[X] Close
 

“கேப்டன்ஷிப்”பில் கோட்டைவிட்ட கோலி: ஆர்சிபிக்கு “குட்பை”: பந்துவீ்ச்சில் பட்டையை கிளப்பிய சன்ரைசர்ஸ்


srh-bowlers-remain-defending-champions-beat-rcb-by-5-runs

சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்ஸன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காட்சி

  • போத்திராஜ்
  • Posted: 08 May, 2018 01:58 am
  • அ+ அ-

ஹைதராபாத்

புவனேஷ்குமார், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, துல்லியத்தன்மையாலும், ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 39-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

விராட் கோலியின் தலைமையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் 2018-ம்ஆண்டு ஐபிஎல் சீசன் ஏறக்குறைய முடிந்துவிட்டது. இனிவரும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்வது மிக,மிக கடினம்.

விராட் கோலியின் தலைமையில் செயல்பட்டுவரும் பெங்களூரு அணி கடந்த 4 ஆண்டுகளாக மிக மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது. ஆதலால், இந்த சீசனோடு அவர் கேப்டன் பொறுப்பை தானாக முன்வந்து கைகழுவக்கூடாது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த போட்டியில் விராட் கோலி, டிவில்லியர்ஸ், வோரா ஆகியோருக்கு கேட்ச் வாய்ப்புகள் கோட்டைவிடப்பட்டும் அவர்களுக்கு கிடைத்த வாழ்வை பயன்படுத்திக்கொள்ளாமல் ஆட்டமிழந்ததே என்ன வென்று சொல்வது.(“உஷ் கண்டுகாதீங்க” என்று சொல்லலாமா)

இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து செயல்படும் போது, விராட் கோலியிடம் இருக்கும் புத்துணர்ச்சி, வேகம், துடிப்பு, ஆக்ரோஷமான பேட்டிங் எதுவுமே இந்த தொடரில் அவரிடம் ரசிகர்கள் பார்க்கவில்லை. இது ஒருவகையில் ஏமாற்றமே. இந்த தோல்வியின் தாக்கம், மனத்தளர்ச்சி, அழுத்தம் ஆகியவை இந்திய அணிக்கு பொறுப்பேற்று கோலி செயல்படும் போது தாக்கத்தை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மிகுந்த அனுபவம் கொண்ட,சர்வதேச போட்டிகளில் சாதித்த வீரர்களை அதிகம் கொண்டிருந்தும் ஆர்சிபி அணி மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது வியப்புக்குரியது. வலுவான அணியாக திகழும் என ரசிகர்களால் மனக்கணக்குபோடப்பட்டது பொய்த்துவிட்டது.  

ஆனால், சரியான வீரர்களைத் தேர்வு செய்யாததும், இளம் வீரர்களுக்கும், புதுமுக வீரர்களுக்கும் அதிக அளவு வாய்ப்பு தராததுமே ஆர்சிபியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.

மெக்குலம், டிவில்லியர்ஸ், டீகாக், கிறிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ், மன்தீப் சிங், கோரி ஆன்டர்சன், டிம் சவூதி, நாதன் கோல்டன் நீல், பர்தீவ் படேல் போன்ற சர்வதேச அளவில் விளையாடிய வீரர்கள் இருந்தும் ஆர்சிபி அணி தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது.

கேப்டன்ஷிப்பை கோலி சரியாக கையாளாத காரணத்தால்தான் இருக்குமே தவிர வேறு என்னவாக இருக்க முடியும். அனுபவம் வாய்ந்த வீரர்களை அணிக்கு எடுத்துவிட்டோம், வென்றுவிடலாம் என்று நினைத்து விராட் கோலி தவறான களவியூகங்களை அமைத்து தோல்விக்கு காரணமாகிவிட்டார். கருப்புக்குதிரைகள் அனைத்து நேரங்களிலும் வெற்றிக்குதிரைகளாக இருப்பதில்லை என்ற  பாடம் கோலிக்கு இந்த சீசனில் கிடைத்திருக்கிறது.

கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து  விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. ஒரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மற்றவற்றில் 5-ம் இடத்துக்கு கீழே சென்று போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறது.

இந்த சீசனிலும் மோசமாக தோல்வி அடைந்து வெளியேறும் தருவாயில் இருக்கும் நிலையில், கேப்டன் பொறுப்பை கோலி தொடர வேண்டுமா என்பது விவாதத்துக்கு உரிய கேள்வியாகும். ரூ.17 கோடிக்கு கோலியை தக்கவைத்தும் கிடைத்தது என்ன, பெற்றுக்கொடுத்தது என்ன கேள்வி ஆர்சிபி, கோலி முன் நிற்கிறது.

