[X] Close

செத்த ஆட்டத்திற்கு உயிரூட்டிய ஜானி பேர்ஸ்டோ: டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது சன் ரைசர்ஸ்


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 07:59 am
  • அ+ அ-

-இரா.முத்துக்குமார்

டெல்லியின்  மந்தமான பிட்சில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 16வது போட்டியில்  டெல்லி கேப்பிடல்ஸ் மீண்டும் ஒரு சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 129 ரன்களை மட்டுமே எடுக்க சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

 

இத்தகைய போட்டிகள் உண்மையில் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் வளம் சேர்க்காது, வீரர்களுக்கும் வளம் சேர்க்காது. அன்று 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த துர்சொப்பனத்திலிருந்து இன்னும் டெல்லி கேப்பிடல்ஸ் விழிக்கவில்லை என்று தெரிகிறது.

 

சன்ரைசர்ஸ் அணியில் பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், மொகமது நபி, சித்தார்த் கவுல், ரஷீத் கான், சந்தீப் சர்மா ஆகிய அனைவருமே விக்கெட் எடுத்தனர். சிக்கனம் காட்டினர், பேட்டிங்கில் பேர்ஸ்டோ மீண்டும் பாடம் நடத்தினார், 30 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 48 ரன்கள் விளாசி விரட்டலை ஒன்றுமில்லாமல் செய்தார். ஆனால் இவருக்கு 5 ரன்களில் அக்சர் படேல் தன் ஓவரில் தனக்கு வந்த கேட்சை விட்டார், கொஞ்சம் கடினமான வாய்ப்புதான், ஆனால் அந்த லெவலில் பிடித்திருக்க வேண்டும். ஒருவேளை அவர் பிடித்திருந்தால் ஆட்டம் இன்னும் நெருக்கமாகக் கூட சென்றிருக்கும்.

 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று முதலில் டெல்லி அணியை பேட் செய்ய அழைத்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் பந்தை பின்னால் சென்று ஆஃப் திசையில் பவுண்டரி விளாசினார் புவனேஷ்வர் குமார்,  சச்சின், சேவாகிடம் காணப்படும் முதலில் வலது காலை பின்னால் குறுக்காக நகர்த்தி அருமையான பஞ்ச்-ட்ரைவ். சரி என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் புவனேஷ்வர் குமாரை ஏதோ லீக் பவுலரை அடிப்பது போல் அவரது இன்ஸ்விங்கரை அசிங்கமாக கிராஸ் பேட் போட்டு அடிக்க நினைத்தார் ஸ்டம்ப் பெயர்ந்தது.  11 ரன்களில் வெளியேறினார்.

 

shaw.jpg 

 

பவர் பிளேயில் ஷிகர் தவண், ஷ்ரேயஸ் அய்யரை புவனேஷ்வர் குமார், மொகமது நபி கட்டிப்போட்டனர்.  ஒரு கட்டத்தில் புவனேஷ்வர் குமார் 9 டாட்பால்கள் போட்டார். அய்யர் பந்துக்கு ஒரு ரன் என்ற இன்னின்சையே ஆட முடிந்தது. 41 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அவர் 43 ரன்கள் எடுத்து 17வது ஓவரில் ரஷீத் கானின் கூக்ளியை கணிக்க முடியாமல் பவுல்டு ஆனார். 115/7 என்ற போது கடைசி ஓவரில் அக்சர் படேல் இரண்டு சிக்சர்களை அடித்ததால் 129 ரன்கள் வந்தது.

