[X] Close

கோலி கேப்டன்ஷிப்பில் 'அப்ரன்டிஸ்', பேட்டிங்கில் மாஸ்டர் : மீண்டும் கவுதம் கம்பிர்


  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 17:10 pm
  • அ+ அ-

விராட் கோலி பேட்டிங் துறையில் மாஸ்டர்தான் அதில் மாற்றமில்லை, ஆனால், கேப்டன்ஷிப்பில் அவர் இன்னும் அப்ரன்டிஸ்தான் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளாசியுள்ளார்.

12-வது ஐபிஎல் போட்டித் தொடர் நடந்து வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு ஆர்சிபி கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்றதில் இருந்து ஒருமுறைகூட அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்தில்லை.

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 6 ஆட்டங்களில் தோல்வி அடைந்து பரிதாப நிலைக்குச் சென்றுள்ளது. ஒரு அணி ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல 7 முதல் 8 வெற்றிகள் தேவை எனும்போது, இனிமேல் ஆர்சிபி அணியின் ப்ளேஆப் சுற்று கேள்விக்குறியாக இருக்கிறது.

கடந்த 2018-ம்  ஆண்டு ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 7 ஆட்டங்களில் ஆடிய ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ஆனால், இந்த முறை படுமோசமாக செயல்பட்டு வருகிறது. விராட் கோலி, டிவில்லியர்ஸ், பர்தீப் படேல், சாஹல், மொயின் அலி, ஹெட்மயர், டிம் சவுதி, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தும் தொடர் தோல்விகளை  சந்தித்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு தொடர்ந்து 6 தோல்விகளைச்சந்தித்து, மொத்தமுள்ள 10 போட்டிகளில் 3 ஆட்டங்களில் மட்டுமே வென்றது. அதன்பின், மிகமோசமான ஆட்டத்தை இப்போது ஆர்சிபி அணி வெளிப்படுத்தி வருகிறது.

இதனால், ஆர்சிபி அணியின் கேப்டன் கோலியின் கேப்டன்ஷிப் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் கோலியின் கேப்டன்ஷிப் மீது கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் கம்பீர் கடும் விமர்சனத்தை கோலியின் கேப்டன்ஷிப் மீது வைத்துள்ளார். அவர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

gam.jpg 

ஆர்சிபி அணியின் தோல்விக்கு எந்தவிதமான காரணத்தையும் கூற முடியாது. கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் தொடங்கியபோது, நான் டெல்லி அணியில் இருந்தேன். அப்போது, ஆர்சிபி அணியின் மிகுந்த குழப்பத்தில் இருந்தார்கள். மார்கஸ் ஸ்டோனிஸ், நாதன் கோல்டர் நீல் ஆகிய வீரர்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்.

இவர்களை முன்பே அறிந்திருந்தால், ஏன் தொடக்கத்தில் தேர்வு செய்யவில்லை. பெங்களூரு சின்னச்சாமி மைதானம் மிகச்சிறியது, ஆடுகளம் மிகவும் தட்டையானது. அப்படிப்பட்ட சூழலில் நான் கேப்டனாக இருந்திருந்தால், நான் நிச்சயம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்க மாட்டேன்.

ஆனால், கோலி என்ன செய்தார் தெரியுமா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சிராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், சுழற்பந்துவீச்சாளர்களை கோலி பயன்படுத்தி இருக்க வேண்டும். ஸ்டோனிஸை அழைத்து  பந்துவீசச் செய்ய வேண்டியது இல்லை. பவன் நெகியை அழைத்து சுழற்பந்துவீசச் செய்திருந்தால் பலன் கிடைத்திருக்கும். பந்தும் தேய்ந்துவிட்டதால், சுழற்பந்துவீச்சாளர்கள் கையாள நன்றாக இருந்திருக்கும்.

ஆனால், என்ன செய்வது, கோலி சிறந்த பேட்ஸ்மேன்தான்.  பேட்டிங்கில் மாஸ்டர்தான் அதை மறுக்கவில்லை. ஆனால், கேப்டன்ஷிப் என்று வரும்போது, அவர் " அப்ரன்டிஸ்"(பயிற்சியில் இருப்பவர்) இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் " எனத் தெரிவித்திருந்தார்.

விராட் கோலியை கம்பீர் விமர்சனம் செய்வது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இதுபோன்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அப்போது, " இதுவரை 8 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இருந்து கோலி ஒருமுறைகூட கோப்பையை வென்று கொடுக்கவில்லை. ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இப்போதுவரை கோலி இருப்பது அதிர்ஷ்டம்தான். அணி நிர்வாகத்தினருக்கு நன்றி கூற வேண்டும். ஏனென்றால், இதுபோன்று மற்ற அணிகளின் கேப்டன்கள் இத்தனை ஆண்டுகளாக ஒரே அணியின் கேப்டனாக இருந்ததில்லை" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close