[X] Close

மின்னல் வேக ஸ்டம்பிங்கில் அசத்தும் தோனி: கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டு


  • kamadenu
  • Posted: 05 May, 2019 08:06 am
  • அ+ அ-

மின்னல் வேக ஸ்டம்பிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி அசத்தி வருகிறார். அவருக்கே உரிய தனிப்பட்ட திறமைதான் இதற்குக் காரணம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் கிறிஸ் மோரிஸை, மின்னல் வேக ஸ்டெம்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார் தோனி. மோரிஸின் வலதுகால் கிரீஸ் எல்லைக்குள் வைப்பதற்கு சில மைக்ரோ விநாடிகளுக்கு முன்பு ஸ்டம்புகளைத் தட்டிவிட்டு அவரை ஆட்டமிழக்கச் செய்த தோனிக்கு பாராட்டுகள் குவிந்தன.

ஒரு விநாடியில் 16-ல் ஒரு பங்கு நேரத்தில் அந்த ஸ்டம்பிங்கைச் செய்துள்ளார் தோனி. அதாவது ஸ்மார்ட்போனில் நாம் விரலால் வேகமாக தட்டுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பந்து வரும் வேகம், பந்து ஆடுகளத்தில் விழுந்து எழும்பி வரும் அளவு குறித்து தோனியின் மூளை எடுத்துச் சொல்ல, அவரது கைகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு ஸ்டம்பிங்கைச் செய்கிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பேட்ஸ்மேன் சரியாக காலை கிரீஸுக்குள் வைக்க சில மைக்ரோ விநாடிகளே இருக்கும் நிலையில் கச்சிதமாக பெய்ல்ஸ்களை தட்டி விட்டுவிடுகிறார் தோனி. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த காட்சி அரங்கேறி விடுகிறது. இதனால்தான் உலகத்தரம் வாய்ந்த விக்கெட்கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக தோனி அறியப்படுகிறார் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதேபோட்டியின்போது டெல்லி வீரர் அமித் மிஸ்ராவை, ஒரு விநாடியில் 11-ல் ஒரு பங்கு நேரத்தில் ஸ்டம்பிங் செய்தார் தோனி. கடந்த ஆண்டு மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின்போது கீமோ பாலை ஒரு விநாடியில் 10-ல் ஒரு பங்கு நேரத்தில் ஆட்டமிழக்கச் செய்தார் தோனி.

இதனால், ஸ்டம்புகளுக்கு பின்னால் நிற்கும் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டை (ஜமைக்கா) போல தோனி செயல்படுகிறார் என்று பாராட்டுகளைக் குவிக்கிறார்கள் விமர்சகர்கள்.

தோனியின் ஸ்டம்பிங்கை பாராட்டாத கிரிக்கெட் விமர்சகர்களும், வல்லுநர்களும் இல்லை என்றே கூறலாம்.

அமித் மிஸ்ரா ஆட்டமிழந்ததை உதாரணமாக எடுத்துக்கொண்டால், பந்து ஆப்-ஸ்டம்புக்கு வெளியே விழுந்து திரும்புகிறது. அமித் மிஸ்ரா வலது கை ஆட்டக்காரர் ஆவார். ஆனால் பந்து எப்படி வரும் என்பதை முன்னதாக கணித்த தோனியின் கைகளில் சரியாக பந்து தஞ்சம் புகுகிறது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து மிஸ்ராவை அவுட்டாக்கினார் தோனி.

கிளவுஸ் அணிந்த அவரது கைகள் பெரும்பாலும் ஸ்டம்புகளை ஒட்டியே பயணம் செய்யும். தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பந்தையும் ஸ்டம்பிங் செய்ய தோனி முயல்வார். அதாவது பேட்ஸ்மேன் தவறு செய்து கிரீஸை விட்டு வெளியேறும் தருணத்துக்காக தோனி காத்திருக்கிறார். அதே நேரத்தில், அவர் உடல் வளைவது இல்லை. மாறாக அவரது கைகள் மட்டுமே முன்னேறுகின்றன என்று விமர்சகர்கள் வாயார பாராட்டுகின்றனர்.

வழக்கமாக விக்கெட் கீப்பர்கள், பந்துகளை கைப்பற்றி பின்னர் ஸ்டம்பிங் செய்வர். ஆனால் தோனியோ, பந்துகளை பிடிக்காமல் பந்துகள் தனது கையுறைகளுக்குச் செல்லுமாறு கைகளை நகர்த்துகிறார். பந்துகள் தஞ்சமடைந்ததும் அவரது மணிக்கட்டை பிரயோகித்து ஸ்டம்பிங் செய்கிறார்.

இந்த புதுமையான டெக்னிக்தான் ஸ்டம்பிங்கில் தோனியை புகழ்பெறச் செய்தது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஸ்டம்பிங்கில் முக்கியமே பேட்ஸ்மேனின் விநாடி நேர தவறுதான். அந்தத் தவறை தனக்கு சாதகமாக்கி அவுட்டாக்குகிறார் தோனி. வழக்கமான விக்கெட் கீப்பர் செய்யும் வேலையை தோனி செய்திருந்தால், அன்றைய ஆட்டத்தில் மோரிஸ் ஆட்டமிழக்காமல் தப்பித்திருப்பார் என்பதே நிதர்சனம்.

இந்தத் தொழில்நுட்பத்தை அவர் தினந்தோறும் மேம்படுத்தி வருகிறார். ஜடேஜா போன்றவர்கள் பந்துவீசும் வேகம் அதிகம். குறிப்பாக அவர் மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவார். அதுபோன்ற நேரங்களில் பந்துகளை சரியாக பிடிப்பது என்பது முக்கியம். அதைத் தவறவிட்டால், ஸ்டம்பிங்கும் தவறவிடப்படும்.

ஆனால் பந்துகள் பெரும்பாலும் தனது கையுறைகளை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்வதற்கான திறமையும், பயிற்சியும் அவரிடம் உண்டு.

மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான இலங்கை முன்னாள் கேப்டன் குமார சங்கக்காராவை விட விக்கெட் கீப்பிங்கில் அதிக மேம்படுத்தப்பட்ட திறமை, வேகம், விவேகத்தைப் பெற்றுள்ளவர் தோனி.

இதுகுறித்து இந்தியாவின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் கூறும்போது, “மற்ற விக்கெட் கீப்பர்களில் இருந்து தோனி வித்தியாசமானவர். பந்துவீசப்படும்போது விக்கெட்டுக்குப் பின்னால் அவரது வலது காலை இழுத்தவாறு செல்கிறார். இடது கால் தரையில் நிலைத்திருக்கும். இந்த தொழில்நுட்பம் பந்தைப் பிடிப்பதற்கும், பேட்ஸ்மேன்கள் பந்தை தட்டிவிட்டால் ரன் எடுக்காமல் தடுப்பதற்கும் உதவுகிறது.

அவரது டெக்னிக்கைவிட அவரது மூளைதான் அதிவேகத்தில் உத்தரவைப் பிறப்பித்து கைகளைக் கொண்டு செல்கிறது. பந்தைப் பார்க்கும்போது, அவரது கண்கள் மூலம் ஸ்டம்புகள் எங்கே இருக்கிறது. பேட்ஸ்மேனின் கால் எங்கே இருக்கிறது என்பதை கணித்துக் கொள்கிறார். இதுதான் தோனியின் மாயாஜால ஸ்டம்பிங்கின் ரகசியம்” என்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close