[X] Close

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பெங்களூரு?- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இன்று மோதல்


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 09:44 am
  • அ+ அ-

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனிலும் மோசமாகவே விளையாடி வருகிறது. இதுவரை விளையாடி உள்ள 4 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ள அந்த அணி இன்று தனது 5-வது ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.

பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் பெங்களூரு அணியின் செயல்திறன் ஏமாற்றமாகவே உள்ளது. அதிலும் வெற்றிக்கான 11 பேர் கொண்ட அணிச்சேர்க்கையை தேடி கண்டறிவது என்பதே அந்த அணிக்கு கடும் சவாலாக மாறியுள்ளது. பேட்டிங்கில் சரிவு காண்பது அணியின் செயல்திறனை வெகுவாக பாதித்துள்ளது.

அதிலும் விராட் கோலியின் பார்ம், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது தரநிலைக்கு தகுந்த அளவில் இல்லாதது பலவீனமாக மாறியுள்ளது. இந்த சீசனில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள விராட் கோலி 19.50 சராசரியுடன் 78 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். மற்ற முன்னணி வீரர்களான டி வில்லியர்ஸ் 31 சராசரியுடன் 93 ரன்களும், பார்த்தீவ் படேல் 34.50 சராசரியுடன் 138 ரன்களும் சேர்த்துள்ளனர்.

சென்னை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர் ஆகியோரது சுழலில் 17.1 ஓவரில் 70 ரன்களுக்கு சுருண்டது. ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் தாராளமாக ரன்களை வாரி வழங்க அந்த ஆட்டத்தில் 232 ரன்கள் குவிக்கப்பட்டது. டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ சதம் விளாசி மிரட்டியிருந்தனர்.

ஆகப்பெரிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணி 35 ரன்களுக்குள் 6 விக்கெட்களை இழந்து சரண்டர் ஆனது. இந்த ஆட்டத்தில் விராட் கோலியும் (3), டி வில்லியர்ஸும் (1) இணைந்து வெறும் 4 ரன்களே சேர்த்தனர். முடிவில் அந்த ஆட்டத்தில் 113 ரன்களுக்கு சுருண்டு 118 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்தது பெங்களூரு அணி.

இதைத் தொடர்ந்து 3 முறை சாம்பியனான மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டி வில்லியர்ஸின் அதிரடி பேட்டிங்கால் பெங்களூரு போராடிய போதிலும் 6 ரன்களில் தோல்வியடைய நேரிட்டது. கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தில் டாப் ஆர்டரில் பார்த்தீவ் படேல் மட்டுமே போராடி அரை சதம் அடித்தார்.

விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரிடம் இருந்து உயர்மட்ட அளவிலான செயல்திறன் வெளிப்படாமல் போனது. அணியின் பிரச்சினையே பேட்டிங்கில் இவர்கள் 3 பேரை மட்டுமே நம்பி இருப்பதுதான். 4-வது வீரராக களமிறங்கும் மேற்கிந்தியத் தீவுகளின் சிம்ரன் ஹெட்மையர் 4 ஆட்டங்களிலும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஒட்டுமொத்தமாக அவர் சேர்த்த ரன்கள் 15 மட்டுமே. இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் நீக்கப்பட்டு தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அணியின் டாப் ஆர்டரை மாற்றியமைப்பது குறித்தும் பெங்களூரு அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் யுவேந்திர சாஹல் மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடியவராக உள்ளார். மற்ற பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை வீழ்த்துவதில் முனைப்பு காட்டாமலும் இறுதிக்கட்ட ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்குவதும் அணியின் செயல்திறனை பாதிப்பதாக உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சிலும் மாற்றங்கள் இருக்கக்கூடும்.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி தொடரை சிறப்பான முறையில் தொடங்கியது. நித்திஷ் ராணா, ராபின் உத்தப்பா, ஆந்த்ரே ரஸ்ஸல், சுப்மான் கில் ஆகியோரது அதிரடியில் ஹைதராபாத், பஞ்சாப் அணிகளை வீழ்த்திய நிலையில் டெல்லி அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வி கண்டது. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது கொல்கத்தா அணி.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close