அடுத்து வரும் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா அணிகள் தங்களுக்கு இருக்கும் 4 லீக் ஆட்டங்களிலும் தோல்வி அடைய வேண்டும், அல்லது 3 ஆட்டங்களிலாவது தோல்வி அடைய வேண்டும்.  அதேசமயம், பெங்களூரு அணி தன்னுடைய 4 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஆப் சுற்றுக்குச் செல்ல முடியும். இது நடக்குமா?

சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக இந்த சீசனில் அந்த அணி திகழ்கிறது. கடந்த 4 போட்டிகளில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 118, 132,151,146 ரன்கள் சேர்த்து  எதிர்அணியை தான் அடித்த ஸ்கோரை எட்டவிடாமல் சுருட்டியது அதன் பந்துவீச்சுக்கு சான்றாகும். 118 ரன்கள் சேர்த்த சன்ரைசர்ஸ் அணி மும்பைஇந்தியன்ஸ் அணியை 87ரன்களில் சுருட்டியது நினைவிருக்கலாம்.

அந்த வகையில் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் புவனேஷ் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, சாஹிப் அல்ஹசன், ராஷித் கான் ஆகியோரின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருந்தது. அதிலும் ராஷித் கானின் சுழற்பந்துவீச்சு இந்த தொடரில்அனைத்து அணியினருக்கும் சிம்மசொப்னாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த போட்டியில் அந்த அணி 3 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை வி்ட்டது பீல்டிங்கில் பலவீனமாகஇருப்பதையே காட்டுகிறது.

146 ரன்கள் என்ற ஸ்கோர் எதிரணியால் எட்டக்கூடியதாக இருந்தபட்சத்திலும், அந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்திய பந்துவீச்சும், பந்துவீச்சாளர்களை சரியான நேரத்தில் களமாடவைத்து, கேப்டன் யுத்தியை சிறப்பாக பயன்படுத்திய வில்லியம்ஸனை பாராட்ட வேண்டும். அணியில் விக்கெட் வீழ்ச்சி இருந்தபோதிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதம்அடித்த வில்லியம்ஸன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த  வெற்றி மூலம் சன்ரைசர்ஸ் அணி 10 போட்டிகளில் 8 வெற்றிகள், 2 தோல்விகள் என 16 புள்ளிகளுடன் பட்டியிலில் முதல் இடத்தில் இருக்கிறது. 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் பட்டியலில் 6-ம் இடத்தில் ஆர்சிபி அணி தொடர்கிறது.

டாஸ்வென்ற பெங்களூரு அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்அணி 20 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. 147 ரன்கள் சேர்த்தால் வெற்றிஎனும் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்து 5 ரன்களில் தோல்வி அடைந்தது.

பந்துவீச்சு சாதகமான இந்த ஆடுகளத்தில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கல் ஷிகர் தவாண்(13), ஹேல்ஸ்(5) ரன்களில் விரைவாக ஆட்டமிழந்தனர். சிராஜ் பந்துவீச்சில் தவாணும், சவூதி வேகத்தில் ஹேல்ஸும் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்துவந்த மணீஷ் பாண்டேவும் 5 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் வெளியேறினார்.

4-வது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்ஸன், சஹிப் அல்ஹசன் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். உமேஷ் யாதவ் வீசிய 14-வது ஓவரில் ஒருசிக்ஸர், பவுண்டரி அடித்தார் வில்லியம்ஸன். சாஹல் வீசியஅடுத்த ஓவரில் சிக்ஸர் அடித்து 35 பந்துகளில் வில்லியம்ஸன் அரைசதம் அடித்தார். இந்த சீசனில் வில்லியம்ஸன் அடிக்கும் 5-வது அரைசதமாகும்.

உமேஷ் வீசிய 16-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த வில்லியம்ஸன் 56 ரன்களில் மன்தீப்பிடம்கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 64ரன்கள் சேர்த்தனர். இதன்பின் சன்ரைசர்ஸ் விக்கெட் சரிவு தொடங்கியது.

