[X] Close

ஆந்த்ரே ரஸ்ஸல் அதிரடியை சமாளிக்குமா ராஜஸ்தான் அணி?


  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 08:32 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்த அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி கடைசியாக பெங்களூரு அணியை வீழ்த்தி ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தை நம்பிக்கையுடன் அந்த அணி எதிர்கொண்டிருந்தது.

ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களான ஜோப்ரா ஆர்ச்சர், ஜெயதேவ் உனத்கட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இறுதிக்கட்ட ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது பலவீனமாக உள்ளது. கொல்கத்தா அணியில் எந்த வகையிலான பந்து வீச்சையும் பதம் பார்க்கக்கூடிய அதிரடி வீரரான ஆந்த்ரே ரஸ்ஸல் இருப்பதால் ராஜஸ்தான் அணி தனது பந்து வீச்சு திட்டங்களில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசிக்கக்கூடும்.

ஒரே ஒரு நேர்மறையான விஷயம் என்னவெனில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது ‘கூக்ளி’ பந்து வீச்சால் ஸ்ரேயஸ் கோபால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அந்த ஆட்டத்தில் விராட் கோலி, டி வில்லியர்ஸ், சிம்ரன் ஹெட்மையர் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்திய ஸ்ரேயஸ் கோபால் வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான பந்து வீச்சு வெளிப்படக்கூடும்.

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற போதிலும், அதற்கு முந்தைய 3 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் அணி வெற்றியின் பாதையில் இருந்து தோல்வியை நோக்கி சரிந்திருந்தது. பஞ்சாப், ஹைதராபாத், சென்னை ஆகிய அணிகளுக்கு எதிராக கடைசி கட்ட தருணங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியது. இதனால் இந்த விஷயங்களிலும் ராஜஸ்தான் அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

பேட்டிங்கில் ரஹானே, ஜாஸ் பட்லர் சீராக ரன்கள் குவித்து வரும் நிலையில் ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிகரிக்கும்.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி நேற்று முன்தினம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்திய நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள கொல்கத்தா அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது.

நித்திஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், ராபின் உத்தப்பா, சுப்மான் கில் ஆகியோர் பேட்டிங்கில் அபாரமான பார்மில் உள்ளனர். அதிலும் ரஸ்ஸல் தனது அதிரடியால் எந்த ஒரு சூழ்நிலையிலும் வெற்றியை தேடிக்கொடுப்பவராக உள்ளார். பெங்களூருவுக்கு எதிராக அவர், 13 பந்துகளில் 48 ரன்கள் விளாசி மிரளச் செய்திருந்தார்.

இன்றைய ஆட்டத்திலும் ரஸ்ஸல், ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடித் தரக்கூடும். போட்டி நடைபெறும் இன்றைய ஆடுகளம் வேகம் குறைத்து வீசும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுனில் நரேன், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா சுழல் கூட்டணி அணிக்கு பலம் சேர்க்கக்கூடும்.

‘‘எந்த மைதானமும் பெரிதில்லை’’

பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடியது குறித்து கொல்கத்தா அணி வீரர் ரஸ்ஸல் கூறுகையில், ’’எந்த ஒரு மைதானமும் எனக்கு அவ்வளவு பெரிய மைதானமாக தோன்றாது. ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. அந்த மைதானங்களில் சிக்ஸர் களை, ஸ்டாண்ட் பகுதிக்கு விளாசும்போது எனக்கே ஆச்சரிய மாக இருக்கும். என்னுடைய வலிமை மீதும், பேட்டிங் திறன்மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. பவுலர்கள் பந்து களை வீசும்போது அதிக வேகத்தில் விளாசும் டெக் னிக்கை பயன்படுத்தினேன். இதை அவ்வளவாக எனக்கு விளக்கத் தெரியவில்லை. அதை என்னால் மைதானத்தில்தான் காட்ட முடியும்.

20-க்கும் மேற்பட்ட பந்துகளில் 68 ரன்கள் எடுக்கவேண்டும் என்பது எப்போதுமே நடக்காது. அதற்கு உங்களது உடல் ஒத்துழைக்கவேண்டும்’’ என்றார்.

இன்றைய ஆட்டங்கள்

பெங்களூரு- டெல்லி

இடம்: பெங்களூரு

நேரம்: மாலை 4

கொல்கத்தா - ராஜஸ்தான்

இடம்: ஜெய்ப்பூர்

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close