[X] Close

ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா மும்பை?


  • kamadenu
  • Posted: 02 May, 2019 08:57 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதேநேரத்தில் மீதமுள்ள இரு அணிகள் இன்னும் முடிவாகவில்லை.

தற்போதைய நிலையில் 3 முறை சாம்பியனான மும்பை அணி 12 ஆட்டங்களில் பங்கேற்று 7 வெற்றி, 5 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் 2016-ம்ஆண்டு சாம்பியனான ஹைதராபாத் அணி 12 ஆட்டங்களில் விளையாடி தலா 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது.

இதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மும்பை அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிளே ஆஃப் சுற்றுக்கு எளிதாக தகுதி பெற்றுவிடும். மாறாக ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் இரு அணிகளுமே 14 புள்ளிகளை பெற்று சமநிலையில் இருக்கும்.

இந்த சூழ்நிலை உருவானால் இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டங்களில் எதிரணியை கட்டாயம் வீழ்த்தியாக வேண்டும் என்ற கூடுதல் நெருக்கடிக்கு தள்ளப்படும். ஹைதராபாத் அணியில் ரன் வேட்டையாடி வந்த தொடக்க வீரரான ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக தாயகம் புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் 12 ஆட்டங்களில் 692 ரன்கள் குவித்திருந்த அவர் இல்லாதது, ஹைதராபாத் அணியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

வார்னர் இடத்தில் நியூஸிலாந்தின் மார்ட்டின் கப்தில் களமிறக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார்னர் இல்லாததால் கேப்டன் வில்லியம்சன், மணீஷ் பாண்டே, ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா உள்ளிட்டோர் பேட்டிங்கில் கூடுதல் பொறுப்பை சுமக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் இந்த சீசனில் ஹைதராபாத் அணியில் ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லை. மும்பை அணியின் பேட்டிங் வரிசை வலுவானது என்பதால் ஹைதராபாத் பந்து வீச்சாளர்கள் கூட்டாக ஒருங்கிணைந்த செயல்திறனை வெளிப்படுத்துவது அவசியம்.

மும்பை அணியானது பேட்டிங், பந்து வீச்சு, ஆல்-ரவுண்டர் வரிசையில் வலுவான வீரர்களை கொண்டுள்ளது. டாப் ஆர்டரில் 393 ரன்கள் குவித்துள்ள குயிண்டன் டி காக், 307 ரன்கள் சேர்த்துள்ள ரோஹித் சர்மா ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இறுதிக்கட்ட ஓவர்களில் ரன் வேட்டையாடும் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா (355 ரன்கள்), வலுவான ஹிட்டரான கெய்ரன் பொலார்டு (228) ஆகியோர் மட்டையை சுழற்ற ஆயத்தமாக உள்ளனர்.

சூர்யகுமார் யாதவ், கிருணல் பாண்டியா ஆகியோரும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் அணியின் வலு மேலும் அதிகரிக்கும். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, மலிங்கா, ஹர்திக் பாண்டியா, ராகுல் ஷகார் ஆகியோர் எதிரணிக்கு சவால் தரக்கூடும். இந்த சீசனில் மும்பை, ஹைதராபாத் அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியிருந்தது. இதற்கு இம்முறை பதிலடி கொடுப்பதில் ஹைதராபாத் அணி தீவிரம் காட்டக்கூடும்.

நேரம்: இரவு 8

இடம்: மும்பை

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close