[X] Close

ஐபிஎல் போட்டிகளை ஜவ்வு போன்று இழுப்பது ஏன்? பதிலி வீரர்களை துஷ்பிரயோகம் செய்கின்றனர்: மொகமது கைஃப் காட்டம்


  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 10:47 am
  • அ+ அ-

-நோபாலன்

டுவெண்டி 20 கிரிக்கெட் என்றாலே வேகம். வேகம்தான் அதன் உயிர் மூச்சு, ஆனால் ஐபிஎல் போட்டிகள் பல ஆமை வேகத்தில் ஆடப்படுகின்றன, ரோஹித் சர்மா, ரஹானே போன்ற கேப்டன்கள் மந்தகதி பவுலிங்குக்காக ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டனர்.

ஆனால் இதைவிட அபத்தமானதும் அராஜகமானதும்  ‘ஸ்ட்ராடஜிக் டைம் அவுட்’ என்று நைச்சியமாக பெயர் வைத்து விளம்பர இடைவெளிகளுக்கு வழிவகை செய்ததுதான் ஐபிஎல் ஆட்டங்களின் வேகத்தை குறைப்பதோடு, ஒரு அணி நன்றாக ஆடிவரும்போது இடைவேளைக்குப் பிறகு தொய்வு அடைந்து, சரிவடைந்து தோல்வியைக் கூட தழுவுகிறது. அனைத்திற்கும் மேலாக இரவு 8 மணி ஆட்டங்கல் 11.15 மணிக்கு முடிய வேண்டும், ஆனால் 11.45 சில வேளைகளில் 12 மணிக்குக் கூட முடிவடைவதால் மக்கள் டி20 ஆட்டத்திலும் கொட்டாவி விடுவதைப் பார்க்க முடிகிறது.

சில அணிகள் தங்கள் வயதான பீல்டர்களை அனுப்பி விட்டு இளங்காளைகளை களமிறக்குகின்றனர், பதிலி வீரர்களை தாறுமாறாக அணிகள் துஷ்பிரயோகம் செய்வதையும் பார்க்க முடிகிறது என்று டெல்லி கேப்பிடல்ஸ் உதவிப் பயிற்சியாளர் மொகமது கைஃப் சாடியுள்ளார்.

கொல்கத்தா அணி அன்று பியூஷ் சாவ்லா 4 ஓவர்கள் முடித்தவுடன் அவரை அனுப்பி விட்டு ரிங்கு சிங் என்ற இளம் வீரரை பதிலியாக இறக்கியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நியாயமற்ற கிரிக்கெட்டுக்கு பெயர் பெற்ற அணியாக மாறி வருகிறது. மன்கட் செய்வது, டெட் பாலுக்கு 4 ரன்கள் கேட்பது இதோடு ஒரு போட்டியில் சர்பராஸ் கான் பீல்டிங்கே செய்யவில்லை, அப்படியிருந்தால் எப்படி பேட்டிங்கில் இறங்க அனுமதிக்கப்படுகிறார் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன, ஐபிஎல் கிரிக்கெட் ஸ்பிரிட் ஆஃப் த கேமுடன் ஆடப்படுவதில்லை என்பதோடு விதிமுறைகளும் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கைஃப் கூறியதாவது:

ஆம், ஆட்டம் ஆமை கதியில் செல்கிறது என்ற குற்றச்சாட்டு நியாயமே. இன்னொன்றையும் கூறிவிடுகிறேன், பதிலி வீரர்களை களமிறக்கும் போது நடுவர்கள் கவனமாக இருப்பது அவசியம். டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா போட்டியில் ரஸல் போகிறார், ரிங்கு சிங் வருகிறார். பிறகு பியூஷ் சாவ்லா  தன் 4 ஓவர்களை முதலில் வீசி முடித்து விட்டு பெவிலியன் செல்கிறார், அவருக்கு ஒரு பதிலி வீரர் வருகிறார்... என்ன இது?

மந்தமான பீல்டர்களை விரைவில் ஓவரை முடித்து பெவிலியன் அனுப்பி விட்டு துரித பீல்டர்களை இறக்க அணிகள் திட்டமிடுகின்றன. இதுவும் நேரத்தைக் குடிக்கிறது என்பதோடி, பதிலி வீரர்கள் எந்த ஓவர்களில் இறங்கலாம், எந்த இடங்களில் அவர்கள் பீல்ட் செய்யலாம் என்பதில் கொஞ்சம் விதிமுறைகளைக் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.

பஞ்சாப் அணியும் இதை செய்தது, சர்பராஸ் கான் பீல்டிங்குக்கே வரவில்லை. இவருக்குப் பதிலாக பீல்ட் செய்த கருண் நாயர், கொலின் இங்ரமை வெளியேற்ற ஒரு நல்ல கேட்சைப்பிடித்தார். சர்பராஸ் கான் காயமா என்ன? எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இவையெல்லாம் பெரிய விஷயமல்ல என்றாலும் அணிகள் இப்படியெல்லாம் ஆடுவது என்னைப் பொறுத்தவரை சரியில்லை என்றே கூறுவேன்.

மேலும் போட்டிக்கு முன்பாக மணிக்கணக்காக டீம் மீட்டிங் போட்டுப் பேசி விட்டு, பிறகு களத்தில் இறங்கி மீண்டும் ஆட்டத்தை நிறுத்தி விட்டு விவாதிக்கின்றனர், இவையெல்லாம் எதிரணியினரின் உத்வேகத்தை முட்டுக்கட்டைப் போடும் செயல்.

இவ்வாறு கைஃப் மிக நியாயமான கோபங்களை வெளிப்படுத்தியுள்ளார். கவனிக்குமா ஐபிஎல் நிர்வாகம், சன் ரைசர்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நீங்கலாக மற்ற அணிகள் எல்லாம் அழுகுணி ஆட்டம் ஆடுகின்றன, தெரு கிரிக்கெட் போல் ஐபிஎல் நடந்து கொண்டிருக்கிறது என்றே கிரிக்கெட்டை நேசிக்கும் பலரும் கருதுகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close