[X] Close

கில் 'தில்'; அஸ்வின் அணியை வெளியேற்றிய கேகேஆர்: விடைபெறுகிறாரா கெயில்? வீரர்களை திட்டிய தினேஷ்


  • kamadenu
  • Posted: 04 May, 2019 10:23 am
  • அ+ அ-

-போத்திராஜ்

சுப்மான் கில், கிறிஸ் லின் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், மொஹாலியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 52-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13 ஆட்டங்களில் 6 வெற்றிகள், 7 தோல்விகள் என மொத்தம் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு வந்து ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. 18 ஓவர்களில் வெற்றி பெற்றதன் மூலம் ரன் ரேட்டையும் அதிகப்படுத்தியுள்ளது கேகேஆர் அணி.

நாளை மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஆட்டத்தில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி இருக்கிறது. அதேசமயம், இன்று சன்ரைசர்ஸ் அணி தோல்வி அடைந்தால், கொல்கத்தாவுக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவது இன்னும் எளிதாக இருக்கும்.

sandeep.jpg 

அதேசமயம், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி ஏறக்குறைய தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. இதுவரை 13 ஆட்டங்களில் 8 தோல்விகள், 5 வெற்றிகள் என 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் மோசமான ரன் ரேட்டில் இருக்கிறது. ஏற்ககுறைய ப்ளே ஆஃப் வாய்ப்பை அஸ்வின் அணி பறிகொடுத்துவிட்டது. அடுத்துவரும் சிஎஸ்கே அணியுடான ஆட்ட்தில் பஞ்சாப் வெல்வது கடினமானது.

முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. 184 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ஓவர்கள் மீதம் இருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

பஞ்சாப் செயல்பாடு மோசம்

அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் அணியின் பந்துவீச்சும், பேட்டிங்கும் நேற்று படுமோசமாக இருந்தது. பேட்டிங்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் 14 ரன்களில் ஏமாற்றமளித்தார். கடைசியில் சாம் கரன் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்ததும், பூரன் காட்டடியுமே ஸ்கோரை ஓரளவுக்கு நல்ல நிலைக்குக் கொண்டு வந்தது. இருவரும் இல்லாவிட்டால், 130 ரன்களுக்குள் பஞ்சாப் சுருண்டிருக்கும்.

பந்துவீச்சில் முகமது ஷமியைத் தவிர வேறு எந்த பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்பாக வீசவில்லை. 3 ஓவர்களை வீசிய ஷமி 15 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். மற்ற வீரர்கள் ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினார்கள். அஸ்வின் பந்துவீச்சும் குறையில்லாமல் அடித்து நொறுக்கப்பட்டது.

கெயில் விடைபெறுகிறாரா?

ஏற்கெனவே கடந்த முறை ஏலத்தில் கிறிஸ் கெயிலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காத நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியது. அவரும் 2 ஆண்டுகளாக பஞ்சாப் அணிக்காக ஆடிவிட்டார். ஆனால், கோப்பையை வென்றுகொடுக்க முயற்சிப்பேன் என்று கெயில் பேசிய நிலையில் பஞ்சாப் அணி வெளியேறுவது உறுதியாகிவிட்டது. ஆதலால், கெயில் ஐபிஎல் தொடரில் விளையாடுவது இந்த முறை கடைசியாக இருக்கலாம். அடுத்த முறை ஏலத்தில் எடுக்கப்படுவாரா அல்லது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பாரா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

dine.jpg 

திட்டிய தினேஷ்

கொல்கத்தா அணி வீரர்களின் ஃபீல்டிங்கும், பந்துவீச்சும் ஒரு கட்டத்தில் மோசமாக இருந்தது. குறிப்பாக சுனில் நரேன், உத்தப்பா ஆகியோரின்  உடல்மொழி, பேச்சு ஆகியவை சரியில்லாமல் இருந்ததால், தினேஷ் கார்த்திக் அவர்களை ஆவேசமாகத் திட்டிவிட்டார். அதன்பின் இருவரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து விளையாடத் தொடங்கினர். இதுதொடர்பாக தினேஷ் கார்த்திக் தனது பேட்டியிலேயே கூறியுள்ளார்.

ஆட்டநாயகன் கில்

தொடக்க ஆட்டக்காரர்களான 19 வயது சுப்மான் கில், கிறிஸ் லின் ஆகியோரின் அதிரடி ஆட்டமே கொல்கத்தா அணியின் வெற்றியை எளிதாக்கியது எனலாம். இருவரும் விக்கெட்டுகளை நிலைப்படுத்திக்கொண்டு அதன்பின் அடித்து ஆடத் தொடங்கினர். குறிப்பாக கிறிஸ் லின் 4 ஓவர்களுக்கு பின் தனது காட்டடியை வெளிப்படுத்தினார்.

இந்த தொடரில் கில் தொடர்ந்து 2-வது முறையாக அரை சதம் அடித்துள்ளார். 49 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்த கில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார். பவர் ப்ளே ஓவரில் லின், கில் இருவரும் சேர்ந்து 62 ரன்கள் சேர்த்து பின்வரிசையில் வந்த வீரர்களின் சுமையை, டென்ஷனைக் குறைத்தனர்.

russe.jpg 

அதிலும் அஸ்வின் ஓவரில் கில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடித்து 18 ரன்கள் சேர்த்து அஸ்வினை வெறுக்கச் செய்தார். உத்தப்பா வழக்கம் போல் அதிரடியாக சில ஷாட்கள் அடித்து 22 ரன்களில் ஆட்டமிழந்தார். உத்தப்பாவும், கில்லும் 38 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்ட்ரூ ரஸல் 14 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து வெளியேறினார். கில்லுடன் சேர்ந்த ரஸல் 50 ரன்கள் சேர்த்துப் பிரிந்தார்.

அதிரடியாக ஆடிய கில் 36 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஆன்ட்ரூ டை ஓவரில் இரு சிக்ஸர்களை அடித்த ரஸலுக்கு ஒரு கேட்சை மயங்க் அகர்வால் தவறவிட்டார். ஆனால், ஷமி வீசிய 15 ஓவரில் ரஸல் சிக்ஸர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார்.

linn.jpg 

4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக், கில் இணைந்தனர். நிதானமாக கார்த்திக் ஆட்டத்தைத் தொடங்கினார். 3 ஓவர்களில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது சாம் கரன் வீசிய 18 ஓவரில் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 19 ரன்கள் சேர்த்து அணியை தினேஷ் கார்த்திக் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்து கேகேஆர் அணி வெற்றி பெற்றது.

தினேஷ் கார்த்திக் 21 ரன்களிலும், கில் 65 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணித் தரப்பில் ஷமி மட்டுமே சிறப்பாகப் பந்துவீசி ஒருவிக்கெட்டை வீழ்த்தினார். மற்ற வீரர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தனர்.

கெயில், ராகுல் ஏமாற்றம்

முன்னதாக, டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் (2) ரன்னிலும் , கெயில் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பவர் ப்ளே ஓவரில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்களும், 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 10 ஓவர்களில் 99 ரன்கள் சேர்க்கப்பட்டது.

sam.jpg 

மயங்க் அகர்வால் 36 ரன்களிலும், மன்தீப் சிங் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய பூரன் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 27 பந்துகளுக்கு 48 ரன்கள் சேர்த்து வெளியேறினார். சாம் கரன் கடைசியில் அதிரடியாக பேட் செய்து 23 பந்துகளில் அரை சதம் அடித்து 55 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close