[X] Close

உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்: மாற்றுவீரர் யார்?


  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 15:09 pm
  • அ+ அ-

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸை உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கி அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் திடீரென நடவடிக்கை எடுத்துள்ளது

இங்கிலாந்து அணி அடுத்து மோதவுள்ள அயர்லாந்து, பாகிஸ்தான் தொடரில் இருந்தும், உலகக் கோப்பைப் போட்டியிலும் இடம் பெற்றிருந்த ஹேல்ஸ் அனைத்துவிதமான தொடர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உற்சாகப் போதை மருந்து எடுத்துக் கொண்டதாக அலெக்ஸ் ஹேல்ஸ் மீது புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவரின் தலைமுடி வேர்க்கால் சோதனை நடத்தப்பட்டது. அதில் போதை மருந்து எடுத்துக்கொண்டது உறுதி செய்யப்படவே அலெக்ஸ் ஹேல்ஸ் விளையாட 21 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் சமீபமாக ராயல் லண்டன் கோப்பை போட்டிகளிலிருந்து சொந்தக் காரணங்களினால் விலகுவதாக அறிவித்திருந்தார், ஆனால் அதன் உண்மைக் காரணம் போதை மருந்து என்பது தெரியவந்தது.

ஒவ்வொரு சீசன் முடிவிலும் இங்கிலாந்து ஆடவர், மகளிர் வீரர்கள் சோதனை எடுத்துக் கொள்வது அவசியம் இந்நிலையில்  தலைமுடி வேர்க்கால் சோதனை நடத்தப்பட்ட போது இவர் உற்சாக போதை மருந்து எடுத்துக் கொண்டது தெரியவந்தது.

hale.jpg 

முதல் முறை இந்தத் தவறு சுகாதாரம் மற்றும் சேமநல விவகாரமாகப் பார்க்கப்படும். 2வது முறையும் இதே தடைசெய்யப்பட்ட போதை மருந்து எடுத்துக் கொண்டது தெரியவந்தால் 3 வாரங்கள் தடை மற்றும்  வீரரின் ஆண்டு வருவாயில் 5% அபராதம் விதிக்கப்படும். ஆனால், சமீபத்தில் சட்டம் திருத்தப்பட்டு, 2-வது முறையாக உற்சாக போதை மருந்து கொண்டால், தடை செய்யப்படும் முடிவு கொண்டுவரப்பட்டது.

ஏற்கனவே பென் ஸ்டோக்ஸுடன் ஒரு மதுபாரில் போதை மருந்து அருந்தி, ஒருவரை தாக்கிய விவகாரத்தில் ஹேல்ஸ்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமீபத்தில் போதைமருந்து எடுத்துக்கொண்டது உறுதி செய்யப்பட்டதால், நாட்டிங்கம்ஷையர் அணியில் இருந்து தாமாகவே விலகிக்கொண்டார்.

இந்நிலையில் உற்சாக போதை மருந்தை அலெக்ஸ் ஹேல்ஸ் எடுத்துக் கொண்டது உறுதியானதால், உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து இங்கிலாந்து நீக்கியுள்ளது.

இது குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், " இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் எதிர்கால நலன் கருதி, வாரியத்தின் மேலாளர் இயக்குநர் எடுத்த முடிவின்படி உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட உத்தேச அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கப்பட்டுள்ளார். அணியில் நல்லவிதமான சூழல், முக்கியத்தறுவாயில் அணி இருப்பதால் தேவையில்லாத எந்தவிதமான கவனச்சிதறல்களும் அணிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து அணியுடன் ஒருநாள் தொடர், பாகிஸ்தான் அணியுடனான தொடர், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அனைத்தில் இருந்தும் இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கப்படுகிறார் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலெக்ஸ் ஹேல்ஸுக்கு பதிலாக மாற்றுவீரர் யாரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும், இந்த இடத்துக்கு விக்கெட் கீப்பர் ஃபோக்ஸ் அல்லது ஜோப்ரா ஆர்ச்சர் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close