[X] Close

பஞ்சாப் அணியுடன் இன்று சேப்பாக்கத்தில் மோதல்; வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் சிஎஸ்கே


  • kamadenu
  • Posted: 06 Apr, 2019 08:21 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று மாலை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

நடப்பு சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் டெல்லி அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 8 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது. ஹாட்ரிக் வெற்றி பெற்றிருந்த சென்னை அணிக்கு கடைசி ஆட்டத்தில் மும்பை அணி முட்டுக்கட்டை போட்டிருந்தது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வி கண்டிருந்தது. 171 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணியால் 133 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் சிறப்பாக தொடங்கிய சென்னை அணி இறுதிக்கட்ட ஓவர்களில் அதிக ரன்களை தாரை வார்த்ததன் வாயிலாகவும், பேட்டிங்கின் போது தொடக்க ஓவர்களில் விரைவாக விக்கெட்களை பறிகொடுத்ததும் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்தது.

இந்நிலையில் சென்னை அணி தனது 5-வது ஆட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பஞ்சாப் அணியை சந்திக்கிறது. இன்றைய ஆட்டமானது தோனியின் அமைதியான தலைப் பண்புக்கும், அஸ்வினின் சற்று ஆக்ரோஷமான தலைப் பண்புக்கும் இடையிலான மோதலாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரு ஆட்டங்களும் மாறுபட்ட முடிவுகளை தந்தன. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் முற்றிலும் சுழலுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர் ஆகியோர் தங்களது சுழல் ஜாலத்தால் வெறும் 70 ரன்களில் சுருட்டினர்.

அதேவேளையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மை மாற்றி அமைக்கப்பட்டதால் பேட்டிங்குக்கு சாதகமானது. அந்த ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் 175 ரன்கள் குவித்த சென்னை அணி, இறுதிக்கட்ட ஓவர்களில் டுவைன் பிராவோவின் அனுபவ பந்து வீச்சால் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது.

சென்னை அணியின் பலமே குறிப்பிட்ட ஒரு சில வீரர்களின் திறனை மட்டும் நம்பியிருக்காமல் ஒட்டுமொத்த அணியாக இணைந்து செயல்படுவதுதான். கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய அம்பதி ராயுடு இம்முறை ரன்கள் சேர்க்க கடுமையாக திணறி வருகிறார். 4 ஆட்டங்களில் அவர், 8.50 சராசரியுடன் 34 ரன்களே சேர்த்துள்ளார். அவரது மோசமான செயல் திறனால் டாப் ஆர்டரில் முரளி விஜய்க்கு வாய்ப்பு வழங்கக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டுவைன் பிராவோவுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர்,  இருவார காலங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது இடத்தில்  ஸ்காட் குக்கேலீ னுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வான்கடே ஆடுகளத்தில் சென்னை அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கியது. இன்றைய ஆட்டத்தை சுழலுக்கு சாதகமான தனது சொந்த மண்ணில் எதிர்கொள்வதால் மொஹித் சர்மா அல்லது ஷர்துல் தாக்குர் நீக்கப்படக்கூடும். இதனால் விளையாடும் லெவனில் மிட்செல் சாண்ட்னர் அல்லது ஹர்பஜன் சிங் இடம்பெற வாய்ப்புள்ளது.

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றிகளை பெற்றுள்ளது. சென்னைஅணியை போன்றே அந்த அணியிலும் அஸ்வின், முஜீப் உர் ரஹ்மான், முருகன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி என தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

இவர்கள் சென்னை அணிக்கு அழுத்தம்தரக்கூடும். கடந்த ஆட்டத்தில் முதுகு வலி காரணமாக விளையாடாத அதிரடிவீரரான கிறிஸ் கெயில் இன்று களமிறங்கக்கூடும். அவர், களமிறங்கும்பட்சத்தில் சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை சந்திக்கக்கூடும். கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான் ஆகியோரிடம் தொடர்ச்சியான பங்களிப்பு இல்லாமல் உள்ளது.

