[X] Close

கிரிக்கெட் உலகை ஸ்தம்பிக்கச் செய்யும் வெளியீடு: ஷாகித் அஃப்ரீடியின் உண்மையான வயது என்ன? அவரே தன் சுயசரிதையில் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி


  • kamadenu
  • Posted: 02 May, 2019 20:05 pm
  • அ+ அ-

பாகிஸ்தான் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடியின் வயது கிரிக்கெட் உலகில் ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவர் தனது ‘கேம் சேஞ்சர்’ என்ற சுயசரிதை நூலில் தன் உண்மையான பிறந்த ஆண்டை வெளியிட்டுள்ளது பரபரப்பாகியுள்ளது.

 

இந்த சுயசரிதை நூலில் ஒரு அத்தியாயத்தில் அவர் தான் பாகிஸ்தான் சீனியர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டடு 1996ம் ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.அதில் தான் 1975ம் ஆண்டு பிறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 1975ம் ஆண்டு எந்த மாதம், எந்த தேதி என்பதை அஃப்ரீடி குறிப்பிடவில்லை.

 

அதாவது அவர் தான் அறிமுகமாகும் போது குறிப்பிட்ட வயதைக்காட்டிலும்  5 ஆண்டுகள் அவர் மூத்தவர். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் வீரர்கள் சுயவிவரம் குறித்தத் தகவலில் ஷாகித் அப்ரீடி பிறந்த ஆண்டு 1980 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் அதிகாரபூர்வமாகவும் பதிவாகியுள்ளது. அதாவது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அவர் பிறந்த தினம் மார்ச் 1, 1980 ஆகும்.

 

ஆனால் அவர் தன் சுயசரிதையில் தான் 1975ம் ஆண்டு பிறந்ததாக தேதி, மாதமெல்லாம் குறிப்பிடாமல் வெளியிட்டுள்ளார்.

 

முதன் முதலில் நைரோபியில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தானுக்காக ஆஜரான அஃப்ரீடி இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் எடுத்து அதிவேக ஒருநாள் சதம் குறைந்த வயதில் சதம் போன்ற சாதனைகளுக்குப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தார்.  அதாவது அதிகாரபூர்வ அவரது பிறந்த தின அடிப்படையில் 16வயதில் இந்த உலக சாதனை சதத்தை அடித்ததாக அவருக்கு பெயரும் புகழும் கூடிவந்தது.

 

இப்போது தெரிய வந்துள்ளது அவருக்கு அப்போது வயது 16 அல்ல 21 என்பது.

 

மேலும் அவர் தன் சுய சரிதையில் குழப்பமாக, “ரெக்கார்டின் படி எனக்கு அப்போது 19 வயது, 16 அல்ல. நான் 1975ல் பிறந்தவன். ஆம் அதிகாரிகள் என் வயதைத் தவறாகக் குறிப்பிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

 

 1975 என்றால் 1996 அறிமுகம் ஆகிறார் எனும்போது வயது 20, அல்லது 21 ஆக இருக்க வெண்டும். அப்ரீடி குறிப்பிட்டது போல் 19ஆக இருக்க முடியாது.

 

இதில் இன்னொரு விவகாரம் என்னவெனில் நைரோபிக்கு முதல் சர்வதேச போட்டியில் ஆடுவதற்கு முன்பாக மே.இ.தீவுகளில் பாகிஸ்தான் அண்டர்-19 அணியில் இடம் பெற்று ஆடிவந்தார், இப்போது அப்ரீடி வெளியிட்ட உண்மையான பிறந்த ஆண்டின் படி பார்த்தால் அவர் அண்டர்-19 அணியிலும் இடம்பெற்றிருக்கக் கூடாது.

 

இப்போது பாகிஸ்தான் பிரிமியர் லீகில் அவர் ஆடிய போது அவரது உண்மையான வயது 43 அல்லது 44ஆக இருக்க வேண்டும். 2010-ல் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு அறிவித்த போதே அவருக்கு 35 வயது என்றாகிறது. மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து கடைசியாக 2016 உலக டி20யில் ஆடும்போது அவருக்கு வயது 41 ஆக இருக்க வேண்டும்.

 

இப்போது அஃப்ரீடியின் சாதனைகள் அவர் மிகவும் சிறிய வயதில் செய்ததற்காகவா அல்லது வயதான பிறகு செய்ததற்காகவா? இதன் அடுத்த கட்ட பிரச்சினைகள் எப்படித் திரும்பும் என்பது கிரிக்கெட் உலகின் வரும் சில நாட்களில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close