[X] Close

விராட் கோலிக்கு யோசனை: இங்கிலாந்து வீரர் வான் - நடிகர் சதீஷ் ட்விட்டரில் கருத்து மோதல்


  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 13:09 pm
  • அ+ அ-

உலகக் கோப்பைக்கு முன் விராட் கோலிக்கு ஓய்வு தர வேண்டும் என யோசனை சொன்ன முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வானுக்கும், நடிகர் சதீஷுக்கும் இடையே ட்விட்டரில் கருத்து மோதல் ஏற்பட்டது.

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்தத் தோல்விகள் விராட் கோலியின் தலைமைப் பண்புகளை, தன்னம்பிக்கையை பாதிக்கலாம். இது இந்திய அணியின் உலகக் கோப்பை கனவுக்கு நல்லதல்ல என சில கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வானும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். "இந்தியா சமயோஜிதமாக திட்டமிட்டு, வரவிருக்கும் உலகக் கோப்பைக்காக இப்போதே கோலிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உலகக் கோப்பை என்பது பெரிய போட்டி என்பதால் அதற்கு முன்பாக, அவருக்கு ஓய்வு தர வேண்டும்'' என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஆனால் இதற்கு சிலர் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கும் நடிகர் சதீஷ் இதற்கு பதில் சொல்லும் வண்ணம், "அன்புள்ள வான் அவர்களே, இந்தத் தோல்வி எங்கள் ஸ்கிப்பர் கோலியை சோர்வடையச் செய்துவிடாது.

எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை உள்ளது. அவருக்கும் சிறப்பாக இயங்க வேண்டியதன் அவசியம் தெரியும். அதுமட்டுமல்லாது எங்கள் தல தோனி அவருக்கு வழிகாட்ட இருக்கிறார்.அதனால், நீங்கள் உங்கள் வீரர்களுக்கு அறிவுரை சொல்வது நலம். எங்களுக்கு அறிவுரை சொல்லி நேரத்தை விரயமாக்க வேண்டாம்" என்று பதில் சொல்லியிருந்தார்.

இதற்கு வான், "சதீஷ்.. நான் ஒரு சிறு அறிவுரை கொடுக்கவே முயன்றேன். நிறைய விளையாடும் நபர் ஒருவர் ஆண்டில் ஒருமுறையேனும் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது இரண்டு வாரமாவது ஓய்வு எடுக்கலாம். அதுவும் ஆர்சிபி-யால் சரியாக விளையாட முடியாத சூழலில் அவர் எடுத்துக் கொள்ளலாம். விராட் கோலியும் மனிதர் தான். அவருக்கும் சில கவனிப்புகள் தேவைப்படுகிறது" என்று விளக்கமளித்தார்.

சதீஷ் விடாமல், "வாஹன், உங்கள் அக்கறையை ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் எங்கள் ஸ்கிப்பர் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் போலவே இந்ததோல்வி அவர் உற்சாகத்தைக் குறைக்காது என்றும் நம்புகிறோம். கோலி, வியத்தகு வலிமை கொண்டவர்" என்று அதற்கு மீண்டும் ஒரு பதிலை பதிவிட்டிருந்தார்.

இவர்களின் இந்த உரையாடலை ட்விட்டரில் பலரும் ஆமோதித்தும், எதிர்த்தும் பகிர்ந்து வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close