இவர்கள் சீராக ரன்கள் குவிக்கும் பட்சத்தில் அணியின் பேட்டிங் பலம் அடையும். கடந்த ஆட்டத்தில் ஆல்ரவுண்டராக உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்திய சேம் கரனிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கு சாத்தியம் இல்லாத சூழ்நிலையில் சேம் கரன்ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இதேபோல் மொகமது ஷமியும்சிறந்த பார்மில் உள்ளார். டெல்லிஅணிக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிக்கட்ட ஓவர்களில் ஷமி கைப்பற்றிய2 விக்கெட்கள்தான் வெற்றிக்கு அடித்தளமிட்டிருந்தது என்பது குறிப்பிட்த் தக்கது.

‘2 வாரங்கள் பிராவோ இல்லை’

சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கூறுகையில், “தொடை பகுதியில் காயம் அடைந்துள்ள டுவைன் பிராவோ இரு வாரங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது எங்களுக்கு பெரிய இழப்புதான். அவரது இடத்தில் ஸ்காட் குக்கேலீனை களமிறக்குவது குறித்து தோனியும், பிளெமிங்கும் ஆலோசிப்பார்கள் என்று நம்புகிறேன். இறுதிக்கட்ட ஓவர் பந்து வீச்சில் குக்கேலீன் முக்கிய வீரராக இருப்பார்.  மும்பை அணிக்கு எதிராக இறுதிக்கட்ட ஓவர்களில் அதிக அளவிலான ரன்களை வழங்கினோம். இந்த பகுதியில் சிறப்பாக செயல்படுவதில் முயற்சியும் கவனமும் செலுத்த வேண்டும். ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோரது பார்ம் குறித்து கவலை இல்லை. வலை பயிற்சியின் போது அவர்கள் சிறப்பாகவே செயல்படுகிறார்கள். இருவரும் பெரிய அளவிலான ரன்களை குவிப்பார்கள் என நான் நம்புகிறேன். பஞ்சாப் அணியில் அஸ்வின் மிகவும் முக்கியமான வீரர். அவர் சிறந்த வீரரும் கூட. அவருடைய சொந்த மைதானத்தில் மீண்டும் விளையாடுவதற்கு ஆர்வமாக இருப்பார்.

இங்குள்ள சூழ்நிலைகளையும் அவர் நன்கு அறிந்திருப்பார். இதனால் இந்த ஆட்டம் ஒரு நல்ல சவாலாக இருக்கும். சிஎஸ்கே பற்றிய உள்ளார்ந்த விஷயங்களையும் அஸ்வின் தெரிந்திருப்பார். ஆனால் போட்டியின் தினத்தில் திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதில் தான் அனைத்தும் உள்ளது. நாங்கள் எங்களது ஆட்டத்திலும், திறமையை செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்துவோம். அதை நாங்கள் செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் : மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், முரளி விஜய், கேதார் ஜாதவ், சேம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஷோரே,  ரிதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, கரண் சர்மா, இம்ரன் தகிர், ஹர்பஜன் சிங், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா, கே.எம்.ஆஷிப், ஸ்காட் குக்கேலீன், தீபக் ஷகார், என்.ஜெகதீசன்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: ரவிச்சந்திரன் அஸ்வின் (கேப்டன்), கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில், சேம் கரன், மயங்க் அகர்வால், கருண் நாயர்,  டேவிட் மில்லர், சர்ப்ராஸ் கான், நிக்கோலஸ் பூரன், மோசஸ் ஹென்ரிக்ஸ், மன்தீப் சிங், ஹர்டஸ் வில்ஜோயன், தர்ஷன் நல்கண்டே, அர்ஷ்தீப் சிங், அக்னிவேஷ் யாச்சி, ஹர்பிரீத் பிரார், முருகன் அஸ்வின், ஆன்ட்ரூ டை, மொகமது ஷமி,  வருண் சக்ரவர்த்தி, அங்கித் ராஜ்புத், சிம்ரன் சிங், முஜீப் உர் ரஹ்மான்.

சென்னை - பஞ்சாப்

இடம்: சென்னை; நேரம்: மாலை 4

ஹைதராபாத் - மும்பை

இடம்: ஹைதராபாத், மாலை 4

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close