112 ரன்களுக்கு 4-வது விக்கெட்டை இழந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்து 34 ரன்களுக்குள் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் சீரான இடைவெளியில் பறிகொடுத்தது. சஹிப் அல் ஹசன்35 ரன்களில் ஆட்டமிழந்தார். யூசுப் பதான் 12, சாஹா 8, ராஷித் கான் ஒரு ரன், கவுல் ஒரு ரன் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சவூதி வீசிய கடைசி ஓவரில் 2 ரன்அவுட்களும் ஒரு எல்பிடபில்யூவும், சிராஜ் வீசிய 19-வது ஓவரில் பதானும், சாஹாவும்ஆட்டமிழந்தனர். 12 பந்துகளில் 5 விக்கெட்கள் பரிதாபமாக இழந்தது.

20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெங்களூரு அணித் தரப்பில் சிராஜ், சவூதி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

147 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பெங்களூரு அணியின் வோரா, பர்தீவ் படேல் களமிறங்கினார்கள். அதிரடியாக 4 பவுண்டரிகள் அடித்த பர்தீவ் படேல், 20 ரன்களில் சஹிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி அதிரடியாக பேட் செய்தார்.

சஹிப் அல் ஹசன்  வீசிய 5-வது ஓவரில் விராட்கோலி 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசினார்.

ராஷித்கான் வீசிய 7-வது ஓவரில் வோராவுக்கு ஒருகேட்ச் வாய்ப்பு நழுவியது. ஆனால், அதன்பின் தனக்கு கிடைத்த வாழ்வை வோரா பயன்படுத்துவார் எனப் பார்த்தால், அடுத்த ஓவரில் சந்தீப் சர்மாவிடம் வோரா தனது விக்கெட்டை இழந்தார். இவர் 8 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

டீவில்லியர்ஸ் களமிறங்கினார். சந்தீப் சர்மா வீசிய அதே ஓவரில் டிவில்லியர்ஸ்க்கு கேட்ச் வாய்ப்பை சந்தீப் தவறவிட்டார். ராஷித்கான் வீசிய 9-வது ஓவரில் விராட் கோலி ஸ்லிப்பில் அடித்த பந்தை கேப்டன் வில்லியம்ஸன் பிடிக்காமல் கோட்டைவிட்டார். இந்த இருவரும் தங்களுக்கு கிடைத்த வாழ்வை பயன்படுத்தி நிலைத்து பேட் செய்து இருந்தாலே வெற்றி கிடைத்திருக்கும்.

ஆனால், சாஹிப் வீசிய 10-வதுஓவரில் பதானிடம் கேட்ச் கொடுத்து விராட் கோலி 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.இதில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். ராஷித்கான் வீசிய 11-வது ஓவரில் தொடக்கத்தில் இருந்த திணறிய டிவில்லியர்ஸ் 5 ரன்கள் சேர்த்திருந்தபோது, போல்டாகி ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த அலி 10 ரன்களில் கவுல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 5-வது விக்கெட்டுக்கு மன்தீப் சிங்கும் , கிராண்ட்ஹோமேவும் இணைந்து மெல்ல அணியின் ஸ்கோரைஉயர்த்தினார்கள். ஆனால், இவர்கள் இருவரையும் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கவிடாமல் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் கச்சிதமாக பந்துவீசி நெருக்கடி அளித்தனர். இதனால், ரன்சேர்க்க இருவரும் கடுமையாகப் போராடினார்கள்.

இதற்கிடையே ராஷித்கான் வீசிய 17-வது ஓவரில் கிராண்ட்ஹோமே இரு சிக்ஸர்கள் விளாசி ஆட்டத்தை பரபரப்பாக்கினார். ஆனால், அதன்பின் புவனேஷ்குமார், கவுல் பந்துவீசி இருவருக்கும் நெருக்கடி அளித்தனர். இதனால், கிராண்ட்ஹோமே, மன்தீப் சிங்கால் நினைத்த ஷாட்களை ஆடமுடியவில்லை.

கடைசி ஓவரில் 12 ரன்கள் சேர்க்கவேண்டியது இருந்தது. புவனேஷ்குமார் பந்துவீசினார். மன்தீப்சிங்கும், கிராண்ட்ஹோமேயும் சிங்களாக மட்டுமே சேர்க்க முடிந்ததே தவிர, பவுண்டரி, சிக்ஸர் அடிக்க முடியவில்லை. கடைசி பந்தில் சிக்ஸர் தேவைப்பட்டது. ஆனால், கிராண்டஹோமே 33 ரன்கள் சேர்த்த நிலையில் புவனேஷ்குமார் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

மன்தீப் சிங் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்து 5 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஹைதராபாத் அணித்தரப்பில் சஹிப் அல்ஹசன் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்குமார், ராஷித்கான், கவுல், சர்மா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

 

 

 

 

 

 

 
Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close