[X] Close

தோனியின் சிஎஸ்கே அணியை பின்பற்றுங்கள் கோலி: டிவில்லியர்ஸ் அறிவுரை


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 13:41 pm
  • அ+ அ-

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் செயல்பாடுகளையும், யுத்திகளையும் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பின்பற்ற வேண்டும் என்று அந்த அணியின் முக்கிய வீரர் டி வில்லியர்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.

12-வது ஐபிஎல் சீசன் டி20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல், அனைத்திலும் தோல்விஅடைந்து கடைசி இடத்தில் இருக்கிறது. ப்ளே-ஆப் சுற்றுக்குச் செல்ல குறைந்தபட்சம் 6 வெற்றிகளாவது தேவை. இன்னும் 8 ஆட்டங்கள் இருக்கும் நிலையில், அனைத்திலும் வென்றால் மட்டுமே அணிக்கு  ப்ளே-ஆப் சுற்றுக் கனவும் அருகி வருகிறது.

அதேசமயம், எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த முறைதான் ஆர்சிபி அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இதற்கு முன் எந்த ஐபிஎல் சீசசனிலும் இதுபோன்ற தொடர் தோல்விகளைச் சந்தித்தது இல்லை. சரியான வீரர்களைத் தேர்வு செய்யாததும், களத்தில் வியூகங்களை வகுக்காததும் தோல்விக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்சிபி அணியில் உள்ள மூத்த வீரரும், தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் ஆங்கில நாளேடு ஒன்றில் அணி குறித்து எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி தான் மோதிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக அணியின் சொந்த மைதானத்திலேயே போட்டியை வெல்ல முடியாமல் ஆர்சிபி அணி தோல்விஅடைந்தது சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.

டி20 போட்டித் தொடரில் நீங்கள் வெல்ல வேண்டுமென்றால், முடிந்தவரை அணியின் சொந்த மைதானங்களில் நடக்கும் ஆட்டங்களில் வெல்ல வேண்டியது அவசியம்.அப்போதுதான் ரசிகர்களுக்கு ஆர்வத்தையும், வீரர்களிடம் நம்பிக்கையை வளர்க்க முடியும்.

virat and ms.jpeg 

உங்களுடைய சொந்த மைதானத்தில், சொந்த ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும்போது, நிலைத்தன்மையுடன் விளையாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும், ஆடுகளத்தையும் நன்றாக அறிந்து கொள்ளலாம். திறமையான, தேவையான வீரர்களைத் தேர்வு செய்து, சூழலுக்கு ஏற்றார்போல் பயன்படுத்த முடியும். நெருக்கடியான சூழலை சமாளிக்க தெளிவாக திட்டமிடுதலுடன் களமிறங்கலாம்.

மும்பை இந்தியன் அணியில் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான பும்ரா, மலிங்கா,  உள்ளிட்டோர் இருக்கிறார்கள், அவர்கள் தங்களின் சொந்த மைதானத்தில் முடிந்தவரை வெற்றி பெறுகிறார்கள். கடந்த 2015, 2017-ம் ஆண்டு அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றபோது, தங்கள் சொந்த மைதானத்தில் நடந்த பெரும்பாலான போட்டிகளிலும் வென்றிருந்தார்கள். இன்னமும் அதே யுத்தியை பின்பற்றுகிறார்கள்.

இதேபோலத்தான் சிஎஸ்கே அணியும் தங்களின் சொந்த மைதானத்தில் நடந்த பெரும்பாலான ஆட்டங்களில் வென்று வருவதுதான் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்து வருகிறது. சேப்பாக்கம் மைதானம் மெதுவான ஆடுகளமாக இருந்தாலும், அதற்கு ஏற்றார்போல் தரமான சுழற்பந்துவீச்சாளர்களான ஹர்பஜன் சிங், ஜடேஜா, இம்ரான்தாஹிர் ஆகியோரைப் தோனி பயன்படுத்தி வருகிறார். களவியூகங்களை சரியாக அமைத்து, எதிரணிகளை குறைந்த ஸ்கோரில் சுருட்டி, வெற்றி பெற்று வருகிறார்கள்.

ஆதலால் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க ஆர்சிபி அணி சொந்த மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் வெல்வது அவசியம். அதற்கு தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் தேர்ந்தெடுத்த யுத்திகளை பின்பற்றி நடக்க வேண்டும்.

இவ்வாறு டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close