[X] Close

பிரியாணி சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் உ.கோப்பையை எப்படி வெல்ல முடியும்? - பாக். வீரர்களை வறுத்தெடுத்த வாசிம் அக்ரம்


  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 16:15 pm
  • அ+ அ-

பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், உலகக்கோப்பைப் போட்டியில் எவ்வாறு மற்ற அணிகளை வீழ்த்த முடியும் என்று பாகிஸ்தான் வீரர்களை, முன்னாள் வீரரும், கேப்டனுமான வாசிம் அக்ரம் விளாசியுள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டித் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் வீரர்களை தயார் செய்து வருகின்றன. இன்னும் இரு மாதங்கள் இருக்கும் நிலையில், வீரர்களின் உடற்தகுதிக்கு ஒவ்வொரு அணியும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

ஆனால், பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக 50 ஓவர்கள் போட்டியில் கடந்த 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் பாகிஸ்தான் அணியால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.

நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா கோப்பை என அனைத்திலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. சமீபத்தில் துபாயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.

துபாயில் பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல் இருந்தபோதிலும்கூட அந்த அணி வீரர்களின் மோசமான செயல்பாட்டால் கோப்பையைப் பெற முடியாமல் போனது. பாகிஸ்தான் அணியில் 6 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும், பாகிஸ்தான் அணியில் இருந்த இளம் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில், " ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததற்கு வீரர்களின் உடல்தகுதி முக்கியக் காரணம். வீரர்களின் உடல்தகுதி சர்வதேச தரத்துக்கு ஏற்ப இல்லை.

 குறிப்பாக இளம் வீரர்கள் அபித் அலி, ஹஸ்நயின் ஆகியோர் களத்தில் வளைந்து, குனிந்து பந்தை எடுப்பதில்லை, விளையாடுவதும் இல்லை. சர்வதேச போட்டியில் பங்கேற்கும்போது அதற்கு ஏற்றார்போல் உடல்தகுதி இருப்பது எங்களுக்கு தெரியும். ஆனால், இதுபோன்ற உடல்தகுதி இல்லாமல் இருப்பதில் சமரசம் செய்ய முடியாது " எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் வீரரும், கேப்டனுமான வாசிம் அக்ரம் அந்நாட்டு எழுத்தாளர் சாத் சஜிக்குக்கு அளித்த பேட்டியில் வீரர்களின் உடல்தகுதியை வளாசியுள்ளர்.

அவர் கூறுகையில், " பாகிஸ்தான் வீரர்களுக்கு இன்னும் பிரியாணி சப்ளை செய்யப்பட்டு வருகிறது. வீரர்கள் அனைவரும் ருசியாக பிரியாணி சாப்பிட்டால், சாம்பியன்களுடன் போட்டியிட முடியாது. வெற்றி பெறவும் முடியாது.  சாம்பியன்களுக்கு பிரியாணி சப்ளை செய்து வெற்றி பெறலாம் என நினைக்க கூடாது " என்று தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைப் போட்டிக்கான அணியை பாகிஸ்தான் வரும் 18-ம் தேதி அறிவிக்கிறது. இந்திய அணி வரும் 15-ம் தேதி அறிவிக்கிறது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close