[X] Close

களத்தில் புகுந்து நடுவருடன் தோனி வாக்குவாதம் செய்தது சரியா?


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 09:17 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அஸ்வின் செய்த ‘மன்கட்’ முறை ரன் அவுட், கடைசி பந்தில் லஷித் மலிங்கா நோ-பால் வீசியதை களநடுவர் பார்க்கத் தவறியது ஆகியவை கடும் விவாதப் பொருளாக மாறியிருந்தது. இந்நிலையில் இந்த சர்ச்சை வரிசையில் தற்போது தோனியும் சிக்கியுள்ளார்.

ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 152 ரன்களை துரத்திய நிலையில் பென் ஸ்டோக்ஸ் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் மிட்செல் சாண்ட்னர் சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார். இந்த ஓவரின் 4-வது பந்தை பென் ஸ்டோக்ஸ், மிட்செல் சாண்ட்னரின் இடுப்பு பகுதிக்கு மேலே புல்டாசாக வீசியிருந்தார்.

இதனால் நான்-ஸ்டிரைக்கர் முனையில் இருந்த நடுவரான உல்ஹாஸ் காந்த்தே உடனடியாக நோ-பால் என ‘சமிக்ஞை’ கொடுத்தார். ஆனால் மிட்செல் சாண்ட்னர் கிரீஸுக்கு சற்று வெளியே வந்து பந்தை எதிர்கொண்டிருந்ததால் லெக் திசையில் நின்ற நடுவரான புரூஸ் ஆக்சன்போர்டு நோ-பால் கொடுக்க மறுத்தார். இதனால் உல்ஹாஸ் காந்த்தே உடனடியாக தனது முடிவை மாற்றி நோ-பால் இல்லை என்று அறிவித்தார்.

இதுகுறித்து சென்னை அணியின் பேட்ஸ்மேன்களான ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். நடுவரின் குழப்பமான முடிவு போட்டியை களத்தில் பார்த்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. எப்போதுமே களத்தில் நிதானமாக செயல்படக்கூடிய ‘கூல் கேப்டன்’ என வர்ணிக்கப்படும் தோனி, இந்த சம்பவங்களை எல்லைக் கோட்டுக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.

பந்து இடுப்பு உயரத்துக்கு மேலே சென்றதை தோனி சைகை செய்து காண்பித்தார். ஆனால் களத்தில் வீரர்கள் நடுவர்களிடம் வாக்குவாதம் தொடர்ந்து கொண்டிருந்ததால் திடீரென தோனி களத்துக்குள் நுழைந்தார். பின்னர் நடுவர்களிடம் முதலில் நோ-பால் என்று அறிவித்துவிட்டு அதன் பின்னர் அந்த முடிவை திரும்ப பெற்றது ஏன்? என விளக்கம் கேட்டார். பந்து இடுப்பு பகுதிக்கு மேல் சென்றதை தெளிவாக எடுத்துக் கூறினார். ஆனால் நடுவர்கள் தங்களது முடிவில் இருந்து மாறவில்லை. இதைத் தொடர்ந்து தோனி, ஏமாற்றத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார்.

எப்போதும் களத்தில் பொறுமையாக நடந்து கொள்ளும் தோனி, களத்தில் புகுந்து நடுவர்களிடம் வாக்குவாதம் செய்த செயல், ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியையும் ஏற்படுத்தத் தவறவில்லை. இதுஒருபுறம் இருக்க தோனியின் செயலுக்கு முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், “ஆட்டமிழந்த பிறகு போட்டியின் இடையே ஆடுகளத்துக்குள் கேப்டன் (தோனி) வரும் செயல் ஒருபோதும் நடக்காது.  ஆனால், இந்தியாவில் தோனியால் எதையும் செய்ய முடியும். வீரர்கள் வெளியே அமர்ந்திருந்த இடத்தில் இருந்து களத்துக்குள் சென்று நடுவர்களை சுட்டிக்காட்டி பேசுவதற்கு அனுமதிக்கக்கூடாது. ஒரு கேப்டனாக நீங்கள் இந்த உதாரணத்தை அமைத்துக் கொடுக்க முடியாது” என்றார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் தனது ட்விட்டர் பதிவில்,“ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களிடம் இருந்து அழுத்தம் இருக்கும் என்பதை நான் அறிவேன். ஆனால் மன்கட் முறையில் அஸ்வினும், தற்போது நோ-பால் விவகாரத்தில் கேப்டனாக தோனியும் நடந்து கொண்டவிதத்தால் நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். பார்ப்பதற்கு இது சிறந்ததாக இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டர் பதிவில்,“இந்த ஐபிஎல் தொடரில் நடுவர்களின் தரநிலை மிகவும் குறைவாக உள்ளது. நோ-பால் வழங்கப்பட்டு விட்டு அதன் பின்னர் அந்த முடிவு மாற்றப்படுகிறது. ஆனால் எதிரணியின் கேப்டன் ஆட்டமிழந்த பிறகு மீண்டும் களத்துக்குள் வருவதற்கு உரிமை இல்லை. தோனி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

ஹேமங்க் பதானி தனது ட்விட்டர் பதிவில், “நோ-பால் முடிவை திரும்ப பெறுவதற்கோ அல்லது களத்தில் கொடுக்கப்படும் எந்த முடிவையும் திரும்ப பெறுவதற்கோ நடுவருக்கு உரிமை உள்ளது. ஆனால் தோனி அதை கையாண்ட விதம்தான் ஆச்சர்யமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

50% அபராதம் விதிப்பு

நோ-பால் விவகாரத்தில் களத்துக்குள் புகுந்து நடுவருடன் வாக்குவாதம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தடை விதிக்கப்படுவதில் இருந்து தப்பித்தார். மாறாக அவருக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் மட்டும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது பிசிசிஐ.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,“ ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது நன்னடத்தை விதிகளை மீறி நடந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு போட்டியின் சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல், தொழில்முறை கிரிக்கெட் போட்டி என்பதால் தோனிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை அணி நிர்வாகமே செலுத்தும்.

என்ன சொல்கிறது ஐசிசி?

ஐசிசி நன்னடத்தை விதிகளின்படி நடுவரின் தீர்ப்பை எதிர்த்து வாக்குவாதம் செய்தாலோ அல்லது சைகை செய்தாலோ அதிகபட்ச தண்டனையாக ஒரு டெஸ்ட் அல்லது இரு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதிக்க முடியும். பெரும்பாலும் ஐசிசி விதிகளையே கடைப்பிடிக்கும் ஐபிஎல் நிர்வாகம் தோனி விவகாரத்தில் அபராதத்துடன் நிறுத்திக் கொண்டுள்ளது.

அதிக பதற்றம்

ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லர் கூறுகையில், “ஐபிஎல் போட்டியில் பதற்றங்கள் அதிகம் உள்ளது. ஒவ்வொரு ரன்னும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் (நோ-பால்) ஆடுகளத்துக்குள் கேப்டன் நுழைவது சரியா?, என்னை பொறுத்தவரையில் சரியில்லை என்றே கூறுவேன்” என்றார்.

அன்று விராட் கோலி..

இந்த சீசனில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, கடைசி பந்தை நோ-பாலாக வீசிய போதிலும் அதை களநடுவர் பார்க்கத் தவறினார். ஆட்டம் முடிவடைந்ததும் களநடுவரின் செயல்பாட்டை பெங்களூரு அணியின் கேப்டன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். நடுவர்கள் கண்களை திறந்து வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று விராட் கோலி சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீபன் பிளெமிங் மழுப்பல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், “நோ-பால் கொடுத்துவிட்டு அதன் பின்னர் அந்த முடிவு மாற்றப்பட்டதில் தோனிக்கு கொஞ்சம் கோபம் ஏற்பட்டது. முக்கியமான தருணத்தில் நோ-பாலா அல்லது இல்லையா என்று தெளிவு ஏதும் ஏற்படாததால், தெளிவு பெறுவதற்காக களத்துக்குள் சென்று நடுவர்களிடம் தோனி விவாதித்தார். இப்படித்தான் நான் இதைப் பார்க்கிறேன். தோனியுடன் நான் இது குறித்து விவாதித்தபோதும் எனது புரிதல் இதுதான். தோனி செய்தது வழக்கத்துக்கு மாறானதுதான், இது குறித்து அவரிடம் நீண்ட காலம் கேள்வி எழுப்பப்படும்.

தோனி செய்தது சரியா, தவறா என்று என்னால் கூறமுடியாது.

நோ-பால் தீர்ப்பு குறித்த குழப்பம் சரியானதல்ல, இதுவரைதான் என்னால் சொல்ல முடியும். இதற்கு மேல் ஏதாவது கூறுவது என் சம்பளத்துக்கு மேற்பட்ட விஷயம்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close