[X] Close

பந்து வீச்சில் ரபாடா, பேட்டிங்கில் ஸ்ரேயஸ் ஐயர் அசத்தல்: பெங்களூருவை வீழ்த்தியது டெல்லி அணி


  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 06:49 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முதலில் பேட் செய்த பெங்களூரு அணியை 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது டெல்லி அணி.

பேட்டிங் செய்வதற்கு கடினமாக அமைந்த ஆடுகளத்தில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கத்தில் பந்துகளுக்கு நிகராகவே ரன்கள் சேர்த்த விராட் கோலி, ஆட்டமிழப்பதற்கு முன்னர்தான் இரு சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

அவருக்கு அடுத்தப்படியாக மொயின் அலி 18 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 32 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக விளையாடி வந்த அவர், சந்தீப் லமிசான் பந்தில் சிக்ஸர் விளாசிய நிலையில் அடுத்த பந்தில் ஸ்டெம்பிங்க் ஆனார். இவர்களைத் தவிர பார்த்தீவ் படேல் 9, டி வில்லியர்ஸ் 17, மார்கஸ் ஸ்டாயினிஸ் 15, அக் ஷ்தீப் நாத் 19, பவன் நெகி 0, மொகமது சிராஜ் 1 ரன் சேர்த்து ஆட்டமிழந்தனர். டிம் சவுதி 9, யுவேந்திர சாஹல் 1 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடக்க வீரராக விராட் கோலி களமிறங்கி 17 ஓவர்கள் வரை களத்தில் இருந்த போதிலும் அணியின் ரன்விகிதம் பெரிய அளவில் உயரவில்லை. இந்தகாலக்கட்டத்தில் பெங்களூரு அணி 133 ரன்களேசேர்த்திருந்தது. அடுத்த ஓவரில் விராட் கோலி, அக் ஷ்தீப்நாதத், பவன் நெகி ஆகியோரை ரபாடா வெளியேற்ற பெங்களூரு அணி குறைந்த ரன்களில் மட்டுப்படுத்தப்பட்டது.

முதல் 10 ஓவர்களில் 63 ரன்கள் சேர்த்த பெங்களூரு அணி,அடுத்த 10 ஓவர்களில் 86 ரன்கள் சேர்த்தது. கடைசி 3 ஓவர்களில் பெங்களூரு அணியால் வெறும் 16 ரன்களே சேர்க்க முடிந்தது. இது அந்த அணிக்கு பெரிய பாதிப்பாக அமைந்தது.

டெல்லி அணி தரப்பில் ரபாடா 4 ஓவர்களை வீசி 21 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 4 விக்கெட்களை வீழ்த்தினார். விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரது விக்கெட்களும் இதில் அடங்கும். அதேவேளையில் கிறிஸ் மோரிஸ் 28 ரன்களை வழங்கிய நிலையில் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். நடு ஓவர்களில் அக்சர்படேல் சிறப்பாக வீசி ரன்குவிப்பை கட்டுப்படுத்தினார். அவர், 4 ஓவர்களை வீசி 22 ரன்களை வழங்கி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

150 ரன்கள் இலக்குடன் பேட்செய்த டெல்லி அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 50 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் விளாசினார். பிரித்வி ஷா 28, ஷிகர் தவண் 0, காலின் இங்க்ராம் 22, ரிஷப் பந்த் 18, கிறிஸ் மோரிஸ் 0 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அக்சர் படேல் 4, ராகுல் டிவாட்டியா 1 ரன் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பெங்களூரு அணி தரப்பில் நவ்தீப் சைனி 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி தொடரில் 3-வது வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் பெங்களூரு அணி 6-வது தோல்வியை பெற்றது. ஆட்ட நாயகனாக ரபாடா தேர்வானார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close