[X] Close

கிரிக்கெட்டை விட பெரியவர் யாருமில்லை; தோனியைக் கண்டு ஊடகங்கள் அஞ்சுவது ஏன்?-  பிஷன் சிங் பேடி விளாசல்


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 17:40 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில், நடுவரிடம் தோனி வாக்குவாதம் செய்த நிகழ்வில் தோனியை விமர்சிக்க ஊடகங்கள் ஏன் தயங்குகின்றன என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி விளாசியுள்ளார்.

12-வது ஐபிஎல் டி20 சீசனின் 25-வது லீக் ஆட்டம் ஜெய்பூரில் நடந்தது. இந்த ஆட்டத்தில் ராஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்தியது

இந்த போட்டியில் கடைசி ஓவரில் ஸ்டோக்ஸ் வீசிய 4-வது பந்தை சான்ட்னர்  எதிர்கொண்டார். இந்த பந்து பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேல் சென்றது அதற்கு ஸ்ட்ரைட் அம்பயர் நோ-பால் அளித்தார். ஆனால், லெக் அம்பயர் நோபாலை ரத்து செய்தார். நடுவர்களின் மாறுபட்ட தீர்ப்பால் குழப்பம் ஏற்பட்டு, இறுதியில் நோ பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், நோ பால் தராததால், மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி, மைதானத்துக்குள் வந்து ஏன் நோ-பாலை ரத்து செய்தீர்கள்? என்று நடுவர்களிடம் தோனி வாதிட்டார்.  இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தோனியின் செயல் குறித்து ஏற்கனவே பல்வேறு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடி காட்டமாக தோனியின் செயல்பாட்டை விமர்சித்துள்ளார். பிஷன் சிங் பேடி ட்விட்டரில் கூறுகையில்,

" ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி, முதிர்ச்சியற்ற வகையில் மைதானத்துக்குள் புகுந்து நடுவரின் முடிவுக்கு எதிராக வாதிடுகிறார். ஆனால், ஊடகங்கள் இதுபோன்ற மிகப்பெரிய விளையாட்டு நட்சத்திரங்கள் செய்யும் தவறுகளை நேர்மையாக சுட்டிக்காட்ட தவறுவது அதிர்ச்சி அளக்கிறது. அதிகாரிகள் கூட சிறிதுகூட வெட்கமில்லாமல், 50 சதவீதம் மட்டுமே சிறிய அளவில் அபராதம் விதித்துள்ளார்கள். தோனிக்கு மட்டும் இதென்ன சிறப்பு கவனிப்பா?

கிரிக்கெட்டின் விதிமுறைகளை மதித்து நடந்து, மீறாமல் இருக்கும்வரை கிரிக்கெட் யாருக்கும் அசிங்கமாகத் தெரியாது. ஆனால், இதுபோன்ற நடத்தைகள் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அவமரியாதையை ஏற்படுத்தும். கிரிக்கெட்டை விட பெரிய மனிதர் யாருமில்லை. கிரிக்கெட் விளையாடும் வீரர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் உயர்ந்த பட்ச ஒழுக்கம் என்பது அவசியம்

இவ்வாறு பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ளார்.!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close