[X] Close

இப்படியா நம் அணி வீரரையே அசிங்கமாக கேலி செய்வது? - தன் அணி ரசிகர்களையே கண்டித்த லியோனல் மெஸ்ஸி


  • kamadenu
  • Posted: 02 May, 2019 15:56 pm
  • அ+ அ-

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி முதல் சுற்று போட்டியில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் அணியான லிவர்பூல் அணியை பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. லியோனல் மெஸ்ஸி 2 கோல்களையும், சுவாரேஸ் ஒரு கோலையும் அடித்தனர்.

இந்நிலையில் முன்னாள் லிவர்பூல் வீரரான பிரேசிலின் பிலிப் கூர்ட்டின்ஹோ 146 மில்லியன் பவுண்டுகளுக்கு ஜனவரி 2018-ல் பார்சிலோனாவினால் வாங்கப்பட்டார். ஆனால் இவர் இந்த சீசனில் எதிர்பார்ப்புக்கு இணங்க ஆடவில்லை.

நேற்றும் கூட்டின்ஹோ எதிர்பார்ப்புக்கு இணங்க ஆடாததால் அவர் இறங்கியது முதல் பார்சிலோனா ரசிகர்கள் அவரிடம் பந்து வரும்போதெல்லாம் விசில் அடித்தும் பலவிதங்களிலும் அவரை கடும் கேலி செய்தனர். இதனையடுத்து அவர் ஓய்வறைக்கு அழைக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நெல்சன் செமிடோ இறக்கப்பட்டார்.

இது பார்சிலோனா அணியின் ஸ்டார் வீரர் மெஸ்ஸிக்குப் பிடிக்கவில்லை, “அணியின் சகாவை இவ்வாறு அசிங்கமாக விசில் அடித்து இழிவு படுத்துவது தவறு. நம் அணி வீரரையே இழிவு படுத்தலாமா? அதுவும் அவரை களத்திலிருந்து அகற்றிய பின்பும் கேலி செய்வது என்ன நியாயம்?

நாம் அனைவரும் இதில் சேர்ந்துதான் ஆடுகிறோம். இறுதி வரை ஒற்றுமையாக இருக்க வேண்டும், இப்போது கோப்பையை வெல்வதற்கு அருகில் இருக்கிறோம். நான் இந்த சீசன் தொடங்கும்போதே கூறினேன், யாரையும் விமர்சிக்க வேண்டாம் என்று ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும்.

எங்களிடம் பந்து அதிகம் இல்லை என்பது எங்களுக்குப் புதிது, கொஞ்சம் தடுமாறினோம் ஆனால் ஆட்டம் அப்படித்தான் போகும், பந்து எங்களிடம் இருக்காது ஆனால் நாங்கள் வெற்றி பெறுவோம், இதுதான் கால்பந்து.

அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதி ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக ஆடினோம், 2வது பாதியில் அவர்கள் கொஞ்சம் நெருக்கடி கொடுத்தார்கள். ஆனால் அவர்களுக்கு அதிக கோல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வெளியில் ஆடும்போது ஒரு கோல் அவர்களுக்கு பெரிய சாதகமாக இருந்திருக்கும்.  ஆனால் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி இன்னும் முடிந்துவிடவில்லை, அவர்கள் சொந்த மண்ணில் ஆன்பீல்டில் எதிர்கொள்ளும் போது எங்களுக்கும் கடினமே.

தொடக்கத்தில் அவர்கள் கொஞ்சம் உடல்ரீதியாக தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர், அது எங்களுக்குப் பழக்கமில்லாதது, அதனால் கொஞ்சம் தடுமாறினோம்” என்றார் லியோனல் மெஸ்ஸி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close