[X] Close

'பந்தைப் பார் அடி’ - ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனியின் கடைசி ஒவர் விளாசல்கள்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 14:53 pm
  • அ+ அ-

-Muthukumar R_50162

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வலுவான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சிஎஸ்கே அணி வீழ்த்தியது, தோனியின் 22 பந்து 44 ரன்களும், ஸ்பின்னர்களின் பந்து வீச்சும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 99 ரன்களுக்கு முடக்கியது.

இதோடு மட்டுமல்லாமல் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் 3 பந்துகளில் 2 பிரமாதமான ஸ்டம்பிங்கையும் செய்தார் தோனி.  கிறிஸ் மோரிஸ், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோருக்கு காலை சற்று தூக்கலாமா என்று அவர்கள் நினைத்த மாத்திரத்தில் தூக்க தோனி பெய்ல்களைத் தூக்கினார். இரண்டு அதிவிரைவு ஸ்டம்பிங்குகள் டெல்லி அணியை பின்னுக்குத் தள்ளியது.

இதோடு மட்டுமல்லாமல் தோனி நேற்று தனது முதல் 13 பந்துகளில் 12 ரன்களையே எடுத்து நிதானித்தார் கடைசியில் 22 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்சர்கள் அடங்கும்.

கடைசி ஓவருக்கென்று அவர் பிரத்யேக உத்தி வைத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா தோனிக்கு வைடு ஆஃப் ஸ்டம்ப்பில் பந்தை பிட்ச் செய்வார் தோனி அதை அடிக்கத் திணறியிருக்கிறார்.

ஆனால் ட்ரெண்ட் போல்ட் நேற்று முதல் பந்தில் தோனி சுழற்றியும் மாட்டாதது போல் வீசினார், ஆனால் 2வது பந்தில் 2 ரன்களைக் கொடுத்தார். அடுத்த பந்து யார்க்கர் அல்ல. யார்க்கருக்கு சற்று முன்னால் பிட்ச் ஆனாலும் அது அடிக்கக் கூடியதே, தோனி அதனை நேராகத் தூக்கி பவுண்டரிக்கு விரட்டினார். தோனி யார்க்கரை ஹெலிகாப்டர் ஷாட் ஆடுகிறார் என்பதெல்லாம் கிளப்பிவிடப்பட்ட மாயைகள், யார்க்கர் போன்ற பந்தைத்தான் அவரால் அடிக்க முடியும். துல்லியமான யார்க்கரை யாராலும் அடிக்க முடியாது, சச்சின், ரிச்சர்ட்ஸ் உட்பட.  ஆகவே ஒன்று துல்லிய யார்க்கர் பந்து இல்லையேல் அது ஃபுல் லெந்த் அல்லது ஓவர் பிட்ச் பந்துதான் அதை சிக்சர் அடிப்பதற்கு  கொஞ்சம் நிதானமும் நிறைய பவரும் இருந்தால் போதுமானது.

பிறகு தவறாக ஒரு ஆஃப் கட்டரை வீசினார் பந்து கட் ஆகும் திசையில் அதனை தூக்கி அடித்து விட முடியும் அதைத்தான் தோனி செய்தார், சிக்ஸ். அடுத்து லெக் ஸ்டம்பில் கொண்டு வந்து ஷார்ட் பிட்சை வீசினார் ட்ரெண்ட் போல்ட் அதை சிக்ஸ் அடிக்க அங்கு தோனிதான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மொத்தத்தில் தப்புத் தப்பாக வீசினார் போல்ட். ஸ்கோர் 158லிருந்து 179 என்று உயர்ந்தது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் கடைசி ஓவர்களில் மட்டும் தோனி 227 பந்துகளில் 554 ரன்கள் எடுத்துள்ளதாக கிரிக் இன்போ புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது.  இந்த சீசனில் கடைசி ஓவர்களில் 21 பந்துகளைச் சந்தித்துள்ள தோனி அதில் 70 ரன்களை விளாசியுள்ளார், இந்தச் சாதனைக்கு அருகில் கூட யாரும் இல்லை.

தோனி கூறுவது என்ன?

பந்தைப் பார் அடி இதுதான் கடைசி ஓவருக்கான தாத்பர்யம். மேலும் அங்கு சிறிது நேரம் கிரீசில் நின்றதால் பந்துகளில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும், பிட்சில் என்ன மாற்றம் இருக்கும் என்பதைக் கணித்து விட முடிகிறது. இவற்றையெல்லாம் கணித்த பிறகே 20வது ஓவரில் எந்தப் பந்தையும் அடித்து நொறுக்கத் தயாராக வேண்டும்.

இத்தகைய பிட்ச்களில் எப்போதும் 10-15 பந்துகள் விளையாடுபவர் ஷாட்களை எளிதாக ஆட முடியும், புதிதாக வருபவர்கள் ஆடுவது கடினம். பந்துகள் அடிப்பதற்கு வாகாக வரும் பிட்ச் அல்ல இது. ராயுடு இறங்கியவுடன் ஆடுவது கடினம்.

அதனால்தான் ராயுடுவை சிங்கிளுக்கு அழைத்தேன், ரிஷப் பந்த்தும் அதற்கு உதவினார், அவர் த்ரோ அடிப்பதற்கு ஏதுவாக தன் கிளவ்களை அகற்றவில்லையே.. அதனால் எனக்கு சில விநாடிகள் கூடுதலாகக் கிடைத்தன.

இரண்டு ஸ்டம்பிங்குகள் பற்றி...

 

iyer.jpg 

டென்னிஸ் பந்து கிரிக்கெடிட்டிலிருந்து கற்றுக் கொண்டது அது. டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் நான் அதிகம் ஆடியுள்ளேன். முதலில் அடிப்படைகளை சரியாகச் செய்ய வேண்டும், பிறகு அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற வேண்டும். நிறைய பயிற்சி எடுக்க வேண்டும். நிறைய தவறுகள் செய்வோம் ஆகவே முதலில் அடிப்படைகளை சரி செய்து கொள்ள வேண்டும்.

பந்தைப் பிடித்தவுடன் கில்லிகளைத் தட்டி விட பயிற்சி எடுக்க வேண்டும், பைல்களை அடிப்பதில் குறைந்த நேரமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கூறினார் தோனி.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close