[X] Close

ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மோதல்; ஆந்த்ரே ரஸ்ஸலை மீண்டும் அடக்குவாரா ரபாடா?


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 09:04 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

அந்த அணியின் வெற்றிகளில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஆந்த்ரே ரஸ்ஸலின் அதிரடி ஆட்டம் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. ரஸ்ஸல் 5 ஆட்டங்களில் விளையாடி 257 ரன்கள் குவித்துள்ளார்.

இதில் 150 ரன்கள் 25 சிக்ஸர்கள் வாயிலாக சேர்க்கப்பட்டவை. 68 ரன்கள் 17 பவுண்டரிகள் வாயிலாக பெறப்பட்டது. ஸ்டிரைக் ரேட் 212.39-ஐகொண்டுள்ள ரஸ்ஸலின் வாணவேடிக்கை ஜாலம், சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே எடுபடாமல் போனது.

சேப்பாக்கத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் ரஸ்ஸல் சுமார் 11 ஓவர்கள் களத்தில் நிலைபெற்றிருந்த போதிலும் 44 பந்துகளில் 50 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. வலுவான சுழற்பந்து வீச்சை கொண்டுள்ள தோனி தலைமையிலான சென்னை அணி, ரஸ்ஸலை சாதுர்யமாக கையாண்டது. அந்த ஆட்டத்தில் வெறும் 108 ரன்கள் மட்டுமே சேர்த்த கொல்கத்தா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

கொல்கத்தா அணியின் மற்றொரு தோல்வியானது டெல்லி அணிக்கு எதிராக வந்தது. இந்த ஆட்டத்தில் ரஸ்ஸல் 28 பந்துகளில் 62 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். 186 ரன்கள் இலக்கை விரட்டிய டெல்லி அணி 185 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை டையில் முடித்து சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றது. சூப்பர் ஓவரில் ரஸ்ஸலின் அதிரடியானது, காகிசோ ரபாடாவின் அனல் பறந்த யார்க்கர்களில் எடுபடாமல் போனது.

தாழ்வான புல்டாசாக வீசப்பட்ட முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரஸ்ஸல், அடுத்தடுத்த யார்க்கரில் ஸ்டெம்புகள் சிதற வெளியேற அத்துடன் கொல்கத்தா அணியின் நம்பிக்கையும் அவருடன் நடையை கட்டியது. 11 ரன்கள் சேர்க்க வேண்டிய சூழ்நிலையில் கொல்கத்தா அணியால் 7 ரன்களே எடுக்க முடிந்தது.

ரஸ்ஸலை, ரபாடா ஆட்டமிழக்கச் செய்த விதம், இந்த சீசனின் அபார பந்து வீச்சாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இன்றைய ஆட்டத்திலும் ராபாடா கடும் சவால் அளிக்கக்கூடும். அதேவேளையில் டெல்லி அணிக்கு பதிலடி கொடுப்பதில் கொல்கத்தா அணி முனைப்பு காட்டக்கூடும்.

ஸ்ரேயஸ் ஐயர் தலை மையிலான டெல்லி அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் முன்னேற வேண்டும் என்பதில் டெல்லி அணி ஆர்வமுடன் உள்ளது.

நேரம்: இரவு 8

இடம்: கொல்கத்தா

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ரபாடா இந்த சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட் களை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் அதிக விக்கெட் கைப்பற்றியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 23.1 ஓவர் களை வீசியுள்ள ரபாடா 175 ரன் களை விட்டுக்கொடுத்துள்ளார். ஓவருக்கு சராசரியாக 7.55 ரன்கள் வழங்கியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close