[X] Close

கின்னஸ் உலகசாதனை படைத்த ஆந்திர கிரிக்கெட் வீரர் கைது


  • kamadenu
  • Posted: 03 May, 2019 18:33 pm
  • அ+ அ-

2014-ல் 82 மணி நேரங்கள் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடியதற்காக கின்னஸ் உலகசாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ஆந்திராவைச் சேர்ந்த நாகராஜு மச்சவரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

 

பிசிசிஐ-யின் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் அளித்த புகாரின் பேரில் மோசடி வழக்கில் நாகராஜு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அதாவது எம்.எஸ்.கே. பிரசாத் பெயரைப் பயன்படுத்தி தொழிலதிபர்கள் சிலரிடத்தில் அவர் பேசியுள்ளதாகவும் தன் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் நாகராஜு மேல் பிரசாத் போலீஸ் புகார் அளித்திருந்தார்.

 

அதாவது எம்.எஸ்.கே.பிரசாத் குரலை அப்படியே மிமிக்ரி செய்து நாகராஜு சில தொழிலதிபர்களிடம் பேசி சகாயம் அடைய முயன்றதாக பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

 

நாகராஜு 2014ம் ஆண்டு ரஞ்சி டிராபியில் ஆந்திர அணிக்கு ஆடினார். விசாகப்பட்டிணத்தின் எம்.வி.பி. காலனியில் உள்ள ஏ.எஸ்.ராஜா கல்லூரி மைதானத்தில் அவர் 82 மணி நேரம் இடைவிடாது கிரிக்கெட் ஆடி கின்னஸ் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸில் உலகசாதனைக்காக இடம்பெற்றார்.

 

அதாவது 25,000 பந்துகளை விளையாடி புனேயின் விராக் மாரேயின் சாதனையை அவர் முறியடித்தார்.

 

இந்நிலையில் எம்.எஸ்.கே.பிரசாத் குரலில் அவரைப்போன்றே பேசி தொழிலதிபர்களை ஏமாற்ற முயற்சி செய்த புகாரின் அடிப்படையில் கன்னாவரம் விமானநிலையம் அருகே நாகராஜு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போலீஸார் இருசக்கர வாகனம் மற்றும் ரூ.1.8 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

 

இது குறித்து அங்கிநீடு பிரசாத் என்ற அசிஸ்டண்ட் கமிஷனர் கூறும்போது, ‘அவர் சர்வதேச கிரிக்கெட் ஆட விரும்பினார், ஆனால் அவரது மோசடி செயல் இன்று அவரை கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியுள்ளது’ என்றார்.

 

ஏற்கெனவே தோனி பெயரில் கிரிக்கெட் அகாடமி ஆரம்பிப்பதாக வேணுகோபால் என்பவரை ஏமாற்றியிருக்கிறார் நாகராஜு. ஒருமுறை தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர் கண்டா ஸ்ரீனிவாச ராவின் உதவியாளர் என்று பொய் கூறி கேர் ஹாஸ்பிட்டல்ஸிலிருந்து ரூ.60 லட்சம் வாங்கிய வழக்கிலும் இவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

 

இன்னொரு முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் என்று பொய் கூறி டி20 டிக்கெட்டுகளை வாங்கித் தருவதாக இன்னொரு நபரையும் இவர் ஏமாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close