 

இந்திய உலகக்கோப்பை ‘தொடக்க வீரர்’ ஷிகர் தவன் 14 பந்துகளில் 12 ரன்களுக்குத் திணறி ஸ்வீப் ஷாட் டாப் எட்ஜில் கேட்ச் ஆகி வெளியேறினார். ரிஷப் பந்த் மீண்டும் ஒரு சொதப்பலான இன்னிங்சில் 5 ரன்களில் மொகமது நபியிடம் வெளியேறினார். ஷாட்டில் பவர் இல்லை, உயரம் மட்டுமே இருந்த்தது எளிதான கேட்ச் ஆனது.  திவேத்தியா 5ம் நிலையில் களமிறக்கப்பட்டார். இவரும் 5 ரன்களில் சந்தீப் சர்மாவின் அருமையான விரல் மூலம் வீசப்பட்ட வேகம் குறைவான பந்தில் கேட்ச் ஆனார். கொலின் இங்ரம் 5 ரன்களில் சித்தார்த் கவுல் ஸ்லோயர் பந்தை கட் செய்ய முயன்று பாண்டேயின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார், டெல்லி கேபிடல்ஸ் அணியில் பந்த், திவேத்தியா, இங்ரம் ஆகியோர் 555 ஆயினர்.

 

கடைசியில் கிறிஸ் மோரிஸ் (17),  அக்சர் படேல் (23) ஆகியோர்  பங்களிப்பினால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 129 ரன்களை எட்டியது. குமார், நபி, கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

பேர்ஸ்டோவின் உயிரோட்ட இன்னிங்ஸ்:

 

பொதுவாகவே செத்துக் கிடந்த ஆட்டத்தில் சன் ரைசர்ஸின் இங்கிலாந்த் வீரர் ஜானி பேர்ஸ்டொவின் பேட்டிங்தான் உயிரோட்டமுள்ளதாக இருந்தது.  வார்னர் இந்த இலக்கை ஒரு கையில் ஒரு பேடுடன் ஆடி ஜெயிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் 18 பந்துகளில் பவுண்டரியே இல்லாமல் 10 ரன்களில் ரபாடாவிடம் ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது ஸ்கோர் 68 ரன்கள்.

 

காரணம் பேர்ஸ்டோ முன்னதாகவே 28 பந்துகளில் 48 ரன்களை வெளுத்துக் கட்டினார். இதில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் அடங்கும். 5 ரன்களில் அவருக்கு அக்சர் படேல் தன் பவுலிங்கில் கடினமான வாய்ப்பைத் தவற விட்டார்.

 

கிறிஸ் மோரிஸை ஒரே ஒவரில் 16 ரன்களும், ரபாடாவை 14 ரன்களும் விளாசிய பேர்ஸ்டோ, அவர்களின் வேகத்தை நன்றாகப் பயன்படுத்தி பவுண்டரிகளை விளாசினார்.  நேபாள் பவுலர் சந்தீப் லமிஷேன் ஓவர்களில் 3 பவுண்டரிகள் 1 சிக்சர்களை விளாசினார் பேர்ஸ்டோ, மேலேறி வந்து நேராக ஒரு செந்தூக்கு சிக்ஸ் அபாரம்.

 

கடைசியாக திவேத்தியா பேர்ஸ்டோவை எல்.பி. செய்தார்.  இவர் அடித்து நொறுக்கிச் சென்ற பிறகுதான் வார்னர் ஆட்டமிழந்தார்.  விஜய் சங்கர் இறங்கி ஸ்கோரை 100ஐக் கடக்க வைத்தார்.  ஆனால் சன்ரைசர்ஸ் ‘சோக்’ ஆகிவிடுமோ என்ற ஐயத்துக்கு இடம் கொடுக்கும் விதமாக பாண்டே, விஜய், ஹூடா 3 ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.  111/5 என்று கொஞ்சம் தடுமாற்றமடைந்தது.

 

ஆனால் பேர்ஸ்டோதான் ஏற்கெனவே விளாசிவிட்டுச் சென்றதால் தேவைப்படும் ரன் விகிதம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. யூசுப் பத்தான் (9), நபி (17) முடித்து வைத்தனர்.  ஆட்ட நாயகன் ஜானி பேர்ஸ்டோ.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close