam.jpg 

முப்பரிமாண வீரர் என்று கூறப்படும் விஜய் சங்கர் இந்த தொடர் முழுவதும் சொதப்பலாக விளையாடி வருகிறார். இவரின் மோசமான ஆட்டம் நேற்றும் தொடர்ந்தது 27 ரன்களில் விஜய் சங்கர் ஆட்டமிழந்தார். ஆல்ரவுண்டர், முப்பரிமாணமாக விளையாடக் கூடியவர் என்ற பெயரில் இவரை உலகக் கோப்பைப் போட்டிக்கு தேர்வு செய்துள்ளார்கள். விஜய் சங்கர் விமர்சனங்களுக்கு ஆளாகாமல் இருத்தல் நல்லது. விஜய் சங்கருக்கு அடுத்தார்போல் களமிறங்கிய யூசுப் பதான்(3), முகமது நபி(4), ரஷித் கான்(1) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சன்ரைசர்ஸ் அணியில் சொல்லிக் கொள்ளும் வகையில் கேப்டன் வில்லியம்ஸன்  மட்டுமே அதிரடியாக பேட் செய்து ரன்களைக் குவித்தார். 38 பந்துகளில் அரை சதம் அடித்த வில்லியம்ஸன், 65 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.

20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணித் தரப்பில் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், சைனி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close