[X] Close

“தம்” கட்டும் ராஜஸ்தான்: பஞ்சாப் தோற்றது: ராகுல் தோற்கவில்லை


kl-rahul-unbeaten-but-royals-beat-rest-of-kings-xi

பஞ்சாப் வீரர் கெயில் ஸ்டெம்பிக் செய்யப்பட்டு ஆட்டமிழந்ததை ராஜஸ்தான் வீரர்கள் கொண்டாடிய காட்சி. இதுதான் ஆட்டத்தின் முக்கியத் திருப்புமுனை விக்கெட்டாக அமைந்தது.

  • போத்திராஜ்
  • Posted: 09 May, 2018 07:23 am
  • அ+ அ-

ஜெய்பூர்,

ஜோஸ் பட்லரின் அதிரடியான பேட்டிங், கவுதம், சோதி ஆகியோரின் கட்டுக்கோப்பான, நெருக்கடி தரும் பந்துவீச்சு ஆகியவற்றால், ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 40-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் அணி ஐபிஎல் சீசனில் இன்னும் “மூச்சுப்பிடித்து தம்” கட்டி நின்று, பிளே ஆப் சுற்றை ராஜஸ்தான் அணி பிராகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றி பெறுவது ராஜஸ்தானை அடுத்த கட்டுத்துக்கு நகர்த்தும், இல்லாவிடில் ராஜஸ்தான் அணியின் நிலை பாலைவனமாகிவிடும்

ஜோஸ்பட்லரின் அற்புதமான, அதிரடியான ஆட்டமே ராஜஸ்தான் அணி கவுரமான ஸ்கோரை எட்டுவதற்கு உதவி புரிந்தது. பட்லர் அடித்த 82 ரன்களே அணியில் அதிகபட்சமாகும். 158 ரன்கள் என்ற குறைவான ஸ்கோரை எடுத்திருந்த போதிலும், கவுதம், இசான்சோதி ஆகியோரின் சுழற்பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருந்தது. ஆட்டநாயகன் விருதை பட்லர் பெற்றார்.

அச்சுறுத்தும் பேட்ஸ்மேன் கெயிலை தொடக்கத்திலேயே வீழ்த்தியது ராஜஸ்தான் அணிக்கு மிகப்ெபரிய ஊக்கமாக அமைந்தது. அதை தக்கவைத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு நெருக்கடி அளித்து வெற்றியை வசப்படுத்தியது.

சுழற்பந்துவீச்சாளர்கள் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த வேகப்பந்துவீச்சாளர்களான ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், உனத்கத் ஆகியோர் பயன்படுத்தி பஞ்சாப் அணியின் ரன்களைக் கட்டுப்படுத்தி வெற்றிக்கு உதவினார்கள். ஒட்டுமொத்தத்தில் இது ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கும், ஜோஸ்பட்லருக்கும் கிடைத்த வெற்றியாகும். ப்ளே ஆப் கனவை நனவாக ராஜஸ்தான் அணிக்கு இனிவரும் போட்டிகளில் வெற்றிகளோடு, ரன்ரேட்டும் மிகவும் அவசியம்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஓவருக்கு 8 ரன்கள் கூட எடுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளது, பேட்டிங்கில் அதன் பலவீனத்தை காட்டுகிறது. கெயில் என்ற ஒற்றை குதிரையை நம்பியே பஞ்சாப் அணி பயணிக்கிறது என்பது ஏறக்குறைய இந்த போட்டியில் உறுதியாகி இருக்கிறது. ராகுலுக்கு உறுதுணையாக விளையாட ஒரு வீரர் கூட ஒத்துழைக்காததை என்னவென்று சொல்வது.

அதிலும் கேப்டன் அஸ்வின், இந்தபோட்டியில் சில சோதனை முயற்சிகளை செய்து, அதில் தோல்வியும் அடைந்துவிட்டார். தான் 3-வது வீரராக களமிறங்கி அதிரடியாக பேட் செய்ய நினைத்தார், ஆனால், அது தோல்வியில் முடிந்துள்ளது. மேலும், நடுவரிசையில் நிலைத்து ஆட ஸ்திரத்தன்மையுடன் கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லாதது பஞ்சாப் அணியின் அடுத்தடுத்த வீழ்ச்சிக்கு காரணமாகும்.

அந்த அணியிஸ் கெயில், கே.எல். ராகுலைத் தவிர்த்து கருண் நாயர், நாத், மனோஜ் திவாரி ஆகிய பேட்ஸ்மென்கள், நிலைத்து பேட் செய்யாதது தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் இருந்தபோதிலும், அடுத்துவரும் 4 போட்டிகளிலும் வெற்றிபெறுவது ப்ளே ஆப் சுற்றை பிரகாசப்படுத்தும். இல்லாவிட்டால், அதிர்ச்சி தரும் தோல்விகள் அமைந்து, திருப்புமுனைகள் ஏற்பட்டாலும் வியப்பில்லை.

அதேசமயம், சிறப்பாக பேட் செய்த ராகுல் ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் சேர்த்து ஆரஞ்சு நிற தொப்பியையும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில் ஆன்ட்ரூ டை நீல நிற தொப்பியையும் பெற்றனர்.

இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்வி என 8 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் இருக்கிறது. கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் இருக்கிறது.

டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான்  அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. 159 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பக்கு 143 ரன்கள் சேர்த்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஜோஸ்பட்லர், ரஹானே ஆட்டத்தை தொடங்கினார்கள். பட்லர் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பேட் செய்தார். ஸ்டோய்னிஸ் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரிகள்  அடித்தார் பட்லர். அக்சர் படேல் வீசிய 2-வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்தார் பட்லர். மோகித் சர்மா வீசிய 3-வது ஓவரில் ரஹானேவும், பட்லரும் ஆளுக்கு ஒரு பவுண்டரி  அடித்து ரன்ரேட்டே உயர்த்தினார்கள்.

