[X] Close

பெங்களூரு அணியுடன் இன்று மோதல்; வெற்றி நெருக்கடியில் ராஜஸ்தான்


  • kamadenu
  • Posted: 30 Apr, 2019 07:59 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப்சுற்றுக்கு முன்னேறுதவற்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்திலும், டெல்லி அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது ராஜஸ்தான் அணி.

இந்த இரு ஆட்டங்களிலும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் புள்ளிகள்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தங்களது ஆட்டங்களில் எதிரணியை வீழ்த்த வேண்டும். இதில் சென்னை அணி தனது கடைசி இரு ஆட்டங்களில் டெல்லி, பஞ்சாப் அணிகளுடன் மோதுகிறது. மும்பை அணியானது ஹைதராபாத், கொல்கத்தா அணிகளை சந்திக்கிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் ஆகியோர் இல்லாத நிலையிலும் ராஜஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் லயிம் லிவிங்ஸ்டோன், சஞ்சு சாம்சன் சிறந்த பங்களிப்பை வழங்கினர். கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அஜிங்க்ய ரஹானே அதிரடியாக விளையாடுவதும் அணிக்கு பலம் சேர்த்துள்ளது.

இதபோல் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 வயதான ரியான்பராக், பேட்டிங்கில் மட்டையை சுழற்றிஅணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்திருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் ஸ்ரேயஸ் கோபால் தனது கூக்ளியால் எதிரணிக்கு சவால் கொடுத்து வருகிறார். இன்றைய ஆட்டத்தில் அவர், பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரக்கூடும்.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் 8 தோல்விகளை சந்தித்து தொடரில் இருந்துவெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய இரு ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை கருத்தில் கொண்டே பெங்களூரு அணியின் அடுத்த கட்ட வாய்ப்பு தெரியவரும்.

இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற கட்டத்துக்கு வந்துள்ளதால் பெங்களூரு அணி, துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்க்கூடும் என கருதப்படுகிறது.

அணிகள் விவரம்

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே, ஆஷ்டன் டர்னர், இஷ் சோதி, ஓஷன் தாமஸ், லயிம் லிவிங்ஸ்டோன், சஞ்சு சாம்சன், சுபம் ரஞ்ஜனே, ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரேயஸ் கோபால், சுதேஷன் மிதுன், ஜெயதேவ் உனத்கட், பிரசாந்த் சோப்ரா, மகிபால் லாம்ரோர், ஆர்யமான் பிர்லா, ரியான் பராக், தவால் குல்கர்னி, கிருஷ்ணப்பா கவுதம், வருண் ஆரோன், சஷாங் சிங், மனன் வோரா, ராகுல் திரிபாதி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), டி வில்லியர்ஸ், பார்த்தீவ் படேல், மார்கஸ் ஸ்டாயினிஸ், ஷிம்ரன் ஹெட்மையர், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது சிராஜ், ஹென்ரிச் கிளாசென், காலின் டி கிராண்ட்ஹோம், பவன் நெகி, டிம் சவுதி, அக் ஷ்தீப் நாத், மிலிந்த் குமார், தேவ்தத் படிக்கல், குர்கீரத் சிங், பிரயாஸ் ரே பர்மான், குல்வந்த் கேஜ்ரோலியா, நவ்தீப் ஷைனி, ஹிமாத் சிங்.

நேரம்: இரவு 8

இடம்: பெங்களூரு

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close