[X] Close

வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே?- டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இன்று மோதல்


  • kamadenu
  • Posted: 01 May, 2019 09:28 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் கடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் நிகர ரன்ரேட் விகிதம் சற்று சரிந்ததால் 16 புள்ளிகளை கைவசம் வைத்துள்ள போதிலும் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது.

அதேவேளையில் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தோற்கடித்து 6 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக பிளே ஆஃப் சுற்றில் விளையாட தகுதி பெற்றது. 16 புள்ளிகளை பெற்றுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி நிகர ரன்ரேட் விகித அடிப்படையில் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்

தும் அணி லீக் ஆட்டத்தை முதல் இடத்துடன் நிறைவு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.

தோனி இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வி கண்டிருந்தது. இந்த ஆட்டத்தில் எந்த ஒரு கட்டத்திலும் போராடாமலேயே 109 ரன்களுக்கு சுருண்டதால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் செலுத்தி வந்த ஆதிக்கத்தை டெல்லி அணியிடம் இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

காய்ச்சல் காரணமாக கடந்த ஆட்டத்தில் களமிறங்காத தோனி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இன்று களமிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி மீண்டும் திரும்பும் பட்சத்தில் அணி புதுத்தெம்பை பெறும். மேலும் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் வந்தால் மட்டுமே சொந்த மண்ணில் தகுதி சுற்று 1 ஆட்டத்தை விளையாட முடியும் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பாதைக்கு திரும்புவதில் தீவிர கவனம் செலுத்தக்கூடும்.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. பேட்டிங்கில் ஸ்ரேயஸ் ஐயர், ஷிகர் தவண், ரிஷப் பந்த், பிரித்வி ஷா ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். எனினும் ரன்குவிக்க கடினமாக திகழும் சேப்பாக்கம் ஆடுகளம் இவர்களுக்கு சவால் தரக்கூடும்.

இம்ரன் தகிர், ஜடேஜா, ஹர்பஜன் சிங் ஆகியோரை கொண்ட சுழல் கூட்டணியிடம் இருந்து டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால்கள் காத்திருக்கிறது.  இந்த சீசனில் இரு அணிகளும் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த மார்ச் 26-ம் தேதி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்திருந்தது.

இதற்கு பதிலடி கொடுப்பதில் டெல்லி அணி முனைப்பு காட்டக்கூடும். அதேவேளையில் மீண்டும் ஒரு முறை டெல்லி அணியை வீழ்த்துவதிலும், லீக் சுற்றில் தனது சொந்த மைதானத்தில் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்வதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரம் காட்டக்கூடும்.

தோனி களமிறங்குவாரா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியா ளரான ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், “தோனி யின் உடல் நிலை சீரான வகையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. அவர், களமிறங்குவாரா? என்பது குறித்து ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே முடிவு எடுக்கப்படும். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சவுகரியமான வீரர்களை கொண்டே களமிறங்குவோம். கடந்த ஆட்டத்தில் பங்கேற் காத டு பிளெஸ்ஸிஸ், ஜடேஜா ஆகியோர் சிறந்த வடிவிலேயே உள்ளனர். இதனால் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்துக்கான அணித் தேர்வுக்கு அவர்கள் இருவரையும் கருத்தில் கொள்வோம். தோனி இல்லாத நிலையில் மற்ற வீரர்கள் அணியை முன்னெடுத்துச் செல்வதில் கவனம் செலுத்த வேண்டும். டெல்லி அணியிடம் இருந்து சிறந்த சவாலை எதிர்கொள்வோம் என்றே கருதுகிறேன். அந்த அணி இந்த சீசனில் வெளிப்படுத்தி வரும் சிறந்த திறனில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை” என்றார்.

நேரம்: இரவு 8

இடம்: சென்னை

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close