[X] Close

ஜடேஜா, ஹர்பஜனிடம் வீழ்ந்த ஆர்சிபி: வழக்கம் போல முடித்துவைத்தார் “தல” தோனி


csk-beat-rcb

3 விக்கெட் வீழ்த்திய ஜடேஜாவை பாராட்டும் சகவீரர்கள்

  • போத்திராஜ்
  • Posted: 05 May, 2018 21:22 pm
  • அ+ அ-

புனே,

ஐடேஜா, ஹர்பஜன் ஆகியோரின் திணறடிக்கும் சுழற்பந்துவீச்சு, தோனியின் வழக்கமான ஹிட்டிங் ஆகியவற்றால், புனேயில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.

இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே ஜடேஜா பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் அனைத்திலும் சொதப்பி வந்தார்.இதனால், சிஎஸ்கே அணியில் இருப்பதே வேஸ்ட் என்று கடும் விமர்சனம் எழுந்தது. கடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 கேட்சுகளை தவறவிட்டும், ரன்களும்சேர்க்காமல் ரசிகர்களின் பெரும் கோபத்தை ஜடேஜா சம்பாதித்தார்.

இந்த தொடரிலும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் இதுவரை குறிப்பிடும்படியாக ஏதும் செய்யாத ஜடேஜா இந்தபோட்டியில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி பொங்கி எழுந்துவிட்டார்.

விராட் கோலி, பர்தீவ் படேல், மன்தீப் சிங் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை ரவிந்திர ஜடேஜா வீழ்த்தி நீண்ட நாட்களுக்கு பின் தனது பந்துவீச்சு திறமையை நிரூபித்தார். ஆட்டநாயகன் விருதையும் ஜடேஜா பெற்றார்.

ஆர்சிபியின் முக்கியத் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் டீவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தி ஹர்பஜன் சிங் வீழ்த்தி இருவரும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

கிராமங்களில் ஒருபழமொழியும் கூறுவதுண்டு கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்று, அதுபோல் ஆர்சிபியின் பேட்டிங் நாளுக்குநாள் பழமொழிக்கு ஏற்பத்தான் இருந்து வருகிறது. இந்திய அணியில் கேப்டனாக இருக்கும்போது  விராட் கோலியிடம் காணப்பட்ட  ஆக்ரோஷம், துடிப்பான பேட்டிங் ஆகியவை இந்த தொடரில் காணாமல் போய்விட்டது. என்னவென்று தெரியவில்லை(உஷ் கண்டுகாதீங்க..)

 அதிலும் இன்றைய ஆட்டத்தில் பர்தீவ் படேல், டிம் சவூதி ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ஸ்கோர் செய்தனர். மற்ற வீரர்கள் அனைவருக்கும் பேட்டிங் தெரிந்திருந்தும் விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளும் அளவுக்கு கூட பேட் செய்யாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது வெட்கக்கேடாகும். பர்தீவ், சவூதி ஆகிய இருவரும் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்திருந்தால், பெங்களூரு அணியின் நிலை பரிதாபமாக இருந்திருக்கும்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 7வெற்றிகள், 3 தோல்விகள், என 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்ச்ரஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 6 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளது.

டாஸ்வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பீல்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்தனர். 128 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஓவர்கள் மீதமிருக்கையில், 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு அணியின் வீரர்கள் மெக்குலம், பர்தீவ் படேல் களமிறங்கினார்கள். பெங்களூருக்கு அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இங்கிடி வீசிய 2 ஓவரில் மெக்குலம் 5 ரன்களில் ஆட்டமிழந்து விக்கெட் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்டுவைத்தார். அவரைத் தொடர்ந்து விக்கெட்டுகள் வரிசையாக விழத் தொடங்கின.

அடுத்து வந்த விராட்கோலி, பர்தீவ் படேலுடன் இணைந்தார். கோலி பொறுமை காக்க பர்தேவ் படேல் அடித்து நொறுக்கினார். 6-வது ஓவரை ஜடேஜா வீசினார். முதல் பந்திலேயே கோலி 8 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 47 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது.

கோலி ஆட்டமிழந்து சென்றபோது, ஜடேஜா முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் அமைதியாக இருந்தார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் விமர்னசங்கள் ஓடின என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் வந்த வீரர்கள் டீவில்லியர்ஸ் 1 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்பஜன் பந்தில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். 56 ரன்களுக்கு 3-வது விக்கெட்டை இழந்தது பெங்களூரு அணி. இதுபோல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. அடுத்து வந்த மன்தீப் சிங் 7 ரன்களில் ஜடேஜா சுழலில் வீழ்ந்தார்.

நிதானமாக பேட் செய்த பர்தீவ் படேல் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். பர்தீவ் 53 ரன்கள் சேர்த்திருந்தபோது ஜடேஜா வீசிய ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்து கிராண்ட்ஹோமே 8 ரன்கள், அஸ்வின் ஒருரன், உமேஷ் யாதவ் ஒருரன், சிராஜ் 3 ரன்கள் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 47 ரன்களுக்கு 2 வது விக்கெட் இழந்த பெங்களூரு அணி 89 ரன்களுக்கு 8-வது விக்கெட்டை இழந்தது. அடுத்து 42 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டை பறிகொடுத்து பொறுப்பில்லாமல் ஆட்டமிழந்தனர்.

டிம் சவூதி 36 ரன்கள் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

128 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. 200 ரன்களுக்கு மேல் இந்த தொடரில் பல முறை அடித்த சிஎஸ்கே அணி இந்த எளிய ஸ்கோரை சேஸ் செய்வதற்குள் திணறிவிட்டது.

உமேஷ் யாதவின் 3-வதுஓவரில் ஸ்டெம்பை பறிகொடுத்து வாட்ஸன் 11 ரன்களில் வீழ்ந்தார். அடுத்து வந்த ரெய்னா, ராயுடுவுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர். சவூதி வீசிய 6-வது ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடித்து ராயுடு மிரட்டினார்.

நிதானமாக பேட் செய்துவந்த ரெய்னா 25 ரன்களில் உமேஷ் யாதவ் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்து ஷோரே களமிறங்கினார். அஸ்வின் முருகன் வீசிய 11-வது ஓவரின் முதல்பந்தில் ராயுடு 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். ராண்ட்ஹோமே வீசிய ஆடுத்த ஓவரில் ஷோரே 8 ரன்களில் வெளியேறினார்.

அடுத்ததாக ஜடேஜா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பலமுறை ஜடேஜாவை களமிறக்கி கையைசுட்டுக்கொண்ட தோனி, போட்டியில் வெற்றித் துருப்புச் சீட்டான பிராவோவை களமிறக்கினார். பிராவோவும், தோனியும் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் சென்றனர்.

16-வது ஓவரை வீசிய அஸ்வின் முருகன் பந்தில் பிராவோ ஒரு சிக்ஸரும், தோனி பவுண்டரியும் அடித்தனர். சாஹல் வீசிய 18-வது ஓவரில் தோனி தனது வழக்கமான பினிஷிங் ஷாட்களாக 3 சிக்ஸர்களை அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் தோனி 31ரன்களிலும், பிராவோ 14 ரன்களிலும் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணித்தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close