[X] Close

தவாண் தாண்டவம்: ப்ளேஆப் சுற்றில் சன்ரைசர்ஸ்: வெளியேறியது டெல்லி


williamson-dhawan-help-srh-beat-dd-by-9-wickets

  • போத்திராஜ்
  • Posted: 11 May, 2018 08:38 am
  • அ+ அ-

டெல்லி,

ஷிகர் தவாண், கேன் வில்லியம்சனின் அதிரடி ஆட்டத்தால், டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 42-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

டெல்லி அணியின் வெற்றிக்காக ஒற்றைஆளாக பேட்டிங்கில் போராடிய ரிஷாப் பந்தின் போராட்டம் வீணானது. இந்த தோல்வி மூலம் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஐபிஎல் சீசன் முடிவுக்கு வந்திருக்கிறது. இனி மீதிமிருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட டெல்லி அணியால் ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற இயலாது. கம்பீர் தலைமையில் உருவாகி, பின்னர் ஸ்ரேயாஸ் அய்யர் கைகளுக்கு சென்று பரிதாபமாக போட்டியில் இருந்து டெல்லி வெளியேறுகிறது.

ஒரு வேளை ஸ்ரேயாஸ் அய்யரை தொடக்கத்திலேயே கேப்டனாக நியமித்து இருந்தால், வெளியேற்றத்தை தடுத்திருக்கலாமோ என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. தொடக்கத்தில் இருந்து டெல்லி அணிக்கு கிடைத்த தோல்விகளே அந்த அணியை நெருக்கடியான காலகட்டத்தில் தள்ளிவிட்டது.

காலின்முன்ரோ, மோர்கல்,மேக்ஸ்வெல்,கிறிஸ் மோரிஸ், ஜேஸன் ராய், கம்பீர் போன்ற சர்வதேச வீரர்கள் இருந்தும் டெல்லி அணியில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற முடியவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ரிஷாப் பந்த், விஜய் சங்கர் என குறிப்பிட்ட சில வீரர்கள் மட்டுமே ஓரளவுக்கு அனைத்துப்போட்டிகளிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர் என்பதைக் காட்டிலும், இவர்களை நம்பியே டெல்லி களமிறங்கியது.

பந்துவீச்சில் டிரன்ட் போல்ட், டேனியல் கிறிஸ்டியன், முகமது ஷமி, ஆவேஷ்கான், பிளங்கெட், அமித் மிஸ்ரா ஆகியோர் இருந்தபோதிலும் எதிரணியை மிரட்டும் வகையில் பந்துவீச்சு அமையவில்லை. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பலவீனமாகும்.

நிலையில்லாத பேட்டிங், சுமாரான பந்துவீச்சு, ஒரு வீரர் ஒரு போட்டியில் விளையாடினால், மற்றொரு போட்டியில் சரியாக சோபிக்காமல் போவது, முக்கியமான கட்டத்தில் பேட்ஸ்மன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ஆகியவை தொடக்கத்தில் இருந்து இந்த போட்டி வரை டெல்லி அணி சந்தித்த மிகமோசமான தோல்விக்கு காரணங்களாகும்.

ஒரு குறிப்பிட்ட வீரர் மீது அனைத்து பொறுப்புகளையும் ஏற்றி அவரை நெருக்கடிக்கு உள்ளாக்குவது டெல்லி அணிக்குள் இருக்கும் மிகப்பெரிய மைனஸாகும். இந்த போட்டியில் ரிஷாப் பந்த், கடந்த சில போட்டிகளில் ஸ்ரேயாஸ் அய்யர், விஜய் சங்கர், பிரித்வி ஷா ஆகியோர் ஏதாவது ஒரு போட்டியி்ல் அணியை தாங்கிப்படித்து வந்துள்ளனர்.

கம்பீர் இல்லாத நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் 2 வெற்றிகளை டெல்லி அணி பெற்றதை மட்டும் பெருமையாகச் சொல்லமுடியுமே தவிர மற்றவகையில் பெரிதாகக் குறிப்பிட ஒன்றுமில்லை.

அதேசமயம் 188 ரன்கள் இலக்கை ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றியை தனதாக்கிய ஷிகார் தவாண், வில்லியம்ஸன் பேட்டிங்கை சிறப்பானதாகும். ரிஷாப் பந்தின் அதிரடியாக பேட்டிங்கைப் பார்த்து மிரண்ட சன்ரைசர்ஸ் அணி எப்படி கரைசேரப்போகிறது என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தவாண், வில்லியம்ஸனின் திட்டமிட்ட பேட்டிங், தேர்வு செய்து அடித்த ஷாட்கள் எளிதாக ரன்களையும், வெற்றியையும் தேடிக்கொடுத்தது.

கடந்த சில போட்டிகளாக ஜொலிக்காத தவாண் இந்த போட்டியில் வெடித்துவிட்டார். அதிரடியாக பேட் செய்த தவாண் 50 பந்துகளுக்கு 92 ரன்கள் சேர்தது ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும். தவாணுக்கு உறுதுணையாக பேட் செய்த கேப்டன் வில்லியம்ஸனும் சளைத்தவரில்லை. 53 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்த வில்லியம்ஸன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகன் விருதை தவாண் பெற்றார்.

