[X] Close

'ஒரு ரெக்கார்டும் இல்லை; திமிர்தான்: பிராட்மேன், ஜேம்ஸ்பாண்ட் கலவைன்னு நினைப்பு'- கம்பீரை வறுத்தெடுத்த அப்ரிடி


  • kamadenu
  • Posted: 04 May, 2019 13:05 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

கம்பீரிடம் ஒரு ரெக்கார்டும் (சாதனை) இல்லை. முழுவதும் திமிர்தான் மண்டையில் இருக்கிறது. மனதில் பிராட்மேன், ஜேம்ஸ்பாண்ட் கலவையில் இருக்கிறோம் என்ற நினைப்புடன் இருப்பார் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி காட்டமாகத் தெரிவித்துள்ளார்

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து 'தி கேம்சேஞ்சர்' எனும் புத்தகம் எழுதியுள்ளார். இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போது டெல்லி கிழக்குப்பகுதி பாஜக வேட்பாளருமான கவுதம் கம்பீர் குறித்து கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்.

இந்திய அணிக்காக கம்பீர் 58 டெஸ்ட் போட்டிகள், 147 ஒருநாள் போட்டிகள், 37 டி20 போட்டிகளில் விளையாடி ஒட்டுமொத்தாக 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி தன்னுடைய அணிக்காக பெரும்பாலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியவர்.

398 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அப்ரிடி 8 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். ஆனால், ஒருநாள் போட்டியில் கம்பீரின் சராசரியாக 40 ரன்களைக் காட்டிலும் அப்ரிடி குறைவாக 27 ரன்களே வைத்துள்ளார். டெஸ்ட் போட்டியிலும் கம்பீர் 42 சராசரி வைத்துள்ள நிலையில் அப்ரிடி 27 சராசரி வைத்துள்ளார்.

gambhir-afridi (1).jpg

தன்னுடைய நூலில் கம்பீர் குறித்து அப்ரிடி குறிப்பிட்டுள்ளதாவது:

''கிரிக்கெட்டிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட்டில் இந்திய வீரர் கவுதம் கம்பீர் வித்தியாசமானவர் என்பதைவிட மோசமானவர்.

கம்பீருக்கு மனரீதியாக ஏதோ பிரச்சினை இருக்கிறது. எந்தவிதமான ஆளுமைத் திறனும் கம்பீருக்கு கிடையாது. கிரிக்கெட்டில் ஒரு சாதாரண வீரர், எந்தவிதமான ரெக்கார்டும், குறிப்பிட்ட சாதனையும் அவருக்குக் கிடையாது. ஆனால், ஏராளமான திமிருடன் நடந்து கொள்வார்

கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன், ஹாலிவுட்டின் ஜேம்ஸ் பாண்ட் ஆகியோரின் கலவையில் உருவாகியவன் என்ற நினைப்போடுதான் கம்பீரின் செயல்பாடு இருக்கும். கராச்சியில் நாங்கள் இருவரும் ஒருவொருக்கு ஒருவர் மோதிக்கொண்டோம்.

மிகவும் எளிமையாகச் சொல்வதென்றால், எனக்கு மகிழ்ச்சியாக, எளிமையாக இருக்கும் மக்களைப் பிடிக்கும். ஆனால், அவர்கள் எனக்குப் போட்டியாக, ஆவேசமா இருக்கிறார்களா என்பது பிரச்சினையில்லை. ஆனால் கம்பீரிடம் அந்த நேர்மறையான சிந்தனையே இல்லை.

கடந்த 2007-ம் ஆண்டு கான்பூரில் நடந்த ஒருநாள் போட்டியில் எனக்கும், கம்பீருக்கும் மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நடுவர்கள் வந்து இருவரையும் பிரித்துவிட்டனர். அவர் இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே கைகலப்பு வந்திருக்கும்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கடந்த 2007-ம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியின்போது, கம்பீர் ஒரு ரன் எடுத்து முடித்துவிட்டு, 2-வது ரன்னுக்கு என்னை நோக்கி வேகமாக ஓடி வருகிறார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டோம்''.

இவ்வாறு அப்ரிடி தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close