[X] Close

தோல்வியில் இருந்து மீள்வது யார்?- ஹைதராபாத் - பஞ்சாப் இன்று மோதல்


  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 09:10 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மொஹாயில் நடைபெறும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் தலா 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன. ஹைதராபாத் அணி தனது கடைசி ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடமும், பஞ்சாப் அணி தனது கடைசி ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடமும் தோல்வி கண்டிருந்தன.

ஹைதராபாத் அணி தனது முதல் 3 ஆட்டங்களிலும் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரது அதிரடி ஆட்டத்தால் எதிரணியை மிரளச் செய்திருந்தது. இந்த 3 ஆட்டங்களிலும் வார்னர், பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்து அணிக்கு பலம் சேர்த்திருந்தது. அதேவேளையில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 137 ரன்களை துரத்திய போது வார்னர், பேர்ஸ்டோ விரைவிலேயே ஆட்டமிழந்ததும் நடுவரிசை பேட்டிங் ஆட்டம் கண்டது.

விஜய் சங்கர், மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, யூசுப் பதான் ஆகியோர் தங்களது திறனை வெளிக்காட்ட சரியான வாய்ப்பு கிடைத்த போதிலும் அவர்களை அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினர். இதனால் 137 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி அறிமுக வீரராக களமிறங்கிய அல்ஸாரி ஜோசப்பின் பந்து வீச்சில் 96 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

பந்து வீச்சை பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் ஆகியோருடன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான், மொகமது நபி ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இவர்களில் ரஷித் கான், மொகமது நபி சுழற்கூட்டணி நடு ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு கவனத்தை ஈர்த்து வருகின்றனர். காயத்தில் இருந்து குணமடைந்துள்ள கேன் வில்லியம்சன் இன்று கேப்டனாக களமிறங்க வாய்ப்புள்ளது. அவர், களமிறங்கும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கக்கூடும்.

பஞ்சாப் அணி கடந்த ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக 161 ரன்களை துரத்திய நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களால் 138 ரன்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டனர். கே.எல்.ராகுல் (55), சர்ப்ராஸ் கான் (67) ஆகியோர் வெகுநேரம் களத்தில் நிலைப்பெற்ற போதிலும் வெற்றியை வசப்படுத்தத் தவறினர். ஆட்டத்தின் நடுபகுதியில் இந்த ஜோடியை சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவிடாமல் கட்டுப்படுத்தியிருந்தனர்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், மொகமது நபி ஆகியோர் பஞ்சாப்அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரக்கூடும் என கருதப்படுகிறது. காயத்தில் இருந்து மீண்டுள்ள கிறிஸ் கெயில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் அவர், அதிரடி பாதைக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.

மயங்க் அகர்வால், மன்தீப் சிங், டேவிட் மில்லர் ஆகியோர் நடுவரிசையில் மட்டையை சுழற்றும் பட்சத்தில் அணியின் பேட்டிங் கூடுதல் வலுப்பெறும். பந்து வீச்சில் மொமகது ஷமி, சேம் கரன், ஆன்ட்ரூ டை ஆகியோர் ஒருங்கிணைந்த செயல்திறனை வெளிப்படுத்துவது அவசியம்.

அணிகள் விவரம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், சேம் கரன், மயங்க் அகர்வால், கருண் நாயர்,  டேவிட் மில்லர், சர்ப்ராஸ் கான், நிக்கோலஸ் பூரன், மோசஸ் ஹென்ரிக்ஸ், மன்தீப் சிங், ஹர்டஸ் வில்ஜோயன், தர்ஷன் நல்கண்டே, அர்ஷ்தீப் சிங், அக்னிவேஷ் யாச்சி, ஹர்பிரீத் பிரார், முருகன் அஸ்வின், ஆன்ட்ரூ டை, மொகமது ஷமி,  வருண் சக்ரவர்த்தி, அங்கித் ராஜ்புத், சிம்ரன் சிங், முஜீப் உர் ரஹ்மான்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, மணீஷ் பாண்டே, மார்ட்டின் கப்டில், ரிக்கி புயி, தீபக் ஹூடா, மொகமது நபி, யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன், அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, விருத்திமான் சாஹா, சித்தார்த் கவுல், கலீல் அகமது, புவனேஸ்வர் குமார், ரஷித் கான், பாசில் தம்பி, பில்லி ஸ்டான்லேக், டி.நடராஜன், சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம்.

நேரம்: இரவு 8 இடம்: மொஹாலி நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close