இந்த வெற்றி மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகள், 2 தோல்விகள், என மொத்தம் 18 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றை முதல அணியாகத் தக்கவைத்துக்கொண்டது. அதேசமயம், 11 போட்டிகளில் பங்கேற்று 3 வெற்றிகள், 8 தோல்விகள், என 6 புள்ளிகளுடன் டெல்லி அணி கடைசி இடத்தில் இருக்கிறது.

டாஸ்வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 191 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 9 ரன்களிலும், ஜேசன் ராய் 11 ரன்களிலும் அடுத்தடுத்து சஹிப்அல் ஹசனின் 4-வது ஓவரில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ஸ்ரேயாஸும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ரிஷாப் பந்த், படேல் இருவரும் ஜோடி சேர்ந்தனர். படேல் பொறுமை காட்ட, ரிஷாப் பந்த் அதிரடியில் பட்டையைக் கிளப்பினார்.

கவுல் வீசிய 10-வது ஓவரில் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசினார் பந்த். சுழற்பந்துவீச்சில் மிரட்டி வரும் ராஷித்கான் வீசிய 12-வது ஓவரில் காட்டடி அடித்து 3 பவுண்டரிகள் விளாசினார் பந்த்.

சந்தீப் சர்மா வீசிய 13-வது ஒவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து 31-வது பந்துகளில் அரை சதம் அடித்தார் பந்த். சஹிப் அல் ஹசன் வீசிய 15-வது ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர் பவுண்டரி அடித்தார் பந்த்.

ராஷிக்கானின் 17-வது ஓவரில் மறுபடியும் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து அனல் பறக்க விட்டார் பந்த். புவனேஷ் குமார் வீசிய 18-வது ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடித்தார் பந்த். அதிரடியாக ஆடிய பந்த் 56 பந்துகளில் சதம் அடித்தார். அரை சதம் அடிக்க 31 பந்துகளை எடுத்துக்கொண்ட ரிஷாப் பந்த், அடுத்த 25 பந்துகளில் அடுத்த அரை சதத்தை அடித்தார் பந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

புவனேஷ் வீசிய கடைசி ஓவரை காய்ச்சி எடுத்துவிட்டார் பந்த். முதல்பந்தில் மேக்ஸ்வெல் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த 5 பந்துகளைச் சந்தித்த பந்த் 2 பவுண்டரிகளையும், ஹாட்ரிக் சிக்ஸர்களையும் அடித்து ரசிகர்களுக்கு வானவேடிக்கை நிகழ்த்தினார். இதில் ஒரு சிக்ஸரை ஒற்றை கரத்தில் ரிஷாப் பந்த் பேட்டைப் பிடித்து அடித்தது முத்தாய்ப்பாகும்.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. ரிஷாப் பந்த் 63 பந்துகளில் 128 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள் அடங்கும்.

அதிகபட்சமாக அணியில் புவனேஷ்குமார் 4 ஓவர்கள் வீசி 51ரன்களும், கவுல் 4 ஓவர்கள் வீசி 48 ரன்களும் வாரி வழங்கினர்.

188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. வில்லியம்ஸன், ஹேல்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஹேல்ஸ் அதிரடியாக 3 பவுண்டரிகள் அடித்தநிலையில் படேல் பந்துவீச்சில் சூப்பர் எல்பிடபில்யு முறையில் ஆட்டமிழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு தவாண் களமிறங்கி வில்லியம்ஸனுடன் இணைந்தார். இருவரும் களத்தில் நங்கூரமிட்டனர். நிதானமான ஆட்டத்தை தொடங்கிய தவாண், அதன்பின் அதிரடிக்கு மாறினார். ஒவருக்கு ஒரு சிக்ஸர், பவுண்டரியை கணக்கிட்டு இருவரும் திட்டமிட்டு ரன்களைச் சேர்த்தது அணியின் வெற்றியை எளிதாக்கியது.

இவர்களைப் பிரிக்க டெல்லி பந்துவீச்சாளர்கள் கடுமையாகப் போராடியும் முடியவில்லை. தவாண் 30 பந்துகளில் அரைசதத்தையும், வில்லியம்ஸன் 38 பந்துகளில் அரைசதத்தையும் அடைந்தனர். 10.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டிய சன்ரைசர்ஸ் அணி, 14.4 ஓவரில் 150 ரன்களை எட்டியது. அதன்பின் ரன்ரேட்டில் வேகம் காட்டிய இருவரும் டெல்லி பந்துவீச்சை பொளந்துகட்டினார்கள். 88 பந்துகளில் இருவரும் 150 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தனர்.

டிரன்ட் போல்ட் வீசிய 19-வது ஓவரில் வில்லியம்ஸன் வின்னிங் ஷாட்டாக பவுண்டரி அடித்து 191 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த சன்ரைசர்ஸ் அணி இறுதிவரை அடுத்து எந்தவிக்கெட்டையும் இழக்கவில்லை.

தவாண் 50 பந்துகளில் 92 ரன்களுடனும்(4சிக்ஸர், 9பவுண்டரி)வில்லியம்ஸன் 53 பந்துகளில் 83 ரன்களுடனும்(8பவுண்டரி, 2 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி தரப்பில் பிளங்கெட் 41, போல்ட் 43, நதீம் 22, மிஸ்ரா 29 ரன்களை வாரி வழங்கினார்கள்.

 

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close