ஆன்ட்ரூ டை வீசிய 4-வது ஓவரில் ரஹானே 9 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.அடுத்து கவுதம் களமிறங்கினார். மோகித் சர்மா வீசிய 5-வது ஓவரில் பட்லர் ஒருபவுண்டரியும், கவுதம் ஒரு சிக்ஸரும் விளாசினர். ஆன்ட்ரூ டை வீசிய 6-வது ஓவரில் பட்லர் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விரட்டி ரன்வேகத்தை அதிகப்படுத்தினார்.

ஸ்டோய்னிஸ் வீசிய 7-வது ஓவரில் கவுதம் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சாம்சன், பட்லருடன் இணைந்து நிதானமாக பேட் செய்தார். இருவரும் பதற்றமின்றி ரன்களைச் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய பட்லர் 27 பந்துகளில் அரைசதம் எட்டினார். பவர்ப்ளேயில் 63 ரன்கள் சேர்த்து ராஜஸ்தான் அணி.

அஸ்வின் வீசிய 14-வது ஓவரில் சாம்ஸன் ஒரு சி்க்ஸரும், பட்லர் ஒரு பவுண்டரியும் விளாசினார்கள். சாம்ஸன் 22ரன்கள் சேர்த்திருந்த போது, முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் 15-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தனர். இதன்பின் ஆட்டத்தின் திருப்புமுனை ஆரம்பமாகியது. விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது.

பட்லர் 82ரன்கள் சேர்த்த நிலையில் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சி்ல ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும்.

அடுத்து வந்த ஸ்டூவரட் பின்னி 11 ரன்களில் ரன்அவுட் ஆகினார். உனத்கட் வீசிய கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை ராஜஸ்தான் ்ணி பறிகொடுத்து. முதல் பந்தில் ஸ்டோக்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்,அடுத்து களமிறங்கிய ஆர்ச்சர் 3-வது பந்தில் டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த உனத்கட் கடைசி பந்தில் ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தார்.

20ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணித் தரப்பில் ஆன்ட்ரூ டை 4 விக்கெட்டுகளையும், முஜிபுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

159 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராகுல், கெயில் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் இருந்தே ராகுல் அடித்து ஆடினார். முதல் ஓவரில் ஒரு பவுண்டரியும், 2-வது ஓவரில் ஒரு சிஸ்கரும் ராகுல் விளாசினார்.

கவுதம் வீசிய 3-வது ஓவரில் கெயில் ஒரு ரன்னில் ஸ்டெம்பிங் ஆகிய விக்கெட்டை பறிகொடுத்தார். மிகப்பெரிய விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்தியது ராஜஸ்தான் அணிக்கு ஊக்கமாக அமைந்தது. அடுத்துவந்த அஸ்வின் ரன் ஏதும் சேர்க்காமல் டக் அவுட்டில் வெளியேறினார்.

ஆர்ச்சர் வீசிய 4-வது ஓவரில் கருண் நாயர் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நாத், ராகுலுடன் இணைந்தார். இருவரும் விக்கெட் வீழ்ச்சியை தடுக்கும் வகையில் பொறுமையாக பேட் செய்தனர். இதனால் பவர்ப்ளேயில் பஞ்சாப் அணி 33 ரன்கள் மட்டுமே சேர்த்தது

சோதி வீசிய 9-வது ஓவரில் நாத் 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தபோதிலும் மனம் தளராமல் ராகுல் பேட் செய்துவந்தார்.

அடுத்து களமிறங்கிய திவாரியும் நீண்டநேரம் நிலைக்காமல் 7 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த அக்சர் படேல் 9ரன்னில் ரன் அவுட் ஆகினார். நிதானமாக பேட் செய்த ராகுல் 48 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த சீசனில் 4-வது அரைசதத்தை பதிவு செய்தார்.

அடுத்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ், ராகுலுடன் இணைந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்துக்கு முயன்றபோதிலும், ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சு இந்த முறை மிகவும் கட்டுக்கோப்பாகவும், துல்லியமாகவும் இருந்ததால் ரன் சேர்க்க முடியவில்லை.

ஆர்ச்சர் வீசிய 19-வது ஓவரில் ராகுல் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார். கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது. உனத்கட் கடைசி ஓவரை வீசினார். முதல்பந்தில் ஸ்டோய்னிஸ் 11 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்துவந்த ஆன்ட்ரூ டை ஒரு ரன் சேர்த்து ராகுலிடம் அளித்தார். 3-வது பந்து நோபால் ஆனது. அடுத்து கிடைத்த ப்ரீ ஹிட்டில் ராகுல் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். கடைசி இரு பந்துகளிலும் ராகுல் பவுண்டரி அடித்தும் வெற்றி இலக்கை அடையமுடியவில்லை.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் சேர்த்து, 15 ரன்களில் தோல்வி அடைந்தது. இறுதிவரை போராடிய ராகுல் 95 ரன்களுடனும், ஆன்ட்ரூ டை ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணிக்கு இது தோல்வியாக அமைந்தாலும், ராகுலின் ஆட்டத்துக்கு இது தோல்வியாக அமையவில்லை.

ராஜஸ்தான் அணித் தரப்பில் கவுதம் 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர், சோதி, ஸ்டோக்ஸ், உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

 

